ஆம்பூர் இளைஞர் முகிலன் தீக்குளிப்பு: வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தது காரணமா? என்ன நடந்தது?

போலீசார் இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த காரணத்தினால் திருப்பத்தூரில் இளைஞர் ஒருவர் தீ குளித்துள்ளார்.
என்ன நடந்தது?
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முகிலன்(27). இவர் தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
தமிழக முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், முகிலன் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் மருந்தகம் சென்றுள்ளார்.
ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முகிலன் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் வந்துள்ளார். இதனைக் கண்டு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் முகிலனின் இருசக்கர வாகனத்தைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். பின்னர், அவரது இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இதன்பின் தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்ட முகிலன் காவல் துறையினர் வாகன சோதனை நடத்திய இடம் அருகே சென்று தன்னைத் தானே தீயிட்டுக் கொண்டார்.
இவருடைய அலறல் சத்தம் கேட்ட அருகிலிருந்தவர்கள் விரைந்து சென்று, அவரை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று முதற்கட்ட சிகிச்சை அளித்தனர்.
பிறகு அவருக்கு உடல் முழுவதும் பலத்த தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதால், மேல் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் காமினி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டர்.
தீ குளித்த முகிலனுக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்

வாக்குமூலம்
சாலையில் சென்ற தன்னை காவல்துறையினர் பிடித்ததால் தீயிட்டுக் கொண்டதாக முகிலன் வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
விசாரணை

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அவர்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது. அவர் கூறுகையில், "நடந்த சம்பவத்தில் யார் மீது தவறு இருக்கிறது என்பது குறித்து விசாரணை செய்து வருகிறோம். பொதுவாகவே இது முழு ஊரடங்கு நாள், அவசர தேவைகள் தவிர்த்து யாரும் வெளியே வர அனுமதி கிடையாது. ஆகவே, காரணமின்றி வெளியே வருபவர்களைக் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே, இரு சக்கர வாகனத்தில் வெளியே வந்த முகிலனிடம், காவல் துறையினர் அவரைப் பற்றிய தகவலைப் பெற்றுக்கொண்டு வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். பின்னர், வீட்டிற்குச் சென்ற அவர், தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு, வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து தீ வைத்துக் கொண்டார்.
தற்போது அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அவரை சிகிச்சை செய்தபோது ஆம்பூர் அரசு மருத்துவமனையிலும், வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அவர் மது உட்கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் எதற்காகத் தன்னைத் தானே தீ வைத்துக்கொண்டார் என்பது குறித்து விசாரணை செய்து வருகிறோம்.
மேலும், சிகிச்சை பெற்று வரும் முகிலனுக்கு சிறந்த முறையில் தேவையான அனைத்து சிகிச்சையும் மேற்கொள்ளக் காவல் துறை தரப்பில் அறிவுறுத்தியுள்ளோம்," எனத் தெரிவித்துள்ளார் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












