You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
PUBG செயலிக்கு பதிலாக களத்தில் குதிக்கும் அக்ஷய் குமாரின் FAU- G இதன் சிறப்பு என்ன?
'பப்ஜி' போன்ற' ஒரு மொபைல் விளையாட்டை சந்தைக்கு கொண்டு வருவதாக ஒரு இந்திய நிறுவனம், நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து அறிவித்துள்ளது. பிரபல மொபைல் விளையாட்டு செயலியான 'பப்ஜி 'க்கு தடை விதிக்கப்படுள்ளதால் சந்தையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதே, இதன் நோக்கமாகும்.
பெங்களூருவைச் சேர்ந்த , என் கோர் கேம்ஸ் என்ற நிறுவனம் இந்த மொபைல் விளையாட்டை தயாரித்துள்ளது, இது நேரடியாக 'பப்ஜி' இன் போட்டியாளராக கருதப்படுகிறது.
அக்டோபர் இறுதிக்குள் சந்தையில் வர இருக்கும் இந்த விளையாட்டுக்கு 'ஃபவ்ஜி' (FAU: G) என்று இந்த நிறுவனம் பெயரிட்டுள்ளது.
"ஃபியர்லஸ் ஆண்ட் யுனைடெட் கார்ட்ஸ்" என்பது இந்த விளையாட்டின் முழுப்பெயர். இந்த விளையாட்டை உருவாக்குவது தொடர்பாக பல மாதங்களாக பணிகள் நடந்துவருகின்றன. இந்த விளையாட்டின் முதல் கட்டத்தை, கல்வான் பள்ளத்தாக்கை அடிப்படையாகக் கொண்டு அமைத்துள்ளோம்," என்று இந்த நிறுவனத்தின் இணை நிறுவகர் விஷால் கோண்டல் செய்தி முகமையான ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
கல்வான் பள்ளத்தாக்கில்தான் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான முதல் மோதல் ஜூன் மாதம் நடந்தது. அதில் குறைந்தது 20 இந்திய வீரர்கள் இறந்தனர். அப்போதிலிருந்து, மெய்யான கட்டுபாட்டு கோடு தொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவிவருகிறது.
இந்த தாவாவுக்கு மத்தியில், பிரபல கேமிங் செயலியான PUBG உட்பட சீன நிறுவனங்கள் தயாரித்த 118 மொபைல் செயலிகளை , இந்திய அரசு புதன்கிழமை தடை செய்தது.
பப்ஜி அதாவது பிளேயர் அன்நோன்ஸ் பாட்டில் கிரவுண்ட், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மிகவும் பிரபலமான மொபைல் கேமாக இருந்துவருகிறது. . இந்த விளையாட்டை இளைஞர்கள் மிகவும் ரசிக்கின்றனர். மேலும் இதன் தடை பற்றிய அறிவிப்பு குறித்து அவர்கள், சமூக ஊடகங்களில் கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர்.
FAU: G மூலம், இந்திய நிறுவனமான என்-கோர் கேம்ஸ் , மக்களின் தேசபக்தி உணர்வை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த முயற்சிப்பதாக விமர்சகர்கள் நம்புகின்றனர்.
"இந்த மொபைல் விளையாட்டிலிருந்து கிடைக்கும் மொத்த வருவாயில் 20 சதவீதம் , இந்தியாவுக்காக இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும்" என்றும் நிறுவனத்தின் இணை நிறுவனர் விஷால் கோண்டல் அறிவித்துள்ளார்.
இந்தப்பணியில், நடிகர் அக்ஷய் குமார் நிறுவனத்தை ஆதரிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'FAU: G என்றால் ' இராணுவம்'. விளையாட்டுக்காக இந்தப்பெயர் ,அக்ஷய் குமாரால் பரிந்துரைக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அக்ஷய் குமாரும் வெள்ளிக்கிழமை இது குறித்து ட்வீட் செய்து தகவல் கொடுத்தார்.
"பிரதமர் நரேந்திர மோதியின் தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தை ஆதரிக்கும் விதமாக, பியர்லஸ் ஆண்ட் யுனைடெட்- கார்ட்ஸ் FAU-G, என்ற அதிரடி விளையாட்டை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன். இந்த விளையாட்டை விளையாடுபவர்கள், பொழுதுபோக்கோடு கூடவே நமது வீரர்களின் தியாகங்களையும் தெரிந்துகொள்வார்கள். இந்த விளையாட்டின் 20% நிகர வருவாய், 'பாரத் கே வீர்' அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படும். " என்று அவர் எழுதியுள்ளார்.
விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களில், சுமார் 20 கோடி மொபைல் பயன்பாட்டாளர்கள் இந்த விளையாட்டை பதிவிறக்குவார்கள் என்று நிறுவனம் நம்புகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: