விமானத்தில் தமிழ் அறிவிப்பு செய்த கேப்டன் ப்ரியவிக்னேஷ்: சமூக ஊடகம் கொண்டாடும் இந்த விமானி யார்?

- எழுதியவர், மு. நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
விமானத்தில் தகவல்களைத் தெளிவான தமிழில் அறிவித்த ஒரு விமானி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறார்.
அவர் விமானத்தில் தமிழில் அறிவிக்கும் காணொளியும் வைரலாக சென்றது.
சென்னையிலிருந்து மதுரை செல்லும் அந்த விமானத்தில் அவர் தமிழில் காவிரி, கொள்ளிடம், ரங்கநாதர் குறித்து தமிழில் அறிவிப்பு அளிக்கிறார்.
தமிழகத்திற்குப் பறக்கும் விமானங்களில் கூட தமிழில் அறிவிப்புகளைச் செய்வது இல்லை என பலர் ஆதங்கத்துடன் சமூக ஊடகங்களில் எழுதி இருக்கின்றனர். இப்போது அவர்கள் பெருமிதத்துடன் இந்த விமானியைக் கொண்டாடி வருகின்றனர்.
சரி யார் இந்த ப்ரியா விக்னேஷ்?
வடசென்னை வீதிகளில் புறப்பட்ட கனவு
தேனி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான்.
ப்ரியவிக்னேஷ், "நான் வடசென்னைக்காரன். ராயபுரத்தில்தான் பிறந்து, வளர்ந்தேன். என் ஆன்மாவில் ராயபுரத்தின் உப்புக் காற்று கலந்திருக்கிறது," என்கிறார்.
"சிறு வயதிலிருந்தே விமானி ஆக வேண்டும் என கனவு இருந்தது. அதனுடன் வரலாற்றின் மீதும் பெரும் விருப்பம். விமானியாக பயிற்சி எடுத்து கொள்வதற்கு முன்பு, வரலாறு படித்தேன்," என்று கூறும் ப்ரியா விக்னேஷ், அதன் கனவை நினைவாக்க பல தடைகளை தாண்டி வந்திருக்கிறார்.
பாதையோர வியாபாரி அப்பா - தமிழாசிரியர் அம்மா
"விமானியாகுவது எளிதான காரியம் இல்லைதானே? அதுவும் என்னைப் போல ஒரு எளிய வீட்டுப் பையனின் உயரப் பறக்கும் ஆசைக்கு எவ்வளவு தடைகள் இருக்கும்? அது அத்தனையும் எனக்கும் இருந்தது"
மேலும் அவரே, "என் அப்பா சாதாரண பாதையோர வியாபாரி. திருவனந்தபுரத்தில் கடை வைத்திருக்கிறார். என் அம்மா தமிழாசிரியர். அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றுகிறார். இவர்களின் முழு அர்ப்பணிப்புதான் என்னை விமானியாக்கி இருக்கிறது," என்று கூறுகிறார் ப்ரியவிக்னேஷ்.
"விமானியாகப் பயிற்சி பெற பெரும் தொகை தேவைப்பட்டது. என் அம்மாவின் பி.எஃப் பணம் போதவில்லை. என் அப்பா அவரது பல்லாண்டு உழைப்பின் பலனாக வாங்கிய இடத்தை அடகு வைக்க முயன்றார். அது கைகூடவில்லை. எனது விருப்பத்தை அங்கீகரித்த அத்தை தனது சொந்த வீட்டை அடமானம் வைத்து பணம் தந்தார். இதுவும் எனது முதல் இரண்டு கட்ட பயிற்சிக்கு மட்டும்தான் போதுமானதாக இருந்தது." என்கிறார்.

"(புகழ்பெற்ற 'ரசவாதி' நாவலில்) எழுத்தாளர் பாலோ கொயலோ சொல்வார்தானே உனது விருப்பத்தைக் கைக்கொள்ள இந்த முழு பிரபஞ்சமும் சதி செய்யும் என. அப்படித்தான் என் வாழ்விலும் நடந்தது. ஆம், என் அப்பா கடை வைத்திருக்கும் திருவனந்தபுரத்தில், நாகர்கோயிலை சேர்ந்த முருகன் என்பவர் ஒரு உணவகம் நடத்துகிறார். எனது நிலையைக் கேள்விப்பட்ட அவர் 15 லட்சம் பணம் கொடுத்தார். இப்படித்தான் என் கனவு வடிவம் பெற்றது," என்கிறார் விக்னேஷ்.
ஒரு சாமானியனின் தமிழ் கனவு
தமிழில் அறிவிப்புகளை வெளியிட்டது குறித்த கேள்விக்கு, "இது எனது பத்தாண்டு கனவு," என்கிறார்.
"பத்தாண்டுகளுக்கு முன்பு நண்பர்கள் எல்லாம் கூடி பேசிக்கொண்டிருந்த போது நான் விமானி ஆனால், விமானத்தில் இப்படித்தான் அறிவிப்பை வெளியிடுவேன் என தமிழில் பேசிக் காட்டினேன். இப்போது அந்த கனவு நனவாகி இருக்கிறது. இந்த வீடியோ வைரலான உடன், அப்போது உடன் இருந்த மனோஜ் எனும் நண்பன், இந்த வீடியோவை அனுப்பி, `சொன்னதை செஞ்சுகாட்டிட்ட' என்றான். உண்மையில் மிகவும் பெருமிதமாக உணர்ந்த தருணமது"
சக விமானிகள் தந்த ஊக்கம்
"உண்மையில் எனக்கு விமானத்தில் தமிழில் பேச தயக்கமாக இருந்தது. முதலில் சில தமிழ் சொற்களைதான் பயன்படுத்தினேன். என் தயக்கத்தைத் தகர்த்தவர் கேப்டன் சஞ்சீவ்தான். எங்களது ராடாரில் காட்டாத இடங்களை எல்லாம் அவர் கூறுவார். நாம் இப்போது இந்த ஆற்றின் மீது, பயணிக்கிறோம், இந்த ஏரி மீது, இந்த கோயில் அருகே என கூறுவார். அவர் வட இந்தியர்.`என்னைவிட உனக்குதானே இந்த இடம் நன்கு பரிச்சயம். இந்த உன் சொந்த மாநிலம்தானே. நீ அறிவித்தால் இன்னும் உணர்வுபூர்வமாக இருக்கும்` என்றார். மேலும் அவர், 'இதுபோன்ற இடங்களைத் தெரிந்து கொள்வது சில நெருக்கடியான காலத்தில் உதவும்' என்று கூறுவார். அவர் அளித்த ஊக்கம்தான் நான் தமிழில் அறிவிப்பை வெளியிடக் காரணம்," என்று கூறுகிறார்.
"அது போல கோயம்புத்தூரை சேர்ந்த மூத்த விமானி தீபக் என்னை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து இதனை செய் என்றார். அதுபோல நான் பணியாற்றும் இண்டிகோ விமான நிறுவனமும் எனக்கு ஊக்கமூட்டியது. அவர்கள் இல்லாமல் இது சாத்தியம் ஆகி இருக்காது"
"நான் பெரும்பாலும் தமிழகத்துக்குள்ளேயே பயணிக்கிறேன். பணிகளில் 90 சதவீதம் பேர் தமிழர்களாக இருக்கும்போது, நாம் தமிழ் மொழியில் பேசும் போது மிகவும் நெருக்கமாக உணர்வார்கள்." என்று கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












