You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனா முயற்சிகளைத் தடுக்க எல்லையில் வைத்த கண்காணிப்பு கேமரா உதவியது
சில முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தி ஹிந்து - எல்லையில் கண்காணிப்பு கேமரா
இந்திய சீன எல்லையில் அமைந்துள்ள பாங்கோங் த்சோ ஏரியின் தெற்கு கரையோரம் நிறுவப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா சீனப் படையினரின் முயற்சிகளைத் தடுக்க உதவியதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தி இந்து நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் அப்பகுதியில் இருந்த நிலையை மாற்ற சீன படையினர் முயற்சித்ததாகவும் அதை இந்தியப் படையினர் முறியடித்ததாகவும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.
இந்தியாவிடம் சக்திவாய்ந்த கண்காணிப்பு சாதனங்கள் இருந்ததால் சீனாவின் படை திரட்டல் மற்றும் சீன படைகளின் நடமாட்டம் ஆகியவை கண்டறியப்பட்டன என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - இலங்கை வந்த ரஷ்ய போர் கப்பல்கள்
இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் வந்தது ஏன் என்பதை பிடிஐ செய்தி முகமையை மேற்கோள்காட்டி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாக வெளியிட்டுள்ளது.
ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான 'அட்மிரல் ட்ரிபுக்' மற்றும் 'அட்மிரல் வினோக்ராடோவ்' ஆகிய நீர்மூழ்கி கப்பலை எதிர்த்துத் தாக்கும் கப்பல்கள் மற்றும் 'போரிஸ் புடோமா' என்னும் எரிபொருள் கப்பல் ஒன்றும் இலங்கையின் தெற்குப்பகுதியில் உள்ள இந்த துறைமுகத்திற்கு திங்களன்று வந்தன.
கப்பல் ஊழியர்கள் ஓய்வெடுப்பதற்காகவும் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காகவும் இந்த கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகம் வந்துள்ளதாக இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு வழிமுறைகள் அமலில் உள்ளதால் கப்பல் ஊழியர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நாளை, செப்டம்பர் 3ஆம் தேதி, இந்தக் கப்பல்கள் துறைமுகத்தில் இருந்து கிளம்பும் என்றும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
தினத்தந்தி - தமிழகத்தில் செமெஸ்டர் தேர்வுகள் எப்போது?
கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு 15-ந்தேதிக்கு பிறகு இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார் என தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.
தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் படித்து வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகள் ஆகியோருக்கான இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15-ந்தேதிக்கு பிறகு நடத்தப்பட உள்ளது.
இதற்கான விரிவான தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் விரைவில் வெளியிடப்படும். இறுதி ஆண்டு தேர்வுகள் மாணவர்கள் நேரில் வந்து எழுதக்கூடிய தேர்வாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் அறிவித்துள்ளார் என்கிறது அந்தச் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: