கொரோனா வைரஸை வென்ற தாராவி மக்கள்: எப்படி சாத்தியமானது?

கொரோனாவை வென்ற தாராவி- எப்படி சாத்தியமானது ?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மயங்க் பகவத்
    • பதவி, பிபிசி மராத்தி

கொரோனா வைரஸ் உடனான போரில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வியுடன் பல உலக நாடுகள் முயன்று வருகின்றன. இந்த நேரத்தில் ஆசியாவின் மிகப் பெரிய குடிசை பகுதியான தாராவி கொரோனாவை வென்றுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக தாராவி விளங்கியது. ஆனால் தற்போது தாராவி கொரோனவை எதிர்கொண்ட விதம் குறித்து நாடு முழுவதும் விவாதிக்கப்படுகிறது.

தாராவி மாடல் என்ற ஒன்றும் உருவாகியுள்ளது.

மிஷன் தாராவி வெற்றிக்கு அரசு அதிகாரிகள், தன்னார்வ அமைப்புகள், காவல்துறையினர் மற்றும் மருத்துவர்கள் என அனைவரும் காரணம்.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மும்பையில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியபோது தாராவியில் தினமும் 60 முதல் 100 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

அதன் பிறகு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் தாராவியில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஜூலை 7ம் தேதி தாராவியில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கொரோனாவை வென்ற தாராவி- எப்படி சாத்தியமானது ?

ஜூலை மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

1 ஜூலை - 14

2 ஜூலை - 19

3 ஜூலை - 08

4 ஜூலை - 02

5 ஜூலை - 12

6 ஜூலை - 11

7 ஜூலை - 01

8 ஜூலை - 03

தாராவி கொரோனாவை எப்படி எதிர்கொண்டது ?

தாராவியில் 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 9 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இவ்வளவு நெருக்கமாக வசிக்கும் மக்கள் எப்படி கொரோனாவை வீழ்த்தினார் ?

கொரோனாவை வென்ற தாராவி- எப்படி சாத்தியமானது ?

பட மூலாதாரம், Getty Images

இது குறித்து பிரிஹன் மும்பை மாநகராட்சி துணை ஆணையர் கிரண் டிக்வகர் கூறுகையில், ''தாராவியில் அதிகரித்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மூன்று முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நிறைய பரிசோதனைகள் செய்தோம். வீடுவீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் கூட மருத்துவமனைகள் அல்லது தனிமைப்படுத்தும் மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்'' என்கிறார்.

மேலும் அவர், ''தாராவியில் சிறிய இடத்திற்குள் பல வீடுகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒரே வீட்டில் 10 பேர் வரை வசிக்கின்றனர். எனவே சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியமில்லை. வீடு சிறியதாக உள்ளதால், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதிலும் சவால்கள் உள்ளன. மக்கள் உடல் நல பாதிப்பு ஏற்பட்ட பிறகு மருத்துவர்களைத் தேடி வருவதற்குள், மருத்துவர்கள் வீடு வீடாக சென்று மக்களுக்கு உள்ள உடல்நல பாதிப்புகளைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தனர்'' என்று கூறுகிறார் கிரண்.

Banner image reading 'more about coronavirus'
Banner

தொடக்கத்திலேயே உணரப்பட்ட அபாயம்

தாராவியில் கொரோனா பரவ துவங்கியபோது அதன் அபாயத்தை அனைவரும் உணர்ந்தனர். மக்கள் நெரிசல் அதிகம் உள்ள இடத்தில் கொரோனா வைரஸ் பரவினால், அது சமூக பரவலாக மாறிவிடும், நிலைமை மேலும் மோசமாகும் என அதிகாரிகள் அஞ்சினர்.

எனவே அதிகாரிகள் தாராவியில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்தினர். பிறகு ஜூன் மாதத்திலேயே அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

கொரோனாவை வென்ற தாராவி- எப்படி சாத்தியமானது ?

பட மூலாதாரம், Getty Images

மும்பையில் தாராவி அமைந்திருக்கும் பகுதியின் காவல்துறை துணை ஆணையர் நியடி தாக்கர் டவேயிடம் பிபிசி மராத்தி சேவை பேசியது. தாராவி கொரோனாவை எதிர்கொண்ட அனுபவங்களை நியாடி தாக்கர் விவரித்தார்.

''தாராவியில் இளம் வயதினரின் மக்கள் தொகை அதிகம். முக கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கடி கை கழுவ வேண்டியதன் அவசியம் குறித்தும் இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தாராவியில் கொரோனா வைரஸை மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் எதிர்கொள்ள தொடங்கினர் என்றே நினைக்கிறேன். அதனால் தான் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.''

''மேலும் தாராவியில் வசித்த பல தொழிலாளர்கள், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தங்களின் சொந்த கிரமங்களுக்குச் சென்றனர். சுமார் 2 லட்சம் பேர் தாராவியில் இருந்து வெளியேறியதாகக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே தாராவியில் தற்போது வசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது கூட வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவி இருக்கலாம்'' என்றும் நியடி தாக்கர் குறிப்பிடுகிறார்.

தாராவியின் தற்போதைய நிலை

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் - 2335

மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் - 1723

தற்போது சிகிச்சை பெற்றுவருபவர்கள் - 352

11000 மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தும் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அரசு தரவுகளின் படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக மாறும் வேகம் தாராவியில் ஏப்ரல் மாதத்தில் 18 நாட்களாக இருந்தது. மே மாதம் அது 43 நாட்களாகக் குறைந்தது. பின் ஜூனில் 108 நாட்களாகவும், ஜூலையில் 430 நாட்களாகவும் குறைந்துள்ளது.

''ஜூலை மாதம் மும்பையில் மழை பொழிவு காலம் என்பதால், வழக்கம் போல காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார மையங்கள் இயங்கும். மேலும் சிறிய தொழிற்சாலைகள் ஏற்கனவே இயங்க தொடங்கிவிட்டன,'' என்று கிரண் கூறுகிறார்.

கொரோனாவை வென்ற தாராவி- எப்படி சாத்தியமானது ?

பட மூலாதாரம், Mayank Bhagvath

பொது கழிப்பறைகள்

''தாராவியில் மக்கள் பொது கழிப்பறைகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே தினமும் பொது கழிப்பறைகளை தினமும் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிப்பது மிகவும் அவசியம். பொது மக்களும் அதிகாரிகளுடன் இணைந்து ஒத்துழைப்பு அளித்தனர். சுகாதாரம் குறித்த அவசியத்தை மக்கள் நன்கு புரிந்துகொண்டனர். விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஈடுபட்டனர்'' என மும்பை மாநகரின் மேயர் கிஷோர் பேட்னேகர் கூறுகிறார்.

தனியார் மையங்களில் பணியாற்றும் 350 மருத்துவர்கள் தாராவில் ஆரம்ப கட்டத்தில் பணியாற்றினர். இவர்களில் ஒருவர் 60 வயதுடைய டாக்டர் அனில் பச்சானேகர்.

மார்ச் மாதம் முதலே மருத்துவர் பச்சானேக்கர் நோயாளிகளுக்கு தனது மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார். சிகிச்சை குறித்து பிபிசியிடம் பேசிய மருத்துவர் பச்சானேக்கர், ''முதற்கட்டமாக வீடு வீடாகச் சென்று நோய்ப் பாதிப்புகளைக் கண்டறிந்தோம். இரண்டாவது கட்டமாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகிக்கப்பட்ட நபர்களைத் தனிமைப் படுத்தினோம். மூன்றாவது கட்டமாக மருத்துவர்கள் தங்கள் மருத்துவமனைகளை மீண்டும் இயக்க துவங்கினர். இதன் மூலம் தாராவி கொரோனா வைரஸை வீழ்த்தியது'' என்கிறார்.

''தாராவியில் ஒரு கழிப்பறையை 1200 முதல் 1400 மக்கள் வரை பயன்படுத்துவார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி கழிப்பறை சுத்தம் செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணித்தோம்'' என மருத்துவர் அனில் கூறுகிறார்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

''அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்தது. வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகளுடன் பல நோயாளிகள் வர தொடங்கினர். அவர்களுக்கு தேவையான சிகிச்சையை அரசு மருத்துவமனைகளில் வைத்தே அளித்தோம். மாநகராட்சி நிர்வாகிகளுடன் மருத்துவர்கள் அனைவரும் நல்ல ஒத்துழைப்பு வழங்கினோம்''.

தாராவியில் உள்ள மடுன்கா தொழிலாளர் மையத்தில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

''ஒவ்வொரு மூன்று வீடுகளிலும் ஒரு கொரோனா நோயாளி இருந்தார். ''இந்த பகுதியில் மட்டும் தினமும் 300 பேர் பரிசோதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது அந்த நிலை முழுவதும் மாறியுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது'' என இந்த மையத்தில் பணிபுரிந்த மருத்துவர் நவ்கேட்டன் பேட்நேக்கர் கூறுகிறார்.

தாராவியில் ஹெர்ட் இம்மியூனிட்டி சாத்தியமானதா ?

ஒரு சமூகத்தில் உள்ள பலருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, அனைவருக்கும் குணமடைந்து அதன் மூலம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறனே ஹெர்ட் இம்யூனிட்டி எனப்படும். அதாவது சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத் திறன் உருவாகும். தாராவியில் ஹெர்ட் இம்மியூனிட்டி உருவானதால்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்ததா? இது குறித்து மருத்துவர் பேட்னேக்கர் கூறுகையில், ''கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைய ஹெர்ட் இம்மியூனிட்டி ஒரு காரணமாக இருக்கலாம். அதை நான் மறக்கமாட்டேன். கொரோனா வைரஸால் பாதிக்கப்படாத இளைஞர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற்றிருப்பார்கள்'' என கூறினார்.

கொரோனாவை வென்ற தாராவி- எப்படி சாத்தியமானது ?

பட மூலாதாரம், MAYANKBHAGWAT

தாராவியில் தயாரிக்கப்படும் சரக்குகள் வெளிநாடுகளுக்குக் கூட உற்பத்தி செய்யப்படுகிறது. தாராவியில் ஓர் ஆண்டு வருவாய் 650 மில்லியன் டாலர்கள் என கூறப்படுகிறது. தாராவியில் 5000திற்கும் மேற்பட்ட சிறிய தொழிற்சாலைகள் இயங்குகின்றன. மேலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ஒரே அறையைக் கொண்டு இயங்குகின்றன.

மூன்று மாத ஊரடங்கு உத்தரவால், தாராவியில் அனைத்து தொழிலும் முடங்கின. தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த கிராமங்களுக்குச் சென்றனர்.

தற்போது அங்குள்ள மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சிக்கின்றனர். தாராவியில் உள்ள வியாபாரிகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கடைகளை திறந்து வியாபாரம் மேற்கொள்ளும் முறையை கடைபிடிக்கின்றனர். தோல் மற்றும் துணி தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க துவங்கியுள்ளன.

''தாராவி முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும். தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன; ஆனால் தொழிலாளர்கள் வரவில்லை. பல சரக்குகள் விற்பனைக்குத் தயாராக உள்ளன ஆனால் இன்னும் வியாபாரம் தொடங்கவில்லை. கொரோனா அச்சம் காரணமாக தாராவியில் உள்ள மக்களுக்கு யாரும் வேலை வாய்ப்பு வழங்கத் தயாராக இல்லை. இந்த நிலை மாற வேண்டும். இல்லை என்றால் தாராவி பொருளாதார ரீதியாக மிகுந்த பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்'' என தாராவியில் பணிபுரியும் சமூக செயற்பாட்டாளர் கணேஷ் கூறுகிறார்.

ராக்கி தயாரிப்பாளர்களுக்கு பெரும் இழப்பு

தாராவியில் ராக்கி வாங்குவதற்காக ஆண்டு தோறும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் வருவார்கள். ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக ராக்கி விற்பனை வழக்கம் போல் இல்லை.

கொரோனாவை வென்ற தாராவி- எப்படி சாத்தியமானது ?

பட மூலாதாரம், MAYANKBHAGWAT

''எப்போதும் ராக்கி விற்பனை குறிப்பிட்ட பெளர்ணமி நாளுக்கு முன்பே தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு இன்னும் விற்பனை தொடங்கவில்லை. ஒரு காலத்தில் ராக்கி விற்பனையின் மூலம் 200கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு லாபமே இருக்க வாய்ப்பு இல்லை. தாராவி என்ற பெயரை கேட்டாலே வர்த்தகர்கள் அஞ்சுகின்றனர்'' என 40 ஆண்டுகளாக தாராவியில் வர்த்தகம் மேற்கொள்ளும் அயோத்யா பிரசாத் கூறுகிறார்.

ராக்கி பூர்ணிமா அன்றாவது ராக்கிகள் விற்பனை ஆகும் என்ற நம்பிக்கையுடன் 29 வயதுடைய சந்தீப் தினமும் கடையை திறக்கிறார். ''கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ராக்கி தயாரிப்பதற்கு கூட இந்த ஆண்டு வேலையாட்கள் கிடைக்கவில்லை. எனது சகோதரர்கள் உதவியுடன் தான் ராக்கி தயாரித்து வருகிறேன்'' என்கிறார் தாராவியில் வசிக்கும் சந்தீப்.

இதே போல தான் அசோக் குமாரும் வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருக்கிறார். ''இந்த ஆண்டு ராக்கி தயாரிக்கும் ஊழியர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியவில்லை. ஆகஸ்ட் மாதம் ரக்ஷா பந்தன் பண்டிகை. ஆனால் மக்கள் தங்கள் உறவினர் வீடுகளுக்கு கூட செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் எப்படி பண்டிகை கொண்டாட முடியும். யார் ராக்கி வாங்குவார்கள்? பண்டிகை நாளன்று ராக்கி விற்பனையாகிறதா என காத்திருந்து பார்ப்போம் இல்லை என்றால் கடையை மூடிவிட்டு கிராமத்திற்குத் திரும்பி செல்வோம்'' என அசோக் குமார் கூறுகிறார்.

தாராவியில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் நிலை என்ன ?

தாராவியில் உள்ள தோல் தொழிற்சாலைகள் உலக புகழ் பெற்றது. தாராவியில் தயாரிக்கும் சரக்குகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.

கொரோனாவை வென்ற தாராவி- எப்படி சாத்தியமானது ?

பட மூலாதாரம், MAYANKBHAGWAT

''தோல் உற்பத்தி சரக்குகளுக்கு ஐரோப்பாவில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் தற்போது வர்த்தகம் மேற்கொள்வது சாத்தியம் இல்லை. தொழிற்சாலைகளை மீண்டும் இயக்க தொடங்கியுள்ளோம். மூன்று மாதமாக வேலை இல்லாததால், ஊழியர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். ஆனால் தற்போது கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் தொழிலாளர்கள் திரும்ப வர வாய்ப்புள்ளது. தற்போது 30% ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள். வர்த்தகம் மூலம் லாபம் பெறுவதற்கு மீண்டும் ஓர் ஆண்டு ஆகும்'' என சர்வதேச காலனி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மோகன் கஜகோஷ் கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :