பத்மநாபசுவாமி கோயில்: பாதாள அறை, மலைக்க வைக்கும் அளவுக்கு பொக்கிஷங்கள் - நிர்வகிக்கும் உரிமை யாருக்கு?: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பத்மநாபசாமி கோயிலை நிர்வாகிக்க திருவனத்தபுரம் அரச குடும்பத்திற்கு உரிமை உண்டு - உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்கும் உரிமை திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்கு உள்ளது என உச்சநீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோயிலின் வழிபாடு முறைகளில் தலையிடுவதற்கும் அரச குடும்பத்திற்கு உரிமை உள்ளது என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்மநாப சுவாமி கோயிலை நிர்வகிக்கவும், சொத்துகளைப் பராமரிக்கவும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினருக்கு உரிமையில்லை என்று கடந்த 2011-ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.

இதற்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவில் இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

பத்மநாபசுவாமி கோயில்

18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பத்மநாபசுவாமி கோயில் பாரம்பரியமாக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் அந்தக் கோயில் நிர்வாகம் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் வசமே இருந்தது.

திருவனந்தபுரத்தை கடைசியாக ஆட்சி செய்த மன்னர் 1991ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி காலமானார்.

அதன் பிறகு கோயில் நிர்வாகத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அடுத்து, வரலாற்று சிறப்புமிக்க பத்மநாபசாமி கோயிலின் நிர்வாகம் தொடர்பான வழக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்தது.

அந்த கோயிலில் மலைத்துப் போகும் அளவுக்குப் பொக்கிஷங்கள் வைக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படும் பாதாள சுரங்கங்கள் உள்ளன.

கோயிலின் ரகசிய அறைகள் ஏ முதல் எப் வரை பிரிக்கப்பட்டன. கோயிலின் 6 ரகசிய அறைகளில் 5 அறைகள் திறக்கப்பட்டன. அதில் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டது.

குறிப்பாக அந்த கோயில் பாதாள சுரங்கத்தில் உள்ள பி அறையில் இதனை விட பல மடங்கு பொக்கிஷங்கள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அந்த பி அறையை திறக்கக் கூடாது என 2011ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது உச்ச நீதிமன்றம் .

வழக்கில் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய தீர்ப்பு

பத்மநாபசாமி கோயிலை நிர்வாகிக்க திருவனத்தபுரம் அரச குடும்பத்திற்கு உரிமை உண்டு - உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், getty images

படக்குறிப்பு, பத்மநாபசாமி கோயிலை நிர்வாகிக்க திருவனத்தபுரம் அரச குடும்பத்திற்கு உரிமை உண்டு - உச்ச நீதிமன்றம்

இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, யு.யு.லலித் ஆகியோர் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தனர்.

அதில், ''திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்கவும், சொத்துகளைப் பராமரிக்கவும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தாருக்கு உரிமை இருக்கிறது. இடைக்கால நடவடிக்கையாகக் கோயிலை நிர்வகிக்க திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் நிர்வாகக் குழு அமைக்கப்பட வேண்டும்" என்று நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :