துப்பாக்கி சூடு சம்பவம்: திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு நிபந்தனை ஜாமீன்

பட மூலாதாரம், Getty Images
நில தகராறின்போது ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினரான இதயவர்மனுக்கும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இமயம்குமார் என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சனை நீடித்து வந்தது.
அந்த பிரச்சினையில் கடந்த ஜூலை 11ஆம் தேதியன்று இமயம்குமார் தரப்பினர் இதயவர்மனின் தந்தை லட்சுமிபதியை அரிவாளால் வெட்டிதாகவும் பதிலுக்கு இதயவர்மன், லட்சுமிபதி ஆகியோர் தங்களது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் கீரை வியாபாரியான சீனிவாசன் காயமடைந்தார். அரிவாள் வெட்டில் லட்சுமிபதி, குருநாதன் ஆகியோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் இதயவர்மன் உட்பட இருதரப்பிலும் பலர் கைது செய்யப்பட்டனர். இதயவர்மன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் துப்பாக்கியும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே இதயவர்மன் உள்ளிட்டவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது.
இதையடுத்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில், சம்பவம் நடந்த போது தாங்கள் அங்கு இல்லை எனவும், அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உரிமம் காலவதியான துப்பாக்கியை பயன்படுத்தி இதயவர்மன் சுட்டதாகவும் அவருக்கு சொந்தமான இடத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இதயவர்மன் தோட்டாக்களை தயார் செய்தாரா என்பது குறித்தும் அவருக்கு தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தற்போது விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதற்கு பிறகு இது தொடர்பான விசாரணை ஆவணங்களையும் துப்பாக்கி சூட்டில் காயமடைந்தோரின் மருத்துவ அறிக்கைகளையும் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள், மருத்துவமனையிலிருந்து திரும்பியிருப்பதால் இதயவர்மனுக்கும் அவருடன் கைது செய்யப்பட்ட 10 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
சென்னையிலுள்ள அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு 3 லட்ச ரூபாய் நிதியை நன்கொடையாக அளிக்கும்படி இதயவர்மனுக்கு நீதிபதி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 10,000 ரூபாய் பிணைத்தொகை செலுத்தும்படியும் உத்தரவிடப்பட்டது.
மறு உத்தரவு வரும்வரை இதயவர்மன் வேலூரில் உள்ள காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டுமென்றும் மற்றவர்கள் செங்கல்பட்டில் உள்ள காவல்நிலையத்தில் கையெழுத்திடும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை : “அனைத்தும் ராமருக்கு உரியது, ராமர் அனைவருக்கும் உரியவர்”
- ராமர் கோயில் விழா: ஸ்பெயினில் இந்தியர்கள் கொண்டாடினார்கள் என்பது உண்மையா?
- நேரு முதல் நரேந்திர மோதி வரை: மதச்சார்பின்மை முதல் பிரதமர்களின் மத ஊர்வலங்கள் வரை
- பா.ஜ.க தலைவரை சந்தித்த திமுக எம்எல்ஏ கு.க. செல்வத்தின் பதவிகள் பறிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












