டெல்லி கலவர வழக்கு: ஜேஎன்யு முன்னாள் மாணவர் உமர் காலித்துக்கு 10 நாள் போலீஸ் காவல்

உமர் காலித்

பட மூலாதாரம், Getty images

படக்குறிப்பு, உமர் காலித்

டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கலவரத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் அவரை ஞாயிற்றுக்கிழமை 11 மணி நேர விசாரணை முடிவில் டெல்லி காவல்துறை கைது செய்தது.

மேலும், கலவரத்தின் “முக்கிய சதியில் ஈடுபட்டவர்” என உமர் காலித்துக்கு எதிராக டெல்லி காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த வழக்கில் உமர் காலித்துடன் சேர்த்து பல முக்கிய செயல்பாட்டாளர்கள் மற்றும் மாணவர் தலைவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில், பல செயல்பாட்டாளர்களில் குறிப்பாக முஸ்லிம்கள், நியாயமற்ற முறையில் இலக்கு வைக்கப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால் அதை காவல்துறை மறுத்துள்ளது.

காலித் தரப்பிலிருந்து இது குறித்து எந்த அறிக்கையும் இதுவரை வெளிவரவில்லை.

முன்னதாக, விசாரணைக்காக ஞாயிற்றுக்கிழமை மாலையில் அவரை டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், அவர் கைது செய்யப்பட்டாத திங்கள்கிழமை அதிகாலையில் காவல்துறையினர் அறிவித்தனர்.

இந்த கலவர வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் தாஹிர் ஹுசேனுக்கு எதிராக டெல்லி காவல்துறையினர் ஏற்கெனவே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். அதில், கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி உமர் காலித், காலித் சைஃபி ஆகியோரை தாஹிர் ஹுசேன் சந்தித்ததாகவும் அவர்கள் சிஏஏ போராட்டம் நடந்த ஷாஹீன் பாக்கில் சந்தித்தபோது அவரிடம் மிகப்பெரிய கலவரத்துக்கு தயாராகுமாறு உமர் பேசியதாக டெல்லி காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லியில் பிப்ரவரி மாதம் சிஏஏவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் எழுச்சி பெற்று பிறகு கலவரமாக மாறியது. மூன்று நாட்களாக நீடித்த வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சமீபத்தில் அம்னெஸ்டி மனித உரிமை அமைப்பு, கலவரத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் இலக்கு வைக்கப்பட்டதாக தெரிவித்து ஒரு விசாரணை அறிக்கையை வெளியிட்டது.

பல ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள், காலித்தின் கைதை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

”இந்த விசாரணை, வன்முறை குறித்து அல்ல. நாடு முழுவதும் நடைபெற்ற சிஏஏ சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் அமைதியான, வன்முறையற்ற, ஜனநாயக வழியில் அரசியலமைப்புக்கு ஆதரவாக எழுப்பப்பட்ட ஆயிரம் குரல்களில் காலித்தின் குரலும் ஒன்று.” என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

காலித் உறுப்பினராக உள்ள ’யுனைடெட் அகெயின்ஸ்ட் ஹேட்’ என்ற அமைப்பு, காலித்தின் பாதுகாப்பை டெல்லி காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

உமர் காலித் 2016ஆம் ஆண்டு, கன்ஹையா குமாருடன் சேர்ந்து “இந்திய எதிர்ப்பு” கோஷங்களை எழுப்பியதாக ”தேச துரோக” குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இருவரும் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தனர் பின் பிணையில் வெளிவந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: