தனி நபர் கடனை திருப்பி செலுத்த அவகாசம் நீட்டிப்பா? ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?

தங்கம்

பட மூலாதாரம், Getty Images

வங்கிகளில் வேளாண் அல்லாத தேவைக்கு தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறுவோருக்கு ஆபரண தங்கத்தின் 75% மதிப்புக்கு பதிலாக 90% வரை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதிவரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வங்கிகளுக்கான கடன் வட்டி வீதம், எந்த மாற்றமும் இல்லாமல் 4% ஆகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் செலாவணி கொள்கைக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் விளக்கினார்.

ரெப்போ வட்டியில் மாற்றமில்லை

வங்கிகளின் கடனுக்கான வட்டி வீதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று கூறிய அவர், வரும் காலங்களில் நாட்டின் பொருளதார வளர்ச்சியை ஊக்குவிக்க தேவைப்பட்டால் அதில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவாக வளர்ச்சி விகிதம் பாதிக்கப்பட்டிருந்தாலும், பணவீக்கம் மேலும் வீழ்ச்சியடையாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

வங்கிகள் செலுத்தும் பிணைய மதிப்பின் அடிப்படையில் அவற்றுக்கு வழங்கப்படும் கடன் வழங்கல் வட்டி வசதியான எம்எஸ்எஃப் வட்டி விகிதம், எந்த மாற்றமும் இல்லாமல் 4.25% என்ற அளவிலேயே தொடரும் என்று சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.

முன்னதாக, எம்பிசி குழுவின் மதிப்பீட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கடந்த ஏப்ரல் முதல் மே மாத அளவில் நாட்டின் பொருளாதார செயல்பாடு மெதுவாக மீளத்தொடங்கிய வேளையில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு, பல நகரங்களிலும் மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தும் நிலையை உருவாக்கியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

ஆண்டின் முதல் பாதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி குறைவாக இருக்கும் என்றும் ஒட்டுமொத்தமாக, 2020-21 நிதியாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறையாக நீடிக்கும் என்றும் அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, உற்பத்தித் துறையின் குறியீடு கடந்த ஜூலை மாதத்தில் தொடர்ந்து நான்காவது மாதமாக சரிவை சந்தித்து வந்தததும் அந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2-ஆவது காலாண்டில் நம்பிக்கை

இதுமட்டுமின்றி, உள்நாட்டு அளவில் பெட்ரோலிய பொருட்களின் தேவை குறைந்தது, உணவுப்பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது போன்ற காரணங்களால் பணவீக்கமும் அதிகரித்ததுடன், இரண்டாவது காலாண்டில் பணவீக்கம் உயர்ந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 2-வது பாதியில் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும்.

கொரோனா அன்றாட பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதால், உலக அளவில் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றமான சூழல் இல்லை என்றும், கரீப் பருவத்தில் அறுவடை மூலம் கிராமப்புற பொருளாதாம் மீளும் என எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

சக்திகாந்த தாஸ்

பட மூலாதாரம், Getty Images

வேளாண் அல்லாத தேவைகளுக்காக தங்க ஆபரணங்கள் அல்லது நகைகள் மீதான அடமான கடன்களுக்கு வங்கிகள் அளிக்கும் ஒப்புதல், அந்த நகை அல்லது ஆபரணத்தின் மதிப்பில் 75% அளவை தாண்டக்கூடாது என்றும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு கூறுகிறது. அந்த உச்சவரம்பை , கொரோனா பரவல் தாக்கத்தை கருத்தில் கொண்டு வரும் 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம்வரை 90% சதவீத அளவு ஆபரண மதிப்பு வரை கடன் வழங்கலாம் என்ற சலுகையை ரிசர்வ் வங்கி செலாவணி கொள்கைக்குழு வழங்கலாம் என கூறியுள்ளது.

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிடம் இருந்து தனி நபர்கள், அலுவலகங்கள் பெற்ற கடன் தவணையை செலுத்தாமல் இருக்க, வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிவரை சலுகை வழங்கி ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியிருந்தது.

அந்த காலக்கெடு இந்த மாத இறுதியில் முடிவுக்கு வருவதால், அது தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடன் தவணை காலநீட்டிப்பு தொடர்பாக எந்த அறிவிப்பையும் சக்திகாந்த தாஸ் வெளியிடாதது கடன் வாங்கியவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கருதப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: