தடை செய்யப்பட்ட பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்: அந்த அமைப்பு குறித்த மக்களின் கருத்து இதுதான்

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில், தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் வழக்கில், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை சேர்ந்த இளைஞர்களும் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த வழக்கில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி சார்பு ஆய்வாளராக இருந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய ஐந்து பேர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தடை
சாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து, தூத்துக்குடி மட்டுமல்லாது, நெல்லை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு சேர்ந்தவர்கள் காவல்துறையுடன் பணியாற்றுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசும்போது, வணிகர்கள் மற்றும் மக்கள் இடையே இணைந்து காவலர்களுக்கு உதவியாகதான் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் காவலர்களின் பணிகளான கண்காணிப்பு பணி மற்றும் ரோந்து பணிகளில் அவர்களை ஈடுபடுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சட்டத்தை மீறி பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் காவலர்கள் செயல்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்
தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அமைப்பின் மூலம், காவல்துறையுடன் இணைந்து ரோந்து, வாகன தணிக்கை போன்ற பணிகளில் இளைஞர்கள் ஈடுபட்டுவந்தனர்.
பிரதீப் பிலிப் என்ற ஐபிஎஸ் அதிகாரி 1993ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.பி.யாக இருந்தபோது பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை உருவாக்கினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1994ல் தமிழகம் முழுவதும் இந்த அமைப்பை விரிவுபடுத்தினார்.
இந்த நிலையில், 'பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' குறித்து பிபிசியின் வாதம் விவாதம் பகுதியில் நேயர்களிடம் கருத்து கேட்டிருந்தோம்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
வாதம் விவாதம்
சாத்தான்குளம் சம்பவத்துக்குப் பின் 'பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' மீது விமர்சனம் அதிகரிக்கிறது.

"இந்த அமைப்பு, போலீசுக்கு நியாயமான கடமைகளில் உதவியாக உள்ளதா? ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய முறையில் இயங்குகிறதா?," என கேட்டிருந்தோம்.
அதற்கு பிபிசி நேயர்கள் பகிர்ந்த கருத்துகளை இங்கே தொகுத்துள்ளோம்.
"காவல் துறையே மக்களின் நண்பன் என்றால் பின்ன. அவர்களுக்கு நண்பர்கள் எதற்கு?," என கேள்வி எழுப்புகிறார் அருள் சேவியர்.
'பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' என்பதற்கு பதில் 'பிரண்ட்ஸ் ஆஃப் பீப்பிள்' என பெயர் மாற்றுங்கள் என்று பதிவிட்டுள்ளார் ஆண்டனி.
"இதுபோன்ற துணை அமைப்புகள் இருப்பதில் தவறில்லை. அவற்றை முறைப்படுத்துவதே சரியானது. நிர்வாகம் சரியாக இருந்தால் எந்த ஊழியர்களும் விதிமுறைகளை மீற முடியாது," என பதிவிட்டுள்ளார் சம்பத்குமார்.
"முதலில் யார் இவர்கள், காவலர்கள் எதற்கு இருக்கிறார்கள், அவர்களுக்கு இவர்கள் எதற்கு உதவ வேண்டும். காவலர்கள் தங்கள் கடமையை/ வேலையை செய்ய இவர்கள் எதற்கு?," என கேள்வி எழுப்பிகிறார் பஷீர்
"இது முற்றிலும் தடை செய்ய வேண்டிய ஒரு அமைப்பு," என கருத்து பகிர்ந்துள்ளார் சிவனேசன்.
"ஆட்சியிலிருப்பவர்கள் போலீஸை தங்களின் வேலையாளாகத்தான் கையாளுகின்றனர் என்பதுதான் உண்மை," என்கிறார் குமரகுரு.
அனைத்து கருத்துகளையும் படிக்க, மற்றும் உங்கள் கருத்தை தெரிவிக்க:
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












