கொரோனா வைரஸ் சமூகப் பரவலானதை ஒப்புக்கொள்ள இந்தியா மறுப்பதேன்?

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விகாஸ் பாண்டே
    • பதவி, பிபிசி

டெல்லியை சேர்ந்த 45 வயது ராஜேஷ் குமாருக்கு ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் இருமல் ஏற்பட்டது. அடுத்த சில நாட்களில் அவருக்கு காய்ச்சல் உண்டானது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உள்ளதா என்பதை உறுதிசெய்யும் பரிசோதனையை மேற்கொள்வதற்கு பதிலாக அவர் வெறும் காய்ச்சலுக்கான மருந்தை அடுத்த ஐந்து நாட்களுக்கு எடுத்துக்கொண்டார். ஆனாலும், காய்ச்சல் குறைந்தபாடில்லை, கூடுதலாக அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.

குடும்பத்தினர் அவரை கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு வலியுறுத்தினர். ஆனால், அவரோ தனக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் தான் வீட்டை விட்டு வெகுசில முறையே வெளியே சென்றதாகவும், அப்போதும் கோவிட்-19 நோய்த்தொற்று உள்ள எவருடனும் தான் தொடர்பில் இல்லையென்றும் உறுதிபட கூறினார்.

கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி எட்டாவது நாளில் உடல்நிலை மோசமடையவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது பரிசோதனையில் உறுதியானது.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

"நான் உயிர்பிழைத்துவிட்டேன். ஆனால், மேலும் காலதாமதமாக நான் மருத்துவமனைக்கு வந்திருந்தால் அது உயிருக்கே ஆபத்தாகி இருக்கும் என்று மருத்துவர்கள் கூறினர்" என்று அவர் கூறுகிறார்.

இதுவரை குமாருக்கு எங்கிருந்து, எப்படி நோய்த்தொற்று பரவியது என்பது புதிராகவே உள்ளது.

இதுபோன்ற சூழ்நிலை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல்வேறு நோயாளிகளுக்கு நிலவுவதாகவும் இது இந்தியாவில் நோய்த்தொற்று சமூகப் பரவல் நிலையின் "முழு வீச்சை" அடைந்துவிட்டதற்கான ஆதாரம் இது என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Banner image reading 'more about coronavirus'
Banner

இருப்பினும், இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை அடைந்துவிட்டதாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அரசாங்கம், இந்த நிலைக்கு உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறை என்று எதுவும் இல்லையென்றும், ஒவ்வொரு நாடும் தங்களது சூழ்நிலைக்கேற்ப அதை முடிவுசெய்துகொள்ளலாம் என்றும் கூறுகிறது.

இந்தியாவில் கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட இரண்டு மாநிலங்கள் மட்டுமே தாங்கள் சமூகப் பரவலை அடைந்துவிட்டதாக அறிவித்துள்ளன.

எனினும், எப்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரின் தொற்று மூலம் கண்டறியப்பட முடியாத நிலை ஏற்படுத்துகிறதா அதுவே சமூகப் பரவல் என்ற விளக்கமே உலக அளவில் புரிந்துகொள்ளப்பட்ட விளக்கமாக உள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளும் அதையேதான் இவ்வாறாக கூறுகிறது - "நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அதிக அளவிலானோரின் நோய்த்தொற்று மூலம் உறுதிசெய்யப்பட முடியாத நிலை உருவானால் அதுவே சமூகப் பரவல்."

இது நிச்சயமாக இந்தியாவில் நடக்கிறது என்று டெல்லியின் சர் கங்காரம் மருத்துவமனையின் மார்பு அறுவை சிகிச்சை மையத்தின் தலைவர் மருத்துவர் அர்விந்த் குமார் கூறுகிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்படும் பலருக்கு எப்படி, யார் வாயிலாக பாதிப்பு ஏற்பட்டது என்பதை கண்டறியமுடியாத நிலை அதிகரித்து வருவதாக அவர் கூறுகிறார். இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்து வரும் நோய்த்தொற்று பாதிப்பு இதற்கு மற்றொரு சான்று என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்தியாவில் ஜூலை 26ஆம் தேதி நிலவரப்படி, 14 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 29,000க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

"தரவுகள் பொய் சொல்வதில்லை. இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் நோய்த்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிவேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பதில் எந்த பொருளும் இல்லை" என்று மருத்துவர் அரவிந்த் கூறுகிறார்.

ஆனால், அரசுத் தரப்பு இத்தகைய கருத்துகளுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய மருத்துவ கழகத்தை சேர்ந்த மூத்த மருத்துவர் ஒருவர் இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை அடைந்துவிட்டதாக கூறியிருந்தார். ஆனால், அதற்கடுத்த இரண்டு நாட்களிலேயே அந்த கருத்தை திரும்ப பெற்றுக்கொண்ட இந்திய மருத்துவ கழகம் அது அந்த மருத்துவரின் தனிப்பட்ட கருத்து என்று விளக்கம் அளித்தது.

இந்த விவகாரத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்த திருப்பங்கள் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

"மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் சொல்வதை அரசு காது கொடுத்து கேட்க வேண்டும். ஆதாரங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று வைராலஜி வல்லுநரான ஷாஹித் ஜமீல் கூறுகிறார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பிருந்ததை விட நோய்த்தொற்று பரவல் தற்போது அதிகரித்துள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. முன்னெப்போதுமில்லதாக வகையில் அதிகளவிலான நோய்த்தொற்று பாதிப்புகளை ஆந்திரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களும் நாட்டின் ஊரகப்பகுதிகளும் சந்தித்து வருகின்றன.

வெளிநாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்துவது, பரிசோதனை செய்வது உள்ளிட்டவற்றில் மட்டுமே கவனத்தை செலுத்திய அரசுகள், உள்ளூரில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

கோவிட்-19 நோய்த்தொற்றை அதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட நகரங்கள் அல்லது மாநிலங்களுக்குள் கட்டுப்படுத்திவிட முடியுமென்றும், எனவே அதை நாட்டின் மற்ற பகுதிகளுக்கு பரவாது தடுத்துவிடலாம் என்றும் எண்ணவோட்டம் நிலவியதாக மருத்துவர் ஜமீல் கூறுகிறார்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

"அது இப்போது நடக்கவில்லை. கொரோனாவின் பரவலும் கண்காணிக்கப்படுவதில்லை."

கொரோனா வைரஸ் பெரும்பாலும் எவ்வித தடயமும் இல்லாமல் வேகமாக பரவி வருகிறது.

அரசு மேற்கொண்ட கணக்கெடுப்பில் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் 40% பேர் எவ்வாறு நோய்வாய்ப்பட்டார்கள் என்று அவர்களுக்கு தெரியவில்லை என்று தெரியவந்துள்ளதாக மருத்துவர் ஜமீல் சுட்டிக்காட்டுகிறார்.

"சமூகப் பரவல் ஏற்பட்டுவிட்டது என்பதை ஏற்றுக்கொள்வதற்குத் தேவையான ஆதாரம் நம்மிடம் உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

இந்த நிலையை இந்தியா ஓரிரவுக்குள் அடைந்துவிடவில்லை என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மாறாக, ஒருபுறம் சமூகப் பரவலை அரசு மறுத்து கொண்டிருக்க மறுபுறம் பல வாரங்களாக இந்த நிலை படிப்படியாக ஏற்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

"கொரோனா வைரஸ் உலகத் தொற்றின் தொடக்க கட்டத்திலேயே அதை உள்ளூரில் பரவ விட்டுவிட்டோம். அது தற்போது நாடு முழுவதும் பரவி கிடப்பதை நம்மால் காண முடியும் நிலை ஏற்பட்டுவிட்டது" என்று மருத்துவர் அர்விந்த் கூறுகிறார்.

எனவே, வெளிப்படையாக தெரியும் ஒன்றை ஏற்றுக்கொள்ள அரசு தயங்குவது ஏன்?

இந்த விவகாரம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை விளக்கும் வகையில் எவ்வித கருத்தையும் அரசாங்கம் இன்னமும் வெளியிடாததால், தாங்கள் இதுகுறித்து "வெறும் கணிப்புகளை மட்டுமே" தெரிவிக்கவியலும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சமூகப் பரவலை ஏற்றுக்கொள்வது தனது கொள்கைகளின் தோல்வியாக பார்க்கப்படும் என்று அரசாங்கம் நினைப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்த விவகாரத்தை பொறுத்தவரை, மறுப்புகள் மென்மேலும் அழுத்தத்தையே ஏற்படுத்தும் என்று எச்சரிக்கும் வல்லுநர்கள் இதனால் தேவையற்ற விவாதங்களும் உருவாக கூடும் என்று சொல்கின்றனர்.

இந்த நிலையில், இதுபோன்ற விவாதங்கள் முற்றிலும் அர்த்தமற்றவை என்று கூறுகிறார் நாட்டின் மூத்த தொற்றுநோயியல் நிபுணரான மருத்துவர் லலித் காந்த்.

தற்போதைய சூழ்நிலையை நாம் சமூகப் பரவல் என்று குறிப்பிடுகிறோமோ இல்லையோ, "நாம் நமது செயற்திட்டங்களை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

"இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. நோய்த்தொற்று பரவலை ஒரு மாநிலத்திற்குள் கட்டுப்படுத்தலாம், ஆனால் பிறகு அது மற்றொரு மாநிலத்தில் பரவும். எனவே, இந்த விவகாரத்தில் நிதர்சனத்தை புரிந்துகொள்ள நமக்கு வரையறை ஒன்றும் அவசியமில்லை" என்று அவர் கூறுகிறார்.

"ஆனால், சூழ்நிலை மோசமடைந்து வருகிறது என்பதே கடுமையான உண்மை."

அதே சமயத்தில், சமூகப் பரவலை அரசு ஒப்புக்கொண்டால் அது தீவிரமான கொள்கை மாற்றங்களை செய்ய வழிவகுக்கும்.

"பெரிய அளவிலான சமூக பரவல் சூழ்நிலையில், ஒவ்வொரு தொற்றுகளையும் அடையாளம் காணல், தொடர்பு தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்தல் என்பது தேவையில்லை" என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

அதற்கு பதிலாக, தரவு மூலம் வைரஸின் புவியியல் அடிப்படையிலான பரவலைக் கண்காணிப்பதில் கவனம் செலுத்தவும், அதற்கேற்ப சுகாதார வசதிகளை மேம்படுத்தவும் அது உலக நாடுகளுக்கு அறிவுறுத்துகிறது.

இதுபோன்ற சூழ்நிலையின் காரணமாகவே, அரசாங்கம் தனது கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் அறிவிப்பை வெளியிட விரும்பாமல் இருக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர் காந்த் கூறுகிறார்.

ஏனெனில், பரிசோதனைகளை அதிகரிக்கவும், சோதனை மற்றும் தடய நெறிமுறைகளை செயல்படுத்தவும் மத்திய - மாநில அரசுகள் ஏற்கனவே பல மாதங்களை செலவிட்டுள்ளதே இதற்கு சாத்தியமான காரணமாக இருக்கும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நோய்த்தொற்று வெவ்வேறு கட்டங்களில் உள்ளதால் ஒருசேர கொள்கையை மாற்றுவது என்பது மற்றொரு சவாலாக இருக்குமென்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

"ஆனால் இதுபோன்ற காரணங்களை கொண்டு மட்டுமே அரசின் தொடர் மறுப்புகளை நியாயப்படுத்த முடியாது. இந்த விவகாரத்தில் அரசு தனது நீண்டகால அணுகுமுறை என்ன என்பது குறித்தோ அல்லது சமூகப் பரவல் குறித்த அவர்களின் வரையறைகள் என்னென்ன என்பதையோ தெளிவுற விளக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

"இதை தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது; அரசு வெளிப்படையாக இருக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: