பாராசிடமால் மாத்திரைகளை விற்கத் தடையா? - தமிழக அரசு விளக்கம்

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துக் கடைகளில் பாராசிடமால் மாத்திரைகளை விற்க தடை ஏதும் விதிக்கப்படவில்லையென தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஜோயல் சுகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "தற்போது கொரோனா பரவும் காலமாக இருப்பதால், சாதாரண காய்ச்சல், தலைவலி போன்றவற்றுக்கு மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவது கடினமான காரியமாக உள்ளது. மருந்துக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் பிரிவின்படி பாரசிடமால் போன்ற மருந்துகள், மருத்துவர் பரிந்துரையின்றி வாங்கக்கூடியவை.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், தமிழக அரசின் அதிகாரிகள் அந்த மருந்துகளை பரிந்துரையின்றி விற்கக்கூடாது என மருந்துக் கடைகளுக்கு வாய்மொழியாக கூறியிருப்பதால், அவற்றை விற்க மருந்துக் கடைக்காரர்கள் தயங்குகிறார்கள்.

மேலும், அம்மாதிரி காய்ச்சலுக்காக மாத்திரை வாங்க வருபவர்கள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தெரிவிப்பதால், அவர்கள் சாதாரண காய்ச்சல் வந்தவர்களையும் கோவிட் மையங்களில் சேர்க்கிறார்கள்.

Banner image reading 'more about coronavirus'
Banner

ஆகவே, பாரசிடமால் போன்ற சாதாரண காய்ச்சல் மருந்துகளை மருந்துக் கடைகளில் விற்க அனுமதிக்க வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனு இன்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இம்மாதிரி தடை எதையும் தமிழக அரசு விதிக்கவில்லையெனத் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :