You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவுக்குள் ஊடுருவிய இலங்கை காவலர் - சுற்றிவளைத்தது தமிழக காவல்துறை
இலங்கையில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக கூறப்படும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு காவலர் ஒருவர் தனுஷ்கோடி அருகே தமிழக கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக தமிழகத்திற்குள் சட்டவிரோத ஊடுருவல் நடைபெற்றதாக ராமேஸ்வரத்தில் உள்ள மாநில கடலோர காவல் குழம ஆய்வாளர் கனகராஜுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து காவல்துறையினர் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் சனிக்கிழமை அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .
அப்போது தனுஷ்கோடி அருகே கம்பிபாடு என்ற இடத்தில் தனியாக நின்று கொண்டிருந்தவரிடம் போலீசார் விசாரணை செய்த போது அவர் சிங்கள மொழியில் பேசினார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை ராமேஸ்வரம் கடலோர காவல் குழும காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிடிப்பட்டவரிடம் நடத்திய விசாரணை குறித்து ராமேஸ்வரம் தமிழக கடலோர காவல் குழும ஆய்வாளர் கனகராஜ் பிபிசி தமிழிடம் கூறுகையில், இன்று அதிகாலை தனுஷ்கோடி கம்பிபாடு அருகே சட்டவிரோதமாக தமிழகத்துக்குள் நுழைந்ததாக கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில், அவர் இலங்கை மொனராகலை பகுதியைச் சேர்ந்த பிரதீப் குமார் பண்டார என்பது தெரிய வந்துள்ளது. இவர் கொழும்பு குற்ற தடுப்பு பிரிவில் காவலராக பணியற்றி வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பு புறநகர் பகுதியான சபுகஸ்கந்த பகுதியிலுள்ள மர கடையிலிருந்து 23 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் மர கடையின் உரிமையாளர் மற்றும் ஹெரோயின் விற்பனையாளர் என இருவர் இலங்கை போலீசாரால் கைது செய்யபட்டனர்.
அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த ஹெரோயின் மூட்டையில் அச்சிடப்பட்டிருந்த முத்திரையும், தமிழகத்தில் உயிரிழந்த இலங்கை நிழலுலக தாதா அங்கொட லொக்காவின் போதைப்பொருள் மூட்டைகளில் உள்ள முத்திரையும் ஒன்றாக இருந்ததால் இலங்கை போலீசார் வீசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு காவலராக பணியாற்றி வரும் பிரதீப் குமார் பண்டாரா தனது சகோதரர் மூலம் மர கடையின் உரிமையாளருக்கு ஹெரோயின் போதைப்பொருளை விநியோகித்தது இலங்கை போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததையடுத்தது.
பிரதீப் குமார் பண்டாரா இந்த வழக்கில் இருந்து தன்னை காப்பற்றி கொள்ள மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக பைபர் படகு ஒன்றில் தமிழகம் தப்பி வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது,” என ஆய்வாளர் கனகராஜ் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய ஆய்வாளர், இது சம்பந்தமாக மண்டபம் கடலோர காவல் குழும காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யபட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பின் பிரதீப் குமார் பண்டாரா ராமேஸ்வரம் நடுவர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைக்கபடுவார் என தெரிவித்தார்.
இந்நிலையில், அண்மைக்காலமாக தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா போதைப்பொருட்களும், இலங்கையில் இருந்து தமிழகத்துக்குள் தங்க கட்டிகளும் கடத்தப்பட்டு வருவதால் பிடிபட்டுள்ள பிரதீப் குமார் பண்டாரா இலங்கையில் இருந்து தனுஸ்கோடி வந்த போது போதைப்பொருள் அல்லது கடத்தல் தங்கம் ஏதேனும் கொண்டு வந்தாரா என்ற கோணத்தில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
- PUBG செயலிக்கு பதிலாக களத்தில் குதிக்கும் அக்ஷய் குமாரின் FAU- G இதன் சிறப்பு என்ன?
- அனுசுயா சாராபாய்: இந்திய தொழிலாளர் இயக்கத்தின் முன்னோடியாக இருந்த 'பெரிய அக்கா'
- ஆறாவது பேரழிவு யுகத்தில் நுழைகிறோம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை
- வடகொரியாவில் ஒரே வாரத்தில் 2 சூறாவளி: ”பொறுப்பற்று செயல்பட்ட” அதிகாரிகளுக்கு கடும் தண்டனை
- கீழடியில் ஊற்றெடுக்கும் தமிழர் வரலாறு - இதுவரை கிடைத்தவை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: