UPSC mains result: பண்ருட்டி வட்டத்தை சேர்ந்த 3 பெண்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி

கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற யூபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக இளைஞர் கணேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூர் கிராமத்தை சேர்ந்த முந்திரி விவசாயி ராமநாதன் மகள் ஐஸ்வர்யா தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும், அகில இந்திய அளவில் 47வது இடத்தையும் பெற்றுள்ளார். மேலும், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பண்டரகோட்டை கிராமத்தை சேர்ந்த சிவபிரகாசம் என்பவரது மகள் பிரியங்கா தமிழக அளவில் மூன்றாவது இடத்தையும், அகில இந்திய அளவில் 68வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தமிழக அளவில் யூபிஎஸ்சி தேர்வில் இரண்டாவது இடம் பெற்ற ஐஸ்வர்யாவின் தந்தை ராமநாதன் முந்திரி விவசாயியாக இருக்கிறார். ஐஸ்வர்யா, கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்த பிறகு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டுமான துறையில் பொறியியல் படிப்பை 2017ஆம் ஆண்டு முடித்தார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

அதையடுத்து ஓராண்டு சிவில் சர்வீசஸ் தேர்விற்குப் பயிற்சி எடுத்துக்கொண்டு, 2018ஆம் யூபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 630வது இடத்தை பெற்று, ஐஆர்எஸ் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். தற்போது, தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் அதற்கான பயிற்சியில் இருக்கிறார். இதற்கிடையில் இரண்டாவது முறையாக சிவில் சர்வீஸ் தேர்வெழுதியதில், அகில இந்திய அளவில் 47வது இடத்தையும், தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து ஐஸ்வர்யா, பிபிசி செய்தி தமிழுக்குக் கூறியதாவது, "எனக்கு சிறிய வயதிலிருந்தே இந்த குறிக்கோள் இருந்தது. 2004ஆம் ஆண்டு சுனாமி வந்தபோது, கடலூர் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது, கடலூர் மாவட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த 'ககன்தீப் சிங் பேடி' பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மிகவும் துடிப்போடு செய்துவந்தார். மேலும், மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் அவர் ஒரு முன்னோடியாக இருந்தார். இதனால், அவர்போலவே நானும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என்று எனக்கு தோன்றியது," என்கிறார் அவர்.
எனது தாயார் இளவரசி அதற்காக ஊக்கப்படுத்தி எனது முயற்சிகள் அனைத்திற்கும் துணையாக இருந்தார். என்னுடைய பெரிய வழிகாட்டுதலும் எனது தாய்தான் என்று கூறுகிறார் ஐஸ்வர்யா.
"எனது தாய்க்கு சிறு வயதிலேயே திருமணமாகிவிட்டது. அதன்பிறகு தான் அவர் கல்லூரி படிப்பை முடித்தார். நான் கல்லூரி முதல் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது அவர், 'டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ' தேர்வெழுதி அதில் தேர்ச்சி பெற்றார். தற்போது அவர், தமிழக அரசின் கல்வித் துறையில் பணியாற்றி வருகிறார். அவரை பார்த்துத் தான் நான் அனைத்து போட்டி தேர்வுகளும் எழுத முயற்சித்தேன். அவருடைய வழிகாட்டுதல் தான் இந்த வெற்றிக்குப் பெரிதும் உதவியது," என்று தெரிவித்தார்.
"குறிப்பாக, என்னுடைய வயதிலிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் திருமணமாகிவிட்டது. ஆனால், எனது தந்தை என்னை எதற்கும் கட்டாயப்படுத்தாமல், தேவையான அனைத்தையும் எனக்கு செய்து கொடுத்தார்" என்று கூறுகிறார் ஐஸ்வர்யா.

தமிழக அளவில் மூன்றாவது இடத்தை பெற்ற பிரியங்காவின் தந்தை சிவப்பிரகாசம் சுகாதாரத்துறை ஆய்வாளர் அவரது தாய் பரிமளா போஸ்ட் மாஸ்டர். கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தனது பள்ளி படிப்புகளை நிறைவு செய்த பிறகு,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ-மருத்துவ பிரிவில் பொறியியல் படித்துள்ளார். இதன்பிறகு சிவில் சர்வீசஸ் தேர்விற்குப் பயிற்சி செய்து 2018ஆம் ஆண்டு தேர்வெழுதி, வெற்றிபெற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019ஆம் ஆண்டு தேர்வெழுதி அகில இந்திய அளவில் 68வது இடத்தையும், தமிழக அளவில் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார்.
"நலிவடைந்த மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்காக என்னால் முடிந்த அனைத்து சேவைகளையும் செய்வேன். மேலும், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் கொடுக்கும் வகையில் இருப்பேன்," என்கிறார் பிரியங்கா.
பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த சம்பத் மகள் கிருஷ்ணபிரியாவும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவர், அகில இந்திய அளவில் 514வது இடம் பிடித்துள்ளார். குறிப்பாக, கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வென்றிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












