சென்னை அருகில் அம்மோனியம் நைட்ரேட்: உடனடியாக அகற்ற உத்தரவிட்டது மாசு கட்டுப்பாட்டு வாரியம்

பட மூலாதாரம், Getty Images
சென்னைக்கு அருகில் பெருமளவு அம்மோனியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக சுங்கத் துறை தெரிவித்த தகவல்களுக்கும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளிக்கும் தகவல்களுக்கும் இடையில் முரண்பாடுகள் இருக்கின்றன.
கரூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்துவதாகக் கூறி 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை 2015ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. ஆனால், அந்த தனியார் நிறுவனத்திடம் தகுந்த உரிமம் இல்லை என்றுகூறி இறக்குமதி செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை சுங்கத் துறை பறிமுதல் செய்தது.
பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் தற்போது மணலியில் உள்ள சுங்கத் துறையின் வேதிப் பொருட்களுக்கான கிடங்கில் 37 கண்டெய்னர்களில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சுங்கத் துறைக்குச் சாதகமாக தீர்ப்பு வெளிவந்தது.
இதனால், பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. அந்தப் பணிகள் துவங்காத நிலையில், தற்போதும் அம்மோனியம் நைட்ரேட் மணலியில் உள்ள சுங்கத் துறை கிடங்கில்தான் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக சுங்கத் துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும் பொது மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
அம்மோனியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கிடங்கு நகரித்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் இருப்பதாகவும் கிடங்கிலிருந்து 2 கி.மீ. சுற்றளவுக்கு குடியிருப்புப் பகுதிகள் இல்லையென்றும் கூறப்பட்டிருந்தது. விரைவில், இந்த அம்மோனியம் நைட்ரேட் ஏலம் எடுத்தவர்களுக்கு அளிக்கப்பட்டுவிடும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மணலியில் அம்மோனியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சிஎஃப்எஸ் கிடங்கில் சோதனை நடத்தினர்.
அவர்கள் இது தொடர்பாக அளித்த அலுவலக அறிக்கையில், இந்தக் கிடங்கிலிருந்து 700 மீட்டர் தூரத்திலேயே 7,000 பேர் வசிக்கும் குடியிருப்புப் பகுதியான மணலி புது நகர் அமைந்திருப்பதாகவும் ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரத்தில் 5,000 பேர் வசிக்கும் சடையன்குப்பம் கிராமம் அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வோரு கன்டெய்னரிலும் 20 டன் அம்மோனியம் நைட்ரேட் என 37 கன்டெய்னர்களில் 740 டன் அம்மோனியம் அந்தக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
உடனடியாக இந்த அம்மோனியம் நைட்ரேட்டை கிடங்கிலிருந்து வெளியேற்றி அனுப்ப வேண்டிய இடங்களுக்கு அனுப்பும்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. அந்தக் கன்டெய்னர் சேமிப்புக் கிடங்கை நடத்திவரும் நிறுவனம், அம்மோனியம் நைட்ரேட் உள்ள கன்டெய்னர்கள் எவை எனக் குறிப்பிட்டு அவற்றைப் பாதுகாக்க ஆட்களை நியமிக்க வேண்டுமென்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைக்குப் பிறகு, சிஎஃப்எஸ் கிடங்கில் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர்கள் தற்போது ஒரே இடத்தில் வைக்கப்பட்டு வருகின்றன. அவற்றைச் சுற்றி பாதுகாப்புக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
- மலேசியவை அச்சுறுத்தும் ’சிவகங்கை கிளஸ்டர்’: அதிவேக தொற்று பரவியது எப்படி?
- இலங்கை தேர்தல்: அதிக வாக்குகளுடன் தொகுதிகளை கைப்பற்றிய தமிழ் வேட்பாளர்கள்
- கு.க. செல்வம்: திமுகவிடமிருந்து விலகி நிற்பது ஏன்? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
- அயோத்தி ராமர் கோயில் தமிழகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
- 500 வார்த்தைகளில் அயோத்தியின் 500 ஆண்டுகால வரலாறு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












