விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறியது அகாலிதளம்

அகாலிதளம் கட்சியினர்

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசு கொண்டுவந்த விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பா.ஜனதா கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறியுள்ளது.

விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்பது நாட்களுக்கு முன்பு அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார் அகாலிதளத்தை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர்.

அகாலிதளத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று சண்டிகரில் நடந்தது. இதில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவது என முடிவு செய்யப்பட்டது.

அகாலிதளத்தின் தலைவர் சுக்பிர் பதால், அக்டோபர் ஒன்றாம் தேதி பெரிய விவசாயிகள் பேரணி ஒன்றை அகாலிதளம் நடத்தும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விலகல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுக்பிர் பதால், கட்சி சார்பாக இந்த முடிவு ஒரு மனதாக எடுக்கப்பட்டது என தெரிவித்தார்.

இந்த சட்டங்களில் விவசாயிகளின் நலன்களுக்கேற்ப மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என ஒரு மத்திய அமைச்சராக ஹர்சிம்ரத் கவுர் பலமுறை கேட்டுக் கொண்டபோதும் மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சுக்பிர் பதால்

பட மூலாதாரம், SUKHBIR BADAL

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீண்டகாலம் அங்கம் வகித்து வந்த முக்கிய கட்சிகளில் ஒன்று அகாலிதளம்.

இந்த விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங், அவர்களுக்கு கூட்டணியைவிட்டு விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளார்.

வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாமல் தேர்வு கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என அக்கட்சி கேட்டுக்கொண்டது.

ஆனால் இதை நிராகரித்த மத்திய அரசு, இந்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: