கொரோனா வைரஸ்: இந்தியாவில் கோவேக்சின் தடுப்பு மருந்து ஆகஸ்டு 15ல் கிடைப்பது சாத்தியமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மயங்க் பகவத், தீப்தி பத்தினி
- பதவி, பிபிசி
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை வரும் ஆகஸ்டு 15ஆம் தேதி பயன்பாட்டுக்கு கொண்டுவர இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உருவாக்கும் பணியில் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் என்னும் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கொரோனா தடுப்பு மருந்தை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி அதில் வெற்றிகண்டால் அதை இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15 அன்று பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கூறுகிறது.
இந்த கொரோனா தடுப்பு மருந்துக்கான மருத்துவ சோதனைகளை மேற்கொள்வதற்கு இந்தியா முழுவதும் 12 மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஜூலை 7ஆம் தேதி மருத்துவ பரிசோதனைகளை தொடங்குவதற்கு தேவையான அனுமதிகளை விரைந்து பெறுமாறு தேர்ந்தெடுக்கப்பட்ட 12 மருத்துவமனைகளுக்கு கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவ் கடிதம் ஒன்றை எழுதினார்.
"இந்தியாவில் ஐ.சி.எம்.ஆர் தயாரித்த கொரோனா தடுப்பு தடுப்பு மருந்தை விரைவாக பரிசோதிக்க பாரத் பயோடெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்றை ஏற்படுத்தும் கொரோனா வைரஸிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒரு விகாரத்தின் உதவியுடன் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது" என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"எல்லா பரிசோதனைகளையும் முடித்து, வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த தடுப்பு மருந்தை பொது பயன்பாட்டுக்கு கொண்டுவர ஐ.சி.எம்.ஆர். திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை பாரத் பயோடெக் நிறுவனம் போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள, ஆய்வு மையங்களின் ஒத்துழைப்பு இல்லாமல், இந்த இலக்கை எட்ட முடியாது. எனவே இந்த திட்டத்துக்குத் தேவையான எல்லா அனுமதிகளையும் விரைவாக அளிக்கவேண்டும். தன்னார்வலர் தேர்வு ஜூலை 7-ம் தேதிக்குள் தொடங்கவேண்டும். ஒத்துழைக்க மறுப்பது தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும் " என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்த காலக்கெடுவுக்குள் பரிசோதனைகளை முடிப்பது சாத்தியமா என்று கேட்டும், பரிசோதனை முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயிப்பது எப்படி சாத்தியம் என்று கேட்டும் பரவலான விமர்சனங்களை எதிர்கொண்டது இந்தக் கடிதம்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கோவிட்-19 தடுப்பு மருந்தை பரிசோதனை செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்:
- கிங் ஜார்ஜ் மருத்துவமனை, விசாகப்பட்டனம்
- பி.டி. சர்மா பிஜிஐஎம்எஸ், சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம், ரோஹ்தக்
- அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்), டெல்லி
- அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்), பாட்னா
- ஜீவன் ரேகா மருத்துவமனை, பெல்காம், கர்நாடகா
- கில்லூர்கர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நாக்பூர், மகாராஷ்டிரா
- ராணா மருத்துவமனை, கோரக்பூர்
- எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி-மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், செங்கல்பட்டு, தமிழ்நாடு
- நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவனம், ஹைதராபாத், தெலுங்கானா
- டாக்டர். கங்காதர் சாஹு, புவனேஷ்வர், ஒரிசா
- பிரகார் மருத்துவமனை, கான்பூர், உத்தரபிரதேசம்
- டாக்டர். சாகர் ரெட்கர், ஓஷல்பாக், கோவா

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஆகஸ்டு 15ஆம் தேதி கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவித்துள்ளது தொடர்பாக பிபிசியிடம் பேசிய மகாராஷ்டிர அரசின் கொரோனா தடுப்பு குழுவின் உறுப்பினரான மருத்துவர் ஷஷாக் ஜோஷி, "இவ்வளவு குறுகிய காலத்தில் கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்வதற்கு சாத்தியமே இல்லை. தடுப்பு மருந்து உருவாக்கத்தை எவ்வளவு துரிதப்படுத்தினாலும் அதனை செய்து முடிக்க குறைந்தது 12-18 மாதங்களாகும். அதைவிட குறைவான காலத்தில் தடுப்பு மருந்தை தயாரிப்பது என்பது சாத்தியமில்லாத காரியம்" என்று பிபிசியிடம் கூறினார்.
"தடுப்பு மருந்தை தயாரிக்கும் போது சில படிகளை அவசியம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக மனிதர்களிடத்தில் பரிசோதனை செய்யும்போது மிகவும் அவசியமான விடயங்களை நாம் புறக்கணிக்க முடியாது. இந்த முக்கியமான படிகளைத் தவிர்த்து ஒரு தடுப்பு மருந்தை தயாரிக்கக்கூடாது. இதை உறுதிசெய்ய வெளிப்புற தணிக்கை மேற்கொள்ளப்படுவதை ஐ.சி.எம்.ஆர் உறுதி செய்ய வேண்டும்," என்று டாக்டர் ஜோஷி கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
"ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் ஒரு தடுப்பு மருந்தை தயாரித்து பொது பயன்பாட்டிற்காக கொண்டுவர ஐசிஎம்ஆர் எடுத்த முடிவு மிகவும் ஆச்சரியமளிக்கிறது. இதைச் செய்யும்போது பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த சரியான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த முடிவை அறிவிப்பதற்கு முன் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஐ.சி.எம்.ஆர் எடுத்துள்ளது என்று நம்புகிறேன். இதையெல்லாம் பின்பற்றி தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டால் அதை நாம் வரவேற்கலாம்."
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய, சர்வதேச பயோ எத்திக்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சுகாதார ஆராய்ச்சியாளருமான டாக்டர் அனந்த் பன், "மருத்துவ சோதனைக்கு முந்தைய நிலையை கூட முழுமையாக நிறைவு செய்யாத ஒரு தடுப்பு மருந்தை எப்படி ஜூலை 7ஆம் தேதிக்குள் மருத்துவ சோதனை செய்வதற்கு பதிவுசெய்ய முடியும்? ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் அதை பயன்பாட்டுக்கு கொண்டுவருவது எப்படி சாத்தியம்? தடுப்பு மருந்து தொடர்பான சோதனைகளை ஒரு மாதத்திற்கும் குறைவான காலப்பகுதியில் முடிக்க முடியுமா? கோவிட்-19 தடுப்பு மருந்து சோதனையில் பங்கேற்கும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும்போது என்னென்ன அளவுகோல்கள் பின்பற்றப்பட்டன? இத்தகைய பரிசோதனைகளுக்கு இந்த மருத்துவமனைகள் தகுதியுள்ளவையா? அவர்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள்?" என்று அவர் எண்ணற்ற கேள்விகளை எழுப்புகிறார்.
"தடுப்பு மருந்து சோதனைக்கான அனைத்து முறையான செயல்முறைகளையும் ஜூலை 7ஆம் தேதிக்குள் முடிக்க மருத்துவமனைகளுக்கு வலியுறுத்தி ஜூலை 2ஆம் தேதி கடிதம் எழுதப்பட்டது. அதாவது, வெறும் ஐந்தே நாட்களில் மருத்துவ சோதனையில் பங்கேற்க தேவையான தன்னார்வலர்களை திரட்ட முடியுமா? இதற்கு நெறிமுறைகள் குழு அனுமதி அளிக்குமா" என்று அவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கிறார்.
பாரத் பயோடெக் நிறுவனம் என்ன சொல்கிறது?
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இந்த கடித்தை வெளியிடுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சுசித்ரா எல்லாவிடம் பிபிசி தெலுங்கு சேவையின் செய்தியாளர் தீப்தி பத்னி பேசினார்.
"மனிதர்களை கொண்டு மேற்கொள்ளப்படும் மருத்துவ சோதனையின் முதல் கட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுவார்கள். இதில் அனைத்து சர்வதேச வழிகாட்டுதலும் பின்பற்றப்படும். மேலும், தன்னார்வலர்களின் தேர்வு உன்னிப்பாக கண்காணிக்கப்படும். முதல் கட்டமாக கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்படாதவர்களை கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதன் முடிவுகள் குறித்து தெரியவர குறைந்தது 30 நாட்கள் ஆகும்" என்று அவர் கூறினார்.
"புவியியலும் எதிர்வினையின் ஒரு பகுதியாக இருக்குமா என்பது எங்களுக்குத் தெரியாது. எனவே, நாடு முழுவதிலுமிருந்து தன்னார்வலர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். முதல்கட்ட சோதனை முடிவின் தரவை தொகுப்பதற்கு 45-60 நாட்கள் ஆகும். தன்னார்வலரிடமிருந்து இரத்த மாதிரியை எடுத்த பிறகு சோதனை காலத்தை குறைக்க முடியாது. சுமார் 15 நாட்களுக்கு பிறகே முடிவுகள் தெரியவரும்."

பட மூலாதாரம், Getty Images
"முதல்கட்ட சோதனையின் முடிவை அடிப்படையாக கொண்டு இரண்டாம் கட்ட சோதனையை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்படும். இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு தேவையான பணிகளை நாங்கள் இப்போதே முடுக்கிவிட்டுள்ளோம்."
"விலங்குகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தடுப்பு மருந்து நல்ல பலனை கொடுப்பது தெரியவந்துள்ளது. அதேபோன்று மனிதர்களிடத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சோதனையிலும் நல்ல முடிவுகள் கிடைக்குமென்று நினைக்கிறோம். சோதனை மூலம் படிப்படியாக கிடைக்கும் தரவுகளை அடிப்படையாக கொண்டு அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் பெரிய அளவில் உற்பத்தியை மேற்கொள்ள முடியுமென்று நாங்கள் நம்புகிறோம்" என்று அவர் கூறினார்.
இருப்பினும், கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்டு மாதம் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளதாக வெளியிட்ட தகவல் தொடர்பாக கருத்துத் தெரிவிப்பதற்கு அவர் மறுத்துவிட்டார்.
மருத்துவ சோதனையின் செயல்முறை
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்தை சோதனை செய்வதற்காக இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 12 மருத்துவமனைகளில் நாக்பூரில் உள்ள கில்லூர்கர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் ஒன்று. இந்த நிலையில் இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய அந்த மருத்துவமனையின் மருத்துவர் சந்திரசேகர், "தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களை கொண்டு இந்த தடுப்பு மருந்துக்கான சோதனை மேற்கொள்ளப்படும். இந்த கொரோனா தடுப்பு மருந்து சோதனை குறித்த விடயங்களை விளக்கி அதற்கு சம்மதம் தெரிவிப்பவர்கள் மட்டுமே சோதனையில் பங்கெடுக்க அனுமதிக்கப்படுவார்கள்" என்று அவர் கூறினார்.
"தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்கள் ஆரோக்கியமானவர்கள் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த சோதனை 18 வயது முதல் 55 வயது வரையிலானோர் மீது மேற்கொள்ளப்படும். கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் தென்படாதவர்கள் மற்றும் கோவிட் ஆன்டிபாடிகள் இல்லாதவர்கள் ஆகியோர் இந்த சோதனைகளில் சேர்க்கப்படுவார்கள். தன்னார்வலருக்கு இதய நோய், சிறுநீரக பிரச்சனைகள், கல்லீரல் பிரச்சனைகள் அல்லது வேறு எந்த நோயும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே இந்த தடுப்பு மருந்து அவர்களுக்கு செலுத்தப்படும்" என்று டாக்டர் சந்திரசேகர் கூறினார்.
"முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைக்கு நூற்றுக்கணக்கானோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதல்கட்ட சோதனையில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர்களுக்கு அதனால் ஏதாவது பக்கவிளைவுகள் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறதா என்பது கண்காணிக்கப்படும்."
"முதல் முறையாக தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட 14ஆம் நாளன்று அவர்களுக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பு மருந்து வழங்கப்படும். இதன் மூலம் தன்னார்வலர்களின் உடல்கள் ஏதேனும் ஆன்டிபாடிகள் எனப்படும் எதிர்ப்பான்களை உற்பத்தி செய்கிறதா என்று சோதிக்கப்படும். மேலும் நோயெதிர்ப்பு திறன் சரிபார்க்கப்படும். பின்னர் 28 மற்றும் 50 நாட்களில் அவர்களுக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்."
ஐ.சி.எம்.ஆர். விளக்கம்
மனிதர்களிடம தடுப்பு மருந்துகொடுத்து பரிசோதனை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மையங்களுக்கு, ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் மருந்தை வெளியிடும் வகையில் ஆராய்ச்சியை விரைவாக நடத்தவேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் எழுதிய கடிதம் சர்ச்சையானவுடன், இது குறித்து அக்கழகத்தில் இருந்து வெளியான செய்திக்குறிப்பில், தேவையில்லாத நிர்வாகத் தாமதத்தை தவிர்ப்பதுதான் நோக்கம். தேவையான எந்த நடைமுறையையும் தவிர்க்காமல் பரிசோதனைக்கு தடுப்பு மருந்து போட்டுக்கொள்வதற்கான தன்னார்வலர்களை அடையாளம் காணும் பணி விரைவாக முடிக்கப்படவேண்டும் என்று கூறுவதுதான் அந்த கடிதத்தின் நோக்கம் என்று விளக்கம் அளித்துள்ளது ஐ.சி.எம்.ஆர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2

தடுப்பு மருந்தின் பெயரென்ன?
ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பெயர் 'கோவாக்சின்'. இந்த தடுப்பு மருந்தை மனிதர்களிடத்தில் பரிசோதிப்பது தொடர்பான அறிவிப்பை முதல் முறையாக கடந்த ஜூன் 29ஆம் தேதி ட்விட்டர் வாயிலாக அந்த நிறுவனம் வெளியிட்டது.
தங்களது நிறுவனம் இந்த தடுப்பு மருந்தை தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் தயாரித்ததாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












