அங்கொட லொக்கா வழக்கு: முகத்தில் அறுவை சிகிச்சை, உரிமம் இல்லாத துப்பாக்கி - தீவிரமடையும் சிபிசிஐடி விசாரணை

இலங்கையைச் சேர்ந்த குற்றவாளி அங்கொட லொக்கா கோவையில் தலைமறைவாக இருந்தபோது தனது முகத்தில் அறுவை சிகிச்சை செய்துள்ளதும், உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருந்ததும் சிபிசிஐடி விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த அங்கொட லொக்கா, தமிழகத்தில் உள்ள கோவை நகரில் மர்மமான முறையில் கடந்த மாதம் உயிரிழந்தார்.
இவ்வழக்கில் சிவகாமி சுந்தரி, அம்மானி தான்ஜி, தியானேஸ்வரன் ஆகியோர் ஆகஸ்ட் 2ஆம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்குப் உட்படுத்தப்பட்டனர். மேலும், அங்கொட லொக்கா மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக கைது செய்யப்பட்ட மூவரையும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர். இதில் அங்கொட லொக்கா மரணம் குறித்த பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போலி ஆதார் அட்டை
சிவகாமி சுந்தரி, அம்மானி தான்ஜி மற்றும் தியானேஸ்வரன் ஆகிய மூவரும் சரியான ஆவணங்கள் இல்லாமல் இலங்கையைச் சேர்ந்த மதுமகே லசந்த சந்தன பெரேரா என்கிற அங்கொட லொக்கா என்பவரை மதுரையிலும் கோவையிலும் தங்க வைக்க போலியான ஆவணங்களை பயன்படுத்தி அங்கொட லொக்காவின் பெயரை பிரதீப் சிங் என்று மாற்றி, ஆதார் கார்டு தயார் செய்துள்ளது சிபிசிஐடி விசாரணையில் உறுதியாகியுள்ளது.
மேலும், போலி ஆதார் அட்டையை அரசு அலுவலகங்களிலும், வீடு வாடகைக்கு எடுக்கவும் அவர்கள் பயன்படுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.
முகத்தில் அறுவை சிகிச்சை
கோவையில் அங்கொட லொக்கா தலைமறைவாக இருந்தபோது, முகத்தின் அடையாளங்களை மாற்றுவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி எனும் அறுவை சிகிச்சையை செய்துள்ளார்.
பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரின் முகத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் அங்கொட லொக்காவின் மூக்குப் பகுதி முற்றிலுமாக மாற்றப்பட்டு, முகத்தின் அடையாளங்கள் மறைக்கப்பட்டது சிபிசிஐடி விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
உரிமம் இல்லாத துப்பாக்கி

பட மூலாதாரம், Getty Images
கோவையில் இறந்த நபர் குற்றவாளி என்பதற்கான ஆதாரமாக அவர் தங்கியிருந்த வீட்டில் உரிமம் இல்லாத பிஸ்டல் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 5 ஆம் தேதி அங்கொட லொக்காவின் பிரேதத்தை மதுரைக்கு எடுத்துச் செல்லும்போது, பிஸ்டல் துப்பாக்கியை எடுத்துச் சென்று மதுரையிலிருந்த அங்கொட லொக்காவின் கூட்டாளி ஒருவரிடம் கொடுத்துள்ள தகவலை கைது செய்யப்பட்டவர்கள் இந்த விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
எனவே, இவ்வழக்கில் பல்வேறு சட்டப் பிரிவுககளின் கீழ் குற்றம் புரிந்துள்ளதற்கான ஆரம்பக்கட்ட முகாந்திரங்கள் இருப்பதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் மதுரைக்கு கூட்டிச்சென்று புலன் விசாரணை செய்ய போதிய கால அவகாசம் இல்லாததால், மேலும் 10 நாட்கள் போலீஸ் காவல் வேண்டி கோயம்புத்தூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், புலன் விசாரணை அதிகாரி சார்பில் வேண்டுகோள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு புலன் விசாரணை தொடரும் எனவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












