கொரோனா வைரஸ்: 'தமிழகத்தில் சித்த மருத்துவம் மூலம் 100 % குணமடைகிறார்கள்'- மாஃபா பாண்டியராஜன்

சென்னையில் கடந்த சில நாட்களாக கோவிட் - 19 தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்துவந்தாலும் மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
இந்தப் போக்கை அரசு எப்படி கையாளப் போகிறது, நோயாளிகளுக்கு படுக்கை வசதியில்லை என்ற குற்றச்சாட்டுகள், தேவைப்படுபவர்களுக்கு சோதனைகள் செய்யப்படுவதில்லை என்ற புகார்கள் ஆகியவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன்.
கே. சென்னையில் கடந்த சில நாட்களாக புதிதாக கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படுவது குறைந்திருக்கிறது. என்ன காரணம்?
ப. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஜூன் 1ஆம் தேதி முதல் முன்களப் பணியாளர்களை அதிகரித்துள்ளோம். 22 ஆயிரம் பேர், ஒவ்வொரு மண்டலத்திலும் மூன்று அணிகளாகப் பணியாற்றுகிறார்கள். இதில் 11 ஆயிரம் பேர் பெண்கள். இவர்கள் வீடுவீடாகச் சென்று யாருக்காவது காய்ச்சல் இருக்கிறதா என்று கண்காணிக்கிறார்கள். மேலும் 600 பேர் ஃபோகஸ் வாலன்டியர் என்று செயல்படுகிறார்கள். இவர்கள் கோவிட் - 19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருகிறார்கள்.
மற்றொரு அணியினர் யாரெல்லாம் அதிக அச்சுறுத்தல் உள்ள பிரிவில் இருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் அடையாளம் கண்டு, கண்காணிக்கிறார்கள். சென்னையில் சுமார் 8 லட்சம் பேர் இப்படி அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்.

அடுத்ததாக பெரிய அளவில் சோதனைகளைச் செய்வது. துவக்கத்தில் 2000-2500 என்ற அளவில்தான் சோதனைகள் இருந்தன. தற்போது சென்னையில் மட்டுமே பத்தாயிரத்திற்கும் மேல் சோதனைகள் செய்கிறோம். கடைசி 16 நாட்களில் கடுமையான ஊரடங்கு என்பதால், எல்லோருமே வீட்டில் இருந்தார்கள். அதனால், ஆட்களை அடையாளம் காண்பது எளிதாக இருந்தது.
சிகிச்சையைப் பொறுத்தவரை நான்கு வகையாக அதனைப் பிரித்திருக்கிறோம். முதலில் வீட்டிலேயே சிகிச்சையளிப்பது. இரண்டாவது கோவிட் கேர் சென்டர்களில் சிகிச்சையளிப்பது. மிதமான அறிகுறி இருப்பவர்களுக்கு இங்கே சிகிச்சையளிக்கப்படுகிறது. இங்கேயும் ஆக்ஸிஜன் இணைப்பு அளிக்கப்படுகிறது. ஆனால், 99 சதவீதம் தேவைப்படுவதில்லை.
அடுத்ததாக, கோவிட் ஹெல்த் சென்டர்கள். இங்கு சில வென்டிலேட்டர்கள் இருக்கும். மிதமான அறிகுறியிலிருந்து சற்று தீவிர நிலையில் இருப்பவர்கள் இங்கே சிகிச்சை பெறுகிறார்கள். இதற்கு அடுத்தபடியாக, மிகப் பெரிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள். இங்கு எல்லா மருத்துவர்களும் இருப்பார்கள்.
இது தவிர, தனியார் மருத்துவமனைகளும் இந்நோய்க்கு சிகிச்சையளிக்க ஆரம்பித்துள்ளனர்.
துவக்கத்தில் படுக்கைகள் அளிப்பதில் சிரமம் இருந்தது. இப்போது அந்த பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 25,000 ஆக்டிவ் நோயாளிகள்தான் சென்னையில் இருக்கிறார்கள். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 7 மண்டலங்களில் நோயாளிகள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. தண்டையார் பேட்டையில் 2,400லிருந்து 1,800ஆகக் குறைந்திருக்கிறது. 7 மண்டலங்களில் குறைந்தாலும் 8 மண்டலங்களில் அதிகரித்துவருகிறது. அண்ணாநகர் மண்டலத்தில் 19 சதவீத வளர்ச்சி இருக்கிறது.
முதலில் ராயபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நோய்ப் பரவல் அதிகமாக இருந்தது. இப்போது அங்கு குறைய ஆரம்பித்து, அதற்கு அடுத்த நிலையில் உள்ள அண்ணா நகர் போன்ற பகுதிகளில் அதிகரிக்கிறது. அதையும் கட்டுப்படுத்த முயன்றுவருகிறோம்.
இந்த 14 நாட்கள் ஊரடங்கின் தாக்கத்தால், அடுத்த சில நாட்களில் நோயின் பரவல் குறையும் என நம்புகிறோம். இப்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கிறது. ஆகவே மக்களின் ஒத்துழைப்பு தேவை.
கே. சோதனைகளை அதிகப்படுத்தியிருக்கிறோம் என அரசு சொன்னாலும், பலர் தங்களுக்கு நோய் அறிகுறிகள் இருந்தும் சோதனை எடுக்கப்படுவதில்லை என்கிறார்கள். அறிகுறி இருப்பவர்களுக்கு சோதனை செய்வதில் என்ன பிரச்சனை?
ப. ஒருவருக்கு இருக்கும் அறிகுறிகள் கொரோனா அறிகுறியா என்பதை மருத்துவர்தான் முடிவுசெய்ய வேண்டும். தனியாரிடம் சோதனைகள் செய்வதை நாங்கள் தடுக்கவில்லை. அரசைப் பொறுத்தவரை, கோவிட் - 19 நோயால் தாக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர்களுக்கு அறிகுறி ஏற்பட்டால்தான் சோதனை நடத்தப்படும். தேவையில்லாத பீதியை ஏற்படுத்துவதில் அர்த்தமில்லை.
சோதனைகளை இலக்கு வைத்து செய்தால்தான் சரியாக இருக்குமென நம்புகிறோம். யாருக்காவது மூச்சுத் திணறல் இருந்தால், அவர்களை உடனடியாக சோதனைக்கு உட்படுத்தும் திறன் நமக்கு வந்திருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை 36 ஆயிரம் சோதனைகள் செய்கிறோம் என்றால், இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சோதனைகள் சென்னையில் நடக்கின்றன. ஆனால், தேவையில்லாத சோதனைகள் அநாவசியம் என ஐசிஎம்ஆரும் சொல்கிறது. ஆகவே அந்த வழிகாட்டுதல்படி நாம் நடக்கிறோம்.
இந்தியாவிலேயே அதிக சோதனைகள் இங்குதான் நடக்கின்றன. டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் ஓர் இடத்தைத் தேர்வுசெய்து, அங்கிருப்பவர்கள் அனைவரையும் சோதனை செய்தார்கள். இருந்தபோதும் அவர்களுடைய இறப்பு விகிதம் நம்மைவிட அதிகமாக இருந்தது. இதெல்லாம் நம்முடைய வியூகம் சரியாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. தவிர, சோதனைகள் - பாசிடிவ் விகிதமும் குறைந்துவருகிறது.
டெஸ்ட் கிட், தொழில்நுட்பப் பணியாளர்கள் பற்றாக்குறை என்பது கிடையவே கிடையாது.
கே. கோவிட் - 19 அறிகுறிகளுடன், சில சமயங்களில் அந்நோயுடனேயே மருத்துவமனைகளுக்குச் சென்றாலும் சேர்க்க மறுக்கிறார்கள் என பலரும் சொல்கிறார்கள். நீங்கள் படுக்கை வசதி அதிகரித்திருப்பதாகச் சொல்கிறீர்கள். ஆனால், ஏன் மருத்துவமனைகளில் சேர்க்க மறுக்கிறார்கள்?
ப. மிதமான அறிகுறிகள் இருந்தால் கோவிட் கேர் சென்டர்களில் சேர்க்கிறோம். இதில் பல மையங்களில் பாதி இடம்கூட நிறையவில்லை. சித்தாவுக்கென 224 இடங்கள் போட்டிருக்கிறோம். அதில் 107தான் நிறைந்திருக்கிறது. ஒரு மையம் முழுமையாக நிறைந்தால்தான் அடுத்த மையத்திற்கு சேர்ப்போம். சிலர் தனக்கு மூச்சுத் திணறல் இருப்பதாக சொல்கிறார்கள்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்

ஆனால், ஆக்ஸிமீட்டரில் பார்த்தால், 95க்குக் கீழே இருந்தால்தான் மூச்சுத் திணறல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படியே இருந்தாலும் ஆக்ஸிஜன் மட்டும் கொடுத்தால் போதும். இதைத் தாண்டி, தனக்கு வென்டிலேட்டர் கொடுக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அதனை அங்கே இருக்கும் மருத்துவர்கள்தான் முடிவுசெய்வார்கள்.
எனக்குத் தெரிந்து இடம் கிடைக்காதவர்கள் என யாரும் இல்லை. அப்படி இருந்தால், இதற்கென உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு அழைக்கலாம். சுகாதாரத் துறை செயலரே எளிதில் அணுகும் நிலையில்தான் இருக்கிறார். தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் தகுதியான படுக்கை இல்லை என்ற நிலை இல்லை.
கே. தனக்கு அந்நோய் இருக்கிறது என கருதும் ஒருவர் மருத்துவமனையை அணுகி சேர முடியுமா?
ப. முதலில் சோதனை செய்வார்கள். கோவிட் - 19 தொடர்பான பிரச்சனையா அல்லது வேறு பிரச்சனையா என்பதைப் பார்ப்பார்கள். இப்போது சோதனை செய்து முடிவுகள் வெளிவருவதற்கு இடைப்பட்ட காலம் குறைந்திருக்கிறது. முன்பு மூன்று நாட்கள் ஆகிக் கொண்டிருந்தது. அதனை இரண்டு நாட்களாக்கியிருக்கிறோம்.
கே. தமிழ்நாட்டில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுவதாக அரசு தெரிவிக்கிறது. அந்த சிகிச்சை எப்படி அளிக்கப்படுகிறது? அதில் எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கிறது?
ப. மிகவும் வெற்றிகரமான சிகிச்சையாக இருக்கிறது. இதுவரை 38 பேர் அந்த சிகிச்சையைப் பெற்றிருக்கிறார்கள். கோவிட் - 19 வந்து குணமடைந்தவர்களின் ரத்த பிளாஸ்மாவில் ஆன்டிஜென்கள் இருக்கும். இவை கோவிட் -19ஐ எதிர்க்கக்கூடியவை. ஆகவே குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவை, நோயாளிகளுக்கு ஏற்றுவதன் மூலம் அவர்களையும் குணமடையச் செய்யலாம். இதற்கு ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவைப் பிரிக்க வேண்டும். சென்னையில் பத்து ரத்த வங்கிகளில் அந்த வசதி இருக்கிறது.
ஆனால், இந்த பிளாஸ்மாவை யார் அளிக்க முடியும் என்பதில் கட்டுப்பாடு இருக்கிறது. வேறு நோய்கள் இருப்பவர்கள் இந்த பிளாஸ்மாவை எடுக்க முடியாது. இதுபோல சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதைத் தாண்டி, பிளாஸ்மா எடுக்கக்கூடியவர்களிடமிருந்து அவற்றைப் பெற்று, தீவிர நிலையில் உள்ளவர்களுக்கு அந்த பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்கள், வென்டிலேட்டர் அளவுக்கு தீவிர நிலையில் இருந்து இந்த பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்திருக்கிறார்கள். நோய் வந்து குணமடைந்தவர்களுக்கு 2 மாதங்கள் முதல் 10 மாதங்களுக்கு தீவிரமான எதிர்ப்பு சக்தி இருக்கும்.
கே. தமிழ்நாட்டில் இந்திய மருத்துவ முறைகளிலும், குறிப்பாக சித்த வைத்திய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் பலன் இருக்கிறதா?
ப. நிச்சயம் இருக்கிறது. முதலில் ஜவஹர் எஞ்சினியரிங் கல்லூரியில் டாக்டர் வீரபாகு தலைமையில் 35 பேரை வைத்து சித்த மருத்துவ முறையில் குணப்படுத்தும் மையம் துவங்கப்பட்டது. இப்போது 150 பேருக்கு மேல் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 100 சதவீதம் குணமடைகிறார்கள்.
முதலில், அலோபதி மருத்துவத்தையும் சித்த மருத்துவத்தையும் இணைத்து சிகிச்சையளிக்கலாம் என நினைத்தோம். அதனால் பத்து சித்த மருத்துவர்களோடு 2 அலோபதி மருத்துவர்களும் இணைந்திருந்தார்கள். ஆக்ஸிஜன் தரும் வசதியும் உருவாக்கப்பட்டது. மிதமான நிலையில் நோய்த் தொற்று உடையவர்களே அங்கு அனுப்பப்பட்டார்கள்.
மையம் துவங்கி ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் யாருக்கும் ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலைக்குச் செல்லவில்லை. பெரும்பாலும் 14 நாட்களில் குணமடைந்து வீடு திரும்பிவிடுகிறார்கள். இதையடுத்து லயோலா கல்லூரியிலும் டிஜி வைஷ்ணவா கல்லூரியிலும் சில ப்ளாக்குகளை இதற்கென ஒதுக்கினோம்
. இப்போது நான்காவதாக, முழுமையான சித்தா கோவிட் கேர் மையமாக டாக்டர் அம்பேத்கர் கல்லூரியில் உருவாக்கியிருக்கிறோம். அதில் 224 பேர் சிகிச்சை பெற முடியும். மொத்தமாக சென்னையில் மட்டும் சித்த வைத்திய முறையில் 790 பேர் சிகிச்சைபெற முடியும். இதில் 60 சதவீதம் அளவுக்கு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் ஒரு மையம் உருவாக்கும் திட்டம் இருக்கிறது.
ஒவ்வொரு மண்டலத்திலும் 5 கோவிட் கேர் மையங்கள் இருக்கின்றன. இதில் ஒன்றாவது சித்தா அடைப்படையில் இருக்கும்படி செய்யலாம் என நினைக்கிறோம்.
தவிர, இந்த சித்தா மையங்களில் சிகிச்சை பெற வருவோர்க்கு முதல் நாளில் ஆர்டி - பிசிஆர் சோதனை செய்யும்போது, நோயாளிக்கு எந்த அளவுக்கு வைரஸ் தாக்குதல் இருக்கிறது என்பது கண்டறியப்படுகிறது. இதனை குவான்டிடேட்டிவ் சோதனை என்கிறோம். இதனை மீண்டும் ஏழாவது நாளும் பதினான்காவது நாளும் செய்கிறோம். இதைப் பதிவுசெய்யும்போது சித்த மருத்துவ ஆய்வுக்கான தரவுகள் நமக்குக் கிடைக்கின்றன.
கே. சித்த மருத்துவம் 100 சதவீதம் குணமளித்தால், அந்த மருத்துவ முறையே எல்லோருக்கும் செய்ய வேண்டியதுதானே என்ற கேள்வி எழுப்பப்படுகிறது..
ப. சித்த மருத்துவ முறையின் கீழ் உள்ள நிலையங்களுக்கு மிதமான நிலையில் உள்ள நோயாளிகளையே அனுப்புகிறோம். நிலைமை தீவிரமடைந்தால் அவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுவிடுவோம். முதல் ஐந்து நாட்களுக்குள் நீங்கள் நோயைக் கண்டறிந்துவிட்டால், அது மித நிலையில்தான் இருக்கிறது. இணை நோய்கள் இருப்பவர்கள், சரியாக சிகிச்சையெடுக்காதவர்கள்தான் தீவிர நிலைக்குச் செல்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
அலோபதி மருத்துவத்தில், கோவிட் - 19க்கு முதலில் விட்டமின்கள், ஸிங்க் ஆகிய மாத்திரைகள்தான் வழங்கப்பட்டன. இப்போதுதான் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளான ரெம்டெசிவிர் போன்ற மருந்துகள் வந்துள்ளன. சித்தாவைப் பொறத்தவரை பிளாஸ்மா, வென்டிலெட்டர் ஆகியவற்றைக் கொடுக்க முடியாது. அந்த நிலை வரும்போது நவீன மருத்துவ முறைகளுக்குச் சென்றுவிடுவோம்.
சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை அதில் உள்ள மருந்துகள் முறையாக ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை என்பது உண்மைதான். உதாரணமாக கபசுர குடிநீர் என்ற மருந்துக்கு empirical trial செய்யப்படவில்லை. அதாவது, அந்த மருந்தால் மட்டும் குணமாகியதா என்ற ஆய்வு செய்யப்படவில்லை. இந்த மருந்துகள் குறைந்த கால அளவில் நமது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவல்லவை. நவீன மருத்துவத்திலும் துவக்கத்தில் அதைத்தானே செய்தோம்.
எங்களைப் பொறுத்தவரை, இது ஒரு பாதுகாப்பான வைத்திய முறை. மக்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது. இதுவரை மிதமான நிலையில் உள்ள நோயாளிகளை எடுத்திருக்கிறோம். ஹோமியோபதியில் ஆர்சனிக் ஆல்பம் மருந்தை அளிக்கிறோம். சிலர் அதை எடுத்துக் கொள்கிறார்கள். முடிந்தவரை பல மருத்துவமுறைகளை இணைந்து அளிக்க முயற்சிக்கிறோம். அதனால்தான். தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் 1.3 சதவீதம் என்ற குறைந்த நிலையில் இருக்கிறது.
கே. எதிர்காலத்தில் ஆய்வுகளுக்கு பயன்படக்கூடிய வகையில் சித்த மருத்துவத்தில் குணமடைந்தவர்கள் குறித்த தரவுகள் சேகரிக்கப்படுகின்றனவா?
ப. சமீப காலமாக அந்தத் தரவுகளைச் சேகரிக்க ஆரம்பித்திருக்கிறோம். வழக்கமாக ஆர்டி - பிசிஆர் தேர்வுகளில் கொரோனா இருக்கிறதா, இல்லையா என்ற சோதனை மட்டும்தான் செய்யப்படும். ஆனால், எந்த அளவுக்கு வைரஸ் இருக்கிறது என்பது தெரிய வேண்டுமானால் குவான்டிடேட்டிவ் சோதனை செய்ய வேண்டும்.
அதற்கு ரத்தப் பரிசோதனையும் செய்ய வேண்டும். மூக்கிலிருந்து மாதிரிகளையும் சேகரிக்க வேண்டும். இந்தச் சோதனைகளில் கிடைக்கும் முடிவுகளை, 7 வகையாக பரிசீலிக்க வேண்டும். இந்த வசதி சமீபத்தில் செய்யப்பட்டிருக்கிறது. ஐசிஎம்ஆர் விதிகளின்படி, 10 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் இல்லையெனில் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுவிடலாம்.
ஆனால், சித்த மருத்துவம் என்த அளவுக்குப் பலனளிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக முதலாவது நாள், ஏழாவது நாள், 14வது நாள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, வைரஸ் எந்த அளவுக்குக் குறைந்திருக்கிறது என்பதை தரவுகளாகச் சேகரிக்கிறோம். இதில் செலவு அதிகம்தான். ஆகவே இதற்கான செலவை, ஆய்வுச் செலவாக ஒதுக்கித் தர வேண்டுமென சித்த மருத்துவர்கள் கேட்டிருக்கிறார்கள்.
தற்போது சோதனை முறையில் டாக்டர் அம்பேத்கர் கல்லூரியில் உள்ள முகாமில் இந்த முறையில் சோதனை செய்கிறோம். கோயம்புத்தூரிலும் இதுபோல சோதனைகள் செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.
கே. சென்னையில் கொரோனா பரவல் குறைவதாக எண்கள் சொல்கின்றன. ஆனால், மாநகராட்சி சார்பில் வெளியிடப்படும் விவரங்களில் முன்பைப் போல மொத்த எண்ணிக்கை வெளியிடப்படுவதில்லை. மாற்றத்திற்கு என்ன காரணம்?
ப. தேவையில்லாத பீதி உருவாகிறது என்பதுதான் காரணம். மொத்த நோயாளிகள் என்று குறிப்பிட்டு, அதற்குள் குணமடைந்தவர்கள், பலியானவர்கள் எண்ணிக்கையையும் சேர்த்துச் சொல்வது தவறு. அதனால், முந்தைய தினத்தின் ஆக்டிவ் நோயாளிகள், புதிய நோயாளிகள், அன்று குணமடைந்தவர்கள், அன்று இறந்தவர்கள், முடிவில் அன்றைய தினத்தின் ஆக்டிவ் நோயாளிகள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையை மட்டும் தருகிறோம். ஒட்டுமொத்த எண்ணிக்கை தேவைப்படுபவர்கள் கூட்டிப்பார்த்துக் கொள்ளலாம். அதனை மொத்த நோயாளிகள் எண்ணிக்கை எனச் சொல்லக்கூடாது. மொத்தம் அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்தி 11 ஆயிரம் பேருக்கு தொற்று என்று வைத்துக்கொண்டால்கூட, அது எட்டரைக் கோடி மக்கள் தொகையில் எத்தனை சதவீதம்? ஆனால், தற்போது 44 ஆயிரம் பேர்தான் ஆக்டிவ் நோயாளிகள். 2000ல் ஒருவர் என்று வரும். இந்தத் தகவலைத்தான் தருகிறோம். எந்த தரவுகளையும் மறைக்கவில்லை.
ஒவ்வொரு நாள் இறந்தவர்களைப் பற்றியும் இவ்வளவு தகவல்கள் தருவது தமிழக அரசு மட்டும்தான். இந்தியாவிலேயே மிக வெளிப்படையாக இருப்பது தமிழ்நாடுதான்.
கே. அரசின் எல்லாத் தரப்பிடமும் கேட்கப்படும் கேள்வி, கொரோனா பரவல் தமிழ்நாட்டில் சமூகப் பரவல் என்ற நிலையை அடைந்துவிட்டதா என்பதுதான். உங்களிடமும் அதே கேள்வியைக் கேட்கிறேன்.
ப. இந்த சமூகப் பரவல் என்பதே மிகவும் தவறாக நிர்ணயிக்கப்படும் ஒரு முறை. அதாவது, ஒருவருக்கு பாசிடிவ் என்று வந்தால், அது யார் மூலம் வந்தது என்பதை கண்டறிய முடியாவிட்டால், அதை சமூகப் பரவல் என்கிறார்கள். ஆனால், இதை யார் வரையறுத்தது? யார் நிரூபித்தது?
சமூகப் பரவல் ஏற்பட்டுவிட்டது என்பதை யார் உறுதிப்படுத்துவார்கள்? உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதியாக இங்கே ஐசிஎம்ஆர் இருக்கிறது. மாவட்ட அளவில்கூட ஐசிஎம்ஆரின் மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் எல்லாத் தகவல்களையும் கட்டுப்படுத்துகிறார்கள். அவர்கள் இதுவரை சமூகப் பரவல் இருப்பதாகச் சொல்லவில்லை. 2000 பேருக்கு ஒருவருக்கு நோய் இருக்கும்போது அதனை சமூகப் பரவல் என எப்படிச் சொல்ல முடியும்?
தாராவியில் சமூகப் பரவல் ஏற்பட்டதை எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள். இங்கே கோயம்பேடு தொகுப்பு என்று சொன்னாலும்கூட, அந்த கோயம்பேடு அமைந்துள்ள கோடம்பாக்கம் மண்டலத்தில் நோய்ப் பரவல் குறைவாகத்தானே இருக்கிறது?
சமூகப்பரவல் என்றால், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொத்துக்கொத்தாக இறந்தார்களே.. அதுதான் சமூகப் பரவல். இங்கே இந்த வார்த்தை, எதிர்க்கட்சி ஆளுங்கட்சியை அடிக்கப் பயன்படும் குச்சியாக பயன்படுத்துகிறார்கள். இங்கே அந்த வார்த்தைக்கே அர்த்தமில்லையென நினைக்கிறேன்.
கே. சென்னையில் மருத்துவக் கட்டமைப்பு பலமாக இருப்பதால் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க முடிகிறது. இப்போது மாவட்டங்களிலும் அதிகரிக்கிறது. என்ன செய்யப் போகிறீர்கள்?
ப. கடந்த ஒரு வார கால தகவல்களை எடுத்துப் பார்த்தால், 37 மாவட்டங்களில் பத்து மாவட்டங்களில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை புதிய நோயாளிகள் எண்ணிக்கையைவிட அதிகமாகத்தான் இருக்கிறது. எல்லா மாவட்டத்திற்குமென ஒரு திட்டத்தை வகுக்கக்கூடாது. அந்தந்த மாவட்டத்திற்கென தனித்துவம்மிக்க ஒரு மாதிரியை உருவாக்க வேண்டும். சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு நோய் பரவியது என்பது உண்மையில்லை. பொது மக்களின் ஒத்துழைப்பு இருந்தால், இந்தப் பரவலை தடுக்க முடியுமென நம்புகிறேன்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சரை நியமித்து அல்லது அங்கு உள்ள மூத்த சட்டமன்ற உறுப்பினருக்கு பொறுப்பைக் கொடுத்து செயல்படுத்தலாம். அதிகாரவர்க்கத் தலைமையைத் தாண்டி அரசியல் தலைமை என்பது மிக முக்கியம். ஏனென்றால், எல்லாமட்டத்திலும் நினைத்ததை செயல்படுத்த முடியும்.
கே. எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் கொடுத்தாலும் அவற்றை நீங்கள் ஏற்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் மு.க. ஸ்டாலின். உங்கள் பதில் என்ன?
ப. அவரிடம் ஆலோசனைகள் இருப்பதில்லை. குற்றம்சாட்டுதல்தான் இருக்கிறது. அதிலும் பல சமயங்களில் ஆதாரமே இல்லாமல் இருக்கிறது. நோய் ஏற்பட்டவர்களுக்கு முக்கியமான ஆயுதம் நம்பிக்கை. அந்த நம்பிக்கையைக் குலைக்கிறார்கள். பிரச்சனைகள் இருந்தால், அமைச்சர்களிடம் நேரடியாக சொல்லலாம். ஆனால், அறிக்கைதான் விடுகிறார்கள்.

பட மூலாதாரம், MK stalin facebook page
தண்டையார்பேட்டையில் எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோர் தி.மு.கதான். அவர்கள் எங்களோடு சேர்ந்து பணியாற்றலாம் என்று சொல்லிவிட்டோம். ஒரு மாதம் ஆகிவிட்டது. இதுவரை ஒரு தடவைகூட வரவில்லை. அமைச்சர்களோடு இணைந்து வேலை பார்க்கலாமே. தொண்டர்கள் வீடுவீடாகச் சென்று கபசுர குடிநீர் கொடுக்கலாமே. அப்படி ஒன்றிரண்டு பேர் வந்திருக்கிறார்கள்.
அவர்கள் விடுத்த அறிக்கைகளில் சாரம் இருந்தால் முதல்வரே நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
கே. ஊரடங்கை முன்கூட்டியே அமல்படுத்தியிருக்கலாம் என்று தி.மு.க. சட்டமன்றத்திலேயே தெரிவித்தது. அதைச் செய்திருந்தால் இவ்வளவு பெரிய அளவில் பரவல் ஏற்பட்டிருக்காது அல்லவா..
ப. அதே தி.மு.கதான் கூடுதலாக ஏன் ஊரடங்கு விதித்தீர்கள் என்று கேட்கிறது. ஒவ்வொரு நேரத்திலும் ஒரு கணிப்பு இருக்கும். அந்த நேரத்தில் இருந்த கணிப்பு, இந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது என்று நினைத்தார்கள். இங்கே வந்த வைரஸ், திடீர் மாற்றத்தால் வலுவிழந்திருக்கிறது; இந்தியாவில் இளைஞர்கள் அதிகம் என்றெல்லாம் சொன்னார்கள். இதே ஐசிஎம்ஆர் இந்தியாவில் பெரிய தாக்கம் இருக்காது என்றது. ஆனால், அதே நேரம் ஊரடங்கு விதித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றார்கள். அதனால்தான் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தால் போதுமென நினைத்தார்கள். அதனால்தான் மார்ச் 24ஆம் தேதிவரை மத்திய அரசு ஊரடங்கு விதிக்கவில்லை.
மத்திய அரசு சொல்வதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பே அறிவித்துவிட்டோம். நாங்கள் ஊரடங்கு விதிக்கச் சொன்னோம் என்கிறார் ஸ்டாலின். ஆனால் அதே காலகட்டத்தில் சிறுபான்மையினர் கூட்டத்தில் நின்று பேசுகிறார். அது மட்டும் எப்படி சாத்தியம்?
சட்டமன்றத்தில் அப்போது மானியக் கோரிக்கை நடந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் திட்டங்களை அறிவித்தோம். அதனால்தான் அவர்கள், அப்போது ஊரடங்கு கேட்டார்கள். ஆனால், பிரதமர் சரியான நேரத்தில் ஊரடங்கை அறிவித்தார். அதை நாம் பின்பற்றினோம்.
பின்னால் என்ன நடக்குமென தெரிந்தால், உலகத்தில் இவ்வளவு பேரை சாக அனுமதித்திருப்பார்களா? ஊரடங்கு என்பது அரசியல் ரீதியாக எடுக்கப்படுவதில்லை. நிபுணர்களின் முடிவை வைத்து எடுக்கப்படுகிறது.
கே. கொரோனா பாதிப்பை கையாளும்விதம் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா?
ப. நிச்சயம் எதிரொலிக்கும். காரணம், நாங்கள் கடினமாகப் பணியாற்றுகிறோம். இது மக்களுக்கே தெரியும். எவ்வளவு சிரமத்திற்கு நடுவில் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன என்பது மக்களுக்குத் தெரியும். மு.க. ஸ்டாலினின் விமர்சனங்களை மக்கள் ஏற்க மாட்டார்கள். பிற இடங்களில் ஏற்பட்டுள்ள தாக்கம் மக்களுக்குத் தெரியும்.
ஆகவே, நோயை நாங்கள் எதிர்கொண்ட விதம் குறித்து தாக்கம் இருக்கும். அது எங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












