லேப்டாப் மூலம் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி சாதித்த பார்வைக்குறைபாடு கொண்ட மாணவி

- எழுதியவர், நட்ராஜ் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கடலூரை சேர்ந்த பார்வை திறன் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளி மாணவி ஒருவர், 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் உதவியாளர்கள் துணையின்றி, தமிழகத்தில் முதல் முறையாகத் தொழில்நுட்ப வசதிகளுடன் சுயமாகத் தேர்வை எழுதி, 447 மதிப்பெண் பெற்ற தேர்ச்சி பெற்றுள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் விஜயராஜ், கோகிலா என்ற தம்பதியரின் மகள் ஓவியா. பிறந்ததிலிருந்து தெளிவான பார்வை திறனைக் கொண்ட அவர்களது மகள் ஓவியாவிற்கு, அவரது மூன்றரை வயதில் மழலையர் பள்ளி சென்று கொண்டிருந்தபோது படிப்படியாகப் பார்வை திறன் குறையத் தொடங்கியது. இதையடுத்து விழித்திரையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 7ஆம் வகுப்பு படிக்கும்போது முழுமையான பார்வை திறனை இழந்தார் ஓவியா.
ஓவியாவிற்கு முழுமையான பார்வை குறைபாடு ஏற்படும் என மாணவியின் பெற்றோரிடம், மருத்துவர்கள் கூறி இருந்ததால் இவருக்குக் கல்வி முறையை படிப்படியாக மாற்றியுள்ளனர். மாணவிக்கு மடிக்கணினியில் ஸ்க்ரீன் ரீடர்(Screen reader) எனப்படும் மென்பொருளை இணைத்துள்ளனர்.
ஸ்கிரீன் ரீடர் என்பது மடிக்கணினியைப் பயன்படுத்தும்போது, அதில் நடைபெறும் அனைத்து செயல்களையும் ஒலியாக வாசிக்கும் அதற்கேற்ப கணினியில் மாணவி தட்டச்சு செய்வார். அதேபோல் மாணவி மடிக்கணினியில் தட்டச்சு செய்வதற்கு கற்றுக் கொடுத்துள்ளனர். இதனால் மடிக்கணினியில், ஸ்கிரீன் ரீடர் உதவியுடன் சரளமாகத் தட்டச்சு செய்யக் கற்றுக்கொண்டார்.

ஆனால், மாணவிக்குத் தேர்வு எழுதுவதில், சரியான உதவியாளர் கிடைக்காமல் தேர்வு எழுத முடியாமல் இருந்துள்ளார். அதன் பிறகு, அவரது பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் கேள்விகளைச் சொன்னால், அதைச் செவிகள் மூலமாகக் கேட்டு மடிக்கணினியில் அதற்கான பதிலைத் தட்டச்சு செய்வாள் என தெரிவித்ததை அடுத்து பள்ளியில் அனுமதித்தனர். மேலும், தேர்வின்போது கேள்வியை ஆசிரியர் வாசித்தால், அதனை உதவியாளர் இல்லாமலே மடிக்கணினி மூலமாக, அனைத்து வகுப்புத் தேர்வுகளையும் எழுதியுள்ளார்.
அதன்பின்பு சிபிஎஸ்இ அலுவலகத்தில் அனுமதி பெற்று தமிழகத்தில் முதல் நபராகவும், இந்தியாவிலேயே இரண்டாவது நபராகவும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, தொழில்நுட்ப வசதியுடன் உதவியாளர் இல்லாமல் எழுதி 447 மதிப்பெண் பெற்றுள்ளார். தற்சமயம் பதினொன்றாம் வகுப்பில் வணிகவியல் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுத்துள்ளார் மாணவி ஓவியா.
"எனது மகளுக்கு விழித்திரையில் குறைபாடு இருக்கிற காரணத்தினால், அது முழுமையான பார்வை இழப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். முதலில் இதனை ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருந்தது. ஆனால், குழந்தைக்கு இதனுடைய தாக்கம் ஏற்பட்டு விடக்கூடாது. அதனால், குழந்தையை அதிலிருந்து எப்படி மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினேன். இந்த பாதிப்பின் தன்மையை உணராமல் இருக்க, கூடுதலான பலத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன்," என்கிறார் மாணவியின் தாயார் கோகிலா.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

"இதையடுத்து ஓவியாவுக்கு அனைத்து பயிற்சிகளையும் நானும், எனது கணவரும் கொடுக்க தொடங்கினோம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் படிப்பதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் குழந்தைக்குச் செய்து கொடுத்தோம். இதன் பிறகு 7ஆம் வகுப்பிலிருந்தே ஓவியாவுக்குப் பள்ளியில் மடிக்கணினி பயன்படுத்த அனுமதித்தனர். அதன் மூலமாக தேர்விலும் பயன்படுத்தத் தொடங்கினாள்," என்கிறார் அவர்.

மேலும், தொடர்ச்சியாகப் பயிற்சி செய்து வந்த காரணத்தினால், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு நிர்ணயித்த நேரத்தில் தனித்து இந்த தேர்வினை எழுத முடிந்தது என்று கூறுகிறார் கோகிலா.
’’தமிழ் மற்றும் கணிதத்தைத் தவிர அனைத்து பாடப் பிரிவுகளையும் நானே மடிக்கணினி உதவியுடன் தட்டச்சு செய்வேன். தமிழ்ப் பாடப் பிரிவை அம்மா வீட்டிலேயே ஒலிக்கருவியில் பேசி கொடுப்பார். கணித பாடப் பிரிவை எனது தந்தை கற்றுக்கொடுப்பார்’’ என கூறுகிறார் ஓவியா.
"குறிப்பாக மடிக்கணினி உதவியால் நம்மைப் போன்றவர்களும் படிக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. அதன் காரணமாகவே பள்ளியில் சக மாணவர்களுடன் என்னால் படிக்க முடிந்தது. எனது ஆசிரியர்கள் எனக்கு பெரிதும் உதவியாக இருந்தனர்.’’
’’நான் எதிர்காலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆக பணியாற்ற விரும்புகிறேன். அதன் மூலமாக மாற்றுத்திறனாளி சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காகச் சேவையாற்றுவேன். ’’ என்கிறார் அவர்.
’’பார்வை திறன் குறைபாடு கொண்ட மாணவர்கள் அனைவரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் படிக்க முடியும், அதற்காக அரசாங்கமும் ஆதரவளித்து ஊக்குவிக்க வேண்டும்," என்று வேண்டுகோள் வைக்கிறார் மாணவி ஓவியா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












