சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2020 என்றால் என்ன? அதற்கு எதிர்ப்பு ஏன்? EIA Draft 2020

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மு.நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது WithdrawEIA2020 என்ற சொல். சூழலியல் செயற்பாட்டாளர்கள் இந்த புதிய 'சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020' அறிக்கையைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
சரி. சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை என்றால் என்ன? ஏன் சூழலியலாளர்கள் அதனை எதிர்க்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ள முதலில் சூழலியல் தாக்க மதிப்பீடு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
சூழலியல் தாக்க மதிப்பீடு என்றால் என்ன?
இந்தியாவில் பெருநிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளைத் தொடங்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் அனுமதி பெற வேண்டும். அதன்படி, சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 சட்டத்தின் கீழ், திட்டம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்ய வேண்டும். அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக இருப்பின் அனுமதி வழங்கவோ, இல்லாதபட்சத்தில் அனுமதி மறுக்கவோ செய்யும்.
இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், உங்கள் குடியிருப்பு பகுதி அருகே ஒரு ரசாயன நிறுவனத்தைக் கொண்டு வருகிறார்கள் என்று வையுங்கள். இது குறித்த சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையைத் தயார் செய்ய வேண்டும். தொழிற்சாலை அமையவுள்ள பரப்பளவு, அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளின் அளவு, அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, கழிவு மேலாண்மை திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து அந்நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். இதனை அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக இருப்பின் அதற்கு அனுமதி வழங்கும். அப்படி இல்லை எனில் மறுக்கும்.

சரி. சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிக்கை என்ன சொல்கிறது? ஏன் எதிர்க்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images
சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 சட்டத்தினை நிறுவனங்களுக்கு ஏற்றவாறு மத்திய அரசு மாற்றி அமைக்க முனைகிறது என்று குற்றஞ்சாட்டுகிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள். கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்ட இந்த புதிய வரைவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. அது முழுக்க பெருநிறுவனங்கள் நலனை மட்டுமே பேணுவதாக இருக்கிறது என்கிறார்கள் அவர்கள்.
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தராஜன் இந்த வரைவு அறிக்கையில் மிக முக்கியமாக மூன்று குறைபாடுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார்.

பட மூலாதாரம், Sundar Rajan / Facebook
"தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தேசிய நலன் சார்ந்து திட்டங்களுக்கு சூழலியல் மதிப்பீடு தேவையில்லை என்கிறது வரைவு. நாளை எந்த திட்டத்தையும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் எனக் கூறிவிடலாம், எந்த கருத்துக் கேட்பும் சூழலியல் மதிப்பீடும் செய்யாமல் அமல்படுத்தலாம். இது எவ்வளவு ஆபத்தானது?," என்று கேள்வி எழுப்புகிறார்.
"உதாரணமாக சொல்ல வேண்டுமானால் ஒரு சாலை விரிவாக்கத் திட்டம் கொண்டு வரப்படுகிறது என்றால், அது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும். அதன் பின்பே அந்த திட்டத்தை அமல்படுத்த முடியும். நாளை, இதனை தேசிய முக்கியத்தவம் வாய்ந்த திட்டம். தேசிய நலனுக்கானது என வரையறுப்பார்கள். எந்த சூழலியல் மதிப்பீடும் இல்லாமல் அமல்படுத்துவார்கள்," என்கிறார்.
அவர், "இப்போது மக்கள் கருத்தைக் கேட்டுவிட்டு அறிக்கையைத் திரித்துத் தரும் வேலை நடக்கிறது. எதிர்காலத்தில் மக்கள் கருத்துக் கேட்பே வேண்டாம் என்பது ஜனநாயக படுகொலை. இந்த சூழலியல் மீது மட்டும் அல்ல ஜனநாயகத்தின் மீதான சம்மட்டி அடி" என்கிறார் சுந்தராஜன்.
"அதேபோல, மற்ற தொழிற்சாலைகள் குறித்த பொது கருத்துக்கேட்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, பொதுமக்கள் பங்கேற்புக்கு ஒதுக்கப்பட்ட கால அவகாசமும் 30 நாட்களிலிருந்து 20 நாட்களாகக் குறைக்கப்படுகிறது," என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அடுத்துள்ள குறைபாடு அபாயகரமானது என்று அவர் குறிப்பிடுகிறார்.
"சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை இல்லாமலே ஒரு திட்டத்தைத் தொடங்கவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் இந்த வரைவு வழி வகை செய்கிறது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையின்றி தொடங்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் இந்த திட்டங்கள் குறித்து பிறகு ஒரு குழு போடப்பட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்பு யார் அதனை முடக்குவார்கள். எளிமையாகக் கேட்கிறேன் ஒரு ஸ்டெர்லைட் ஆலையை மூட வைக்க எத்தனை பேர் உயிர் துறக்க வேண்டி இருந்தது," என்று கேள்வி எழுப்புகிறார் சுந்தராஜன்.
"தொழிற்சாலைகள் ஆண்டுக்கு இரண்டு முறை செயல்பாடுகள் குறித்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை மாற்றி வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தாக்கல் செய்தால் போதும் என புதிய வரைவில் கூறப்பட்டுள்ளது. இதுவும் ஆபத்தானது. இது தொழிற்சாலை சுற்றுச்சூழல் மீது ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் விளைவுகள் குறித்து தகவல்கள் தெரிந்து கொள்வதை மட்டுப்படுத்தும்," என்கிறார் சுந்தராஜன்.
சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தின் மீது கவனம் செலுத்தாமல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கொள்கைகளைத் தாழ்த்துவது போல் உள்ளது என்றும், குறிப்பாக இந்த அறிவிப்பு தொழிற்சாலைகளின் சட்டவிரோதமான செயல்பாடுகளை சட்டப்பூர்வமாக்குவது போல் உள்ளது என்றும் குற்றஞ்சாட்டுகிறார் சுந்தராஜன்.
"குறிப்பாக இன்னொரு விஷயத்தைக் கூற வேண்டுமானால், சூழலுக்கு ஊறு விளைவிக்கும் தொழிற்சாலைகளை எதிர்த்து சில அமைப்புகள் நீதிமன்றங்களுக்குச் செல்கின்றன அல்லவா. அதனைத் தடை செய்கிறது இந்த வரைவு. ஒரு நிறுவனத்தை எதிர்த்து குடிமை சமூகமோ, தனி நபர்களோ இனி நீதிமன்றங்களுக்குச் செல்ல முடியாது. அரசு அமைப்புகள் மட்டுமே செல்ல முடியும் என்கிறது இந்த வரைவு. இது மோசமான ஆபத்தாக முடியும்," என்கிறார் அவர்.


சூழலியல் செயற்பாட்டாளர்கள் மட்டுமே எதிர்க்கிறார்களா?
இல்லை. பல அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இதனை எதிர்த்திருக்கிறார். முன்னாள் அதிகாரிகள் 63 பேர் இதனை எதிர்த்திருக்கிறார்கள் சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிக்கை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கு ஜூலை 12ஆம் தேதி கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிக்கையைக் கடுமையாக எதிர்க்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். "இந்த அறிவிக்கை சுற்றுச் சூழல் விதிகளே ஒரு தேவையற்ற சுமை என்று இந்த அரசு நினைப்பதை வெளிப்படுத்துகிறது. பின் தேதியிட்டு திட்டங்களுக்கு அனுமதியளிப்பது என்பது மக்களின் சுகாதாரம் மற்றும் நலனில் அக்கறையற்ற செயல்" என விமர்சித்துள்ளார்.
இது நில ஆக்கிரமிப்புக்குத்தான் வழிவகை செய்யும் என அவர் கூறி இருக்கிறார்.
மேலும் அவர், "மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தலைவரையும், உறுப்பினர்களையும் மத்திய அரசே நியமிப்பது கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தைச் சவப்பெட்டியில் தள்ளி அடிக்கும் கடைசி ஆணி" என்று அவர் கடுமையாகவே சாடியிருக்கிறார்.

அரசு என்ன சொல்கிறது?
அரசு இது அனைத்தையும் மறுக்கிறது. இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "ஜெய்ராம் ரமேஷின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது மற்றும் தவறான தகவல்," என தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷுக்கு பிரகாஷ் ஜவடேகர் எழுதிய கடிதத்தில், "உங்களது ஆலோசனைகளை குறித்துக் கொண்டேன். வரைவு அறிக்கை பொதுத் தளத்தில் இருக்கிறது. இன்னும் 15 நாட்கள் இது குறித்த ஆலோசனைகளை வழங்கலாம்," என்றார்.
வரைவு அறிக்கை இறுதி செய்யப்படுவதற்கு முன்பு அனைத்து ஆலோசனைகளும் கருத்தில் கொள்ளப்படும். நாடாளுமன்றமும், நிலைக்குழுக்களும் அய்வு செய்தபின்னரே அரசு இது தொடர்பாக ஒரு முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












