அயோத்தி விவகாரம்: "காங்கிரஸ் குழம்பவில்லை, உடந்தையாக உள்ளது" - ஒவைஸி முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சல்மான் ரவி
- பதவி, பிபிசி செய்தியாளர்
"நாடு சுதந்திரம் அடைந்த காலம் முதல் காங்கிரஸ் கட்சி இந்துத்துவா சக்திகளுடன் உடந்தையாக இருந்து வந்துள்ளது" என்று அகில இந்திய மஜ்லிஸ் - இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவரும், ஹைதராபாத் தொகுதி மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார்.
பிபிசிக்கு தொலைபேசி மூலம் ஒவஸி நேர்காணல் அளித்தார். அப்போது ஒவைசி, ராம் ஜென்மபூமி - பாபர் மசூதி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்த குழப்பத்தில் நீடிப்பதாக பத்திரிகையாளர்களும், ஆய்வாளர்களும் கூறி வந்தாலும், உண்மையில் அந்த கட்சி, அந்த பிரச்னையில் சிறுபான்மையினரை தொடர்ந்து குழப்பி வந்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், மென்மையான இந்துத்துவா கொள்கையை ஊக்குவித்து வந்ததாகவும், அந்த சக்திகளுடன் உடந்தையாக இருந்தது என்றும் நான் குற்றம்சாட்டுகிறேன் என்றும் ஒவைஸி கூறினார்.
சர்ச்சைக்குரிய பகுதியின் பூட்டை உடைத்தது முதல் மசூதியை இடித்தது வரை, எது நடந்ததா அந்த ஒட்டுமொத்த சர்ச்சையிலும் குறிப்பாக அப்போது பிரதமர் பதவியை வகித்த ராஜிவ் காந்தி, நரசிம்ம ராவ் ஆகியோரின் பங்களிப்பு குறித்து சுட்டிக்காட்டிய ஒவைஸி, "காங்கிரஸின் மூளையில் உதயமான திட்டமே அது" என்று தெரிவித்தார்.
மேலும் அவர், "காங்கிரஸ் மட்டுமல்ல, பிராந்திய கட்சிகள் மற்றும் இன்று வெளிப்படையாக பேசும் அந்த கட்சிகளின் தலைவர்கள் காத்து வந்த மெளனம் இன்று அனைவரையும் பாதிப்பதாக குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
ஆதாயத்துக்காக முஸ்லிம்களை பயன்படுத்திய கட்சிகள்
தனக்கு வரும் மின்னஞ்சல்கள், தகவல்கள் போன்றவற்றில் இந்துக்கள் கூட தாங்கள் தனிமையில் இருப்பதை உணருவதாக கூறியுள்ளனர் என்றும் கோரிய ஒவைஸி, மதசார்பற்ற நிலையை அடித்தளமாக முன்பு கொண்டிருந்த கட்சிகள் கூட அரசியல் ஆதாயங்களுக்காக இஸ்லாமியர்களை பகைத்துக் கொண்டதாக தெரிவித்தார்.
"மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் பிரதமர் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் இருந்து அவர்களின் பேச்சை ஒரு மாவட்ட ஆட்சியர் கேட்கவில்லை என்பதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?" என்றும் ஒவைஸி கேள்வி எழுப்பினார்.
அயோத்தியாவில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற வரலாற்றுப்பூர்வ ஆலயம் கட்டுவதற்கான பூமி பூஜை, ஆண்டுக்கணக்கில் ஹிந்து ராஷ்டிர கொள்கையை பரப்ப முயன்ற சங்க பரிவார் அமைப்புகளின் முறைப்படியான அடித்தளமே என்றும் ஒவைஸி குற்றம்சாட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
அந்த நிகழ்ச்சியில் சமூகங்களுக்கு இடையிலான நல்லெண்ணம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோதி பேசியதை நினைவுகூர்ந்த ஒவைஸி, அநீதி மற்றும் சமத்துவமின்மை மூலம் நல்லெண்ணத்தையும் சகோதரத்துவத்தையும் எட்ட முடியாது என்று கூறினார்.
அந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் பேசியது, பெரும்பான்மைவாதத்தை திணிக்க அரசு முற்படுவதை தெளிவாக்கியதாகவும், மக்களிடையே அமைதியை பேணுவதற்கான வழி அதுவாக நிச்சயம் இருக்காது என்று தெரிவித்தார்.
பிரதமரின் தவறான முன்னுதாரணம்
"ஒரு மத நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பது, அவர் சார்ந்த மதம், அவரது சித்தாந்தம் ஆகியவைதான் இந்தியாவின் சித்தாந்தம் மற்றும் மதம் என்ற ஒரு தெளிவான செய்தியை உணர்த்துகிறது" என்றும் ஒவைஸி அயோத்தி நிகழ்வை விவரித்தார்.
மேலும் அவர், "நாட்டின் பிரதமர் என்பவர், இந்தியாவில் வாழும் ஒவ்வொரு சமூகத்துக்கும் பிரதமராகவும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும் செயல்பட்டு கடமையாற்றுவேன் என்றே பதவிப்பிரமாணம் ஏற்கிறார். அந்த வகையில் இந்திய அரசுக்கு எவ்வித மதமும் இல்லை" என்று விளக்கினார்.
ஆனால், தற்போது அத்தகைய ஒரு மதம் மட்டுமே நாட்டில் உள்ளது போன்ற நிலையை நோக்கி நாடு சென்று வருவதாகவும், சட்டத்துக்கு எதிராக செயல்பட்டதாக கண்டறியப்பட்டு குற்றம்சாட்டப்பட்டவர்களே தற்போது போற்றப்படும் செயல்பாடு, சட்டத்தின் ஆட்சி, அதன் நம்பகத்தன்மையை இழந்து விட்டதையே காட்டுகிறது என்று ஒவைஸி தெரிவித்தார்.

பட மூலாதாரம், ANI
ஆகஸ்ட் 5-ஆம் தேதியை புதிய சுதந்திர தினமாக அழைக்க முற்பட்ட செயல், உண்மையான சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதியை அவமதிப்பது மட்டுமின்றி, நாட்டின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த மற்றும் போராடிய சுதந்திர போராட்ட வீரர்களையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாக ஒவைஸி குறிப்பிட்டார்.
"இந்த நடவடிக்கை 'மகாத்மா காந்தி, பீம்ராவ் அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் தியாகங்களையும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது" என்று ஓவைசி கூறுகிறார்.
அயோத்தி நிகழ்ச்சியில் தான் உணர்ச்சிவசப்படுவதாக பிரதமர் நரேந்திர மோதி பேசியது பற்றி கருத்து வெளியிட்ட ஒவைஸி, அவரைப்போலவே தான் மட்டுமின்றி பிற மதப்பற்றாளர்களும் உணர்ச்சிவசப்பட்டிருப்பதாக கூறினார்.
உணர்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளோம்
"உணர்ச்சிவசப்படுதல் என்பது, ஒரு மசூதியில் 450 ஆண்டுகளாக நாங்கள் தொழுகையில் ஈடுபட்டிருப்போம். சுதந்திரம், சகோதரத்துவம், நீதி மற்றும் அமைதியான இணக்கம் ஆகியவை தற்போது ஆபத்தில் உள்ளது என்பதால் நாங்களெல்லாம் உணர்ச்சிவசப்படுகிறோம்" என்று ஒவைஸி தெரிவித்தார்.
அயோத்தியில் பூமி பூஜை மற்றும் அஸ்திவார விழா ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் பல நூற்றாண்டுகளாக ஏராளமான கல்லறைகள் இருந்தன என்பதால் தங்களைப் போன்றவர்களுக்கு அந்த நிகழ்ச்சி உணர்ச்சிப்பூர்வ பிரச்னை என்று ஒவைஸி கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
அயோத்தி நிகழ்ச்சிக்குப் பிறகு, இந்துத்துவ சக்திகள் இப்போது காசி, மதுரா மற்றும் பிற இடங்களில் உள்ள மத இடங்களுக்குப் பின் செல்லும் என்ற அச்சத்தை வெளிப்படுத்திய அவர், இனி இஸ்லாமியர்களுக்கு அவர்களின் மத வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற உறுதிமொழியை அரசால் வழங்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
"மத இடங்களைப் பாதுகாக்க 1991-இல் ஒரு சட்டம் இயற்றப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால், அவற்றை கையகப்படுத்துவதற்கு அரசாங்கம் இப்போது நாடாளுமன்றத்தில் மற்றொரு சட்டத்தைக் கொண்டு வந்தால் என்னாவது?" என்று அவர் மேலும் ஒரு கேள்வியை எழுப்புகிறார்.
பிராந்திய கட்சிகளின் பங்கை விவரித்த ஒவைசி, ஒருபுறம் காங்கிரஸ் மென்மையான இந்துத்துவாவுடன் தொடர்ந்தாலும், மறுபுறம் முஸ்லிம்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்த முயல்வதன் மூலம் அவர்கள் தங்களிடம் வந்து தஞ்சம் அடைவார்கள் என காங்கிரஸ் கருதியது என்று கூறினார்.
தங்களை வளர்த்துக் கொண்ட தலைவர்கள்
"மற்ற பிராந்திய கட்சிகளும் அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டன, சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த முலாயம் சிங் யாதவ், தன்னை "மெளலானா முலாயம்" போல காட்டிக் கொள்ள முயன்றார், அதே நேரத்தில் லாலுபிரசாத் யாதவ் தன்னை மெளலானா லாலு போல காண்பித்துக் கொண்டனர். சிறுபான்மையினர், பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் உண்மையான மீட்பர்கள் போன்ற தவறான கதையை அவர்கள் அமைத்தனர். இந்த பிராந்திய கட்சிகள், நாட்டில் அரசியலின் அழிவுக்கு வழிவகுத்தன. சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரை பாதுகாப்பதாகக் கூறி அரசியலில் தங்களின் இருப்பையும் அதிகாரத்திலும் தங்களை அவர்கள் வலுப்படுத்திக் கொண்டார்கள்" என்று ஒவைஸி சாடினார்.
இந்து மதத்தை பின்பற்றுவோர் கூட, இதுபோன்ற சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களின் செயல்பாடுகளால் சோர்வடைந்து விட்டதாகவும் ஒவைஸி கூறினார். எதிர்காலம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தப்பட்டு பிறகு எதுவும் கிடைக்காமல் போன முஸ்லிம்கள் உட்பட அனைத்து வகுப்பினரும், வேற்றுமை நிறைந்த இந்திய கலாசாரம் மற்றும் ஜனநாயகத்தில் விடுபட்டுப்போன பழைய ஜனநாயக முறைகளை மீட்டெடுக்க திட்டங்களை வகுப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












