You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா ஊரடங்கு: மீண்டும் கடலுக்கு செல்லும் மீனவர்கள்; ஏற்றுமதியில் சிக்கல்
எண்பது நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர் தமிழக மீனவர்கள். கொரோனா ஊரடங்கால் மீன்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனால், மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மீன் இனப்பெருக்க தடைகாலம்:
மீன் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் ஜீன் 15 வரையிலான 60 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அரசு தடைவிதித்துள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை தமிழக அரசு 45 நாட்கள் மட்டுமே மீன்பிடி தடைகாலமாக கடைபிடித்து வந்தது. ஆனால், கடந்த 2017 முதல் அரசு 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக நடைமுறைப்படுத்தியது. தடைக் காலங்களில் 13 மீன்பிடி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5,600 விசைபடகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு கரையோரம் நிறுத்தப்படும்.
இந்தாண்டு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அரசு தடைவிதித்து இருந்தது. இதனை தொடர்ந்து ஏப் 15 முதல் ஜீன் 15 வரையிலான 60 நாட்கள் மீன் இனப் பெருக்க காலமாக கருதி வழக்கமான அரசின் தடை அமலுக்கு வந்தது.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மத்திய அரசு உத்தரவின் பேரில் தமிழக அரசு ஜுன் 1ந்தேதி முதல் மீன்பிடிக்கச் செல்ல அனுமதியளித்தது.
கொரோனா - 80 நாட்களுக்கு மேலாக மீன்பிடிக்கமல் இருந்த மீனவர்கள்:
இது தொடர்பாக ஆலோசித்த வடக்கு கடலோர மாவட்ட (நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி) மீனவர்கள் ஊரடங்கு காலத்தில் படகுகளை பழுது பார்க்க பணியாளர்கள் கிடைக்காததால், படகு உரிமையாளர்கள் பெரும்பாலானோர் படகுகளை மராமத்து பணி செய்யாமல் இருந்தனர்.
மேலும் வெளிநாட்டு மீன் ஏற்றுமதி தொடங்காததால் மீனவர்களுக்கு அதிக வருவாய் ஈட்டி தரக்கூடிய இறால் மீன்களை கொள்முதல் செய்ய தனியார் மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் மறுத்தன. எனவே ஜூன் 1ம் தேதி மீன்பிடிக்கச் சென்றால் மீனவர்களுக்கு பயனில்லை என மீனவர்கள் அரசு அறிவித்த ஜூன் 1ம் தேதிக்கு பதிலாக ஜூன் 15ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்ல முடிவு செய்தனர்.
இந்நிலையில் நாகப்பட்டிணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் மல்லிபட்டிணத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இறால் மீன் ஏற்றுமதியாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஜுன் 13ம் தேதி முதல் இரவு நேரத்தில் மட்டும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல போவதாக தீர்மானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மதியம் தமிழக அரசால் வழங்கப்படும் மீன் பிடி அனுமதி சீட்டை மீன் வளத்துறை அதிகாரிகளிடம் பெற்ற மீனவர்கள் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து விசைப்படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
மீன்பிடி தடை காலத்தில் மீன்கள் அதிகளவு இனப்பெருக்கம் செய்யும்:
கொரோனா ஊரடங்கு மற்றும் மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாததால் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடல் பகுதிகளில் மீன் வளம் மட்டும் அல்லாமல் பவளப் பாறைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்கின்றனர் கடல் உயிரின ஆராய்ச்சியாளர்கள்.
இது குறித்து மண்டபம் மத்திய கடல் மீன் வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி ஜெயக்குமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், மீன் பிடி தடை காலங்களில் மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் விசைப்படகுகளில் சென்று மீன் பிடிக்கும் மீனவர்கள் தேர்தெடுக்கப்பட்ட முறையில் மீன் பிடிப்பதால் குறிப்பிட்ட சில விலை உயர்ந்த மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இதனால் கடலில் மீன்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
அதே போல் விலை குறைந்த மீன்களான சூடை, மத்தி, பேச்சாலை ஆகிய மீன்கள் கடலில் அதிகம் காணப்படுகின்றன. இந்த வகையான மீன்கள் 3 மாதத்தில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் எனவே, இந்த தடைக் காலங்களில் இவ்வகையான மீன்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பொதுவாக தடைக் காலங்களில் 20 முதல் 25 சதவீதம் வரை மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
கிழக்கு கடற்கரை பகுதிகளில் தடைக்காலம் கோடை காலத்தில் கடைப்பிடிப்பதால் சீதோஷன நிலையில் மாற்றம் ஏற்பட்டு கடல் நீர் தெளிவாக காணப்படும். இந்த சூழலில் மன்னார் வளைகுடா கடலில் வாழ்ந்து வரும்; அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்து அதன் எண்ணிக்கைகளை உயர்த்திக்கொள்ள மிகவும் ஏதுவாக இருக்கும் என்றார் ஜெயக்குமார்.
கடல் வளத்தை பெருக்க உதவிய கொரோனா:
கொரோனா ஊரடங்கால் கடலுக்குள் மீனவர்கள் செல்லாததால் மன்னார் வளைகுடா கடலில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் வளர்ச்சி எப்படி உள்ளது என்பது குறித்து தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆராய்ச்சி குறித்து ஆராய்ச்சியாளர் திரவிய ராஜ் பிபிசி தமிழிடம் பேசினார்.
மார்ச் 25ந் தேதி முதல் ஜுன் 3ந் தேதி வரை தூத்துக்குடி முதல் ராமேஸ்வரம் வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நடத்திய ஆய்வில் மீன்களின் எண்ணிக்கை 22 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்கிறார் திரவிய ராஜ்..
கரை ஓரங்களில் மீனவர்கள் கூண்டு வைத்து மீன் பிடிப்பார்கள் அப்போது அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான கடல் புல், பவளப்பாறைகள் சேதமடையும். ஆனால், ஊரடங்கு காரணமாக கடலுக்குள் மீனவர்கள் செல்லாததால் பவளப்பாறைகளின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
குறிப்பாக மன்னார் வளைகுடா கடலில் தாவரங்களை சாப்பிட்டு வாழக்கூடிய SCARUS என்கின்ற கிளி மீன்களின் எண்ணிக்கை 39 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த வகையான மீன்கள் கடல் வாழ் உயிரினங்களின் சுற்றுச்சூழலை சமநிலை படுத்துவதில் அதிக பங்கு வகிக்கிறது. சந்தையில் கிளி மீன்கள் கிலோ ஆயிரம் முதல் 1,200 வரை விற்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
கொரோனாவால் மீன் இனங்களின் எண்ணிக்கை உயர்வு:
கொரோனா ஊரடங்கு காலத்துக்கு முன் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 89 வகை மீன் இனங்கள் கண்டறியப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது சிறு தொழில் மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால் 96 வகை மீன் இனங்கள் கண்டறிப்பட்டுள்ளன. பொதுவாக கோடை காலங்களில் கடல் நீரின் வெப்பம் காரணமாக மீன்கள் ஆழமான கடல் பகுதிக்கு இடம்பெயறும். இந்தாண்டு கடல் நீரின் வெப்பம் 31.9 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது என்றாலும் மீன்களுக்கு தொந்தரவு இல்லாததால் மீன்களின் எண்ணிக்கை அதிகளவு உயர்ந்துள்ளது என்கிறார் திரவிய ராஜ்.
83 நாட்களுக்கு பின் மீன் பிடிக்க கடலுக்குள் செல்வது குறித்து ராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா பிபிசி தமிழிடம் பேசுகையில், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட கொரோனா நோய் தடுப்பு நிபந்தனைகளுடன் அரசு மீன்பிடிக்க அனுமதி அளித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு மீனவர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றார்.
மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை வேண்டும்:
மீன் பிடி தடைக் காலம் முடிந்து மீன் பிடிக்க செல்லும் முதல் இரண்டு நாட்கள் அதிகளவு மீன்கள் கிடைக்கும் அதிலிருந்து மீனவர்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும். ஆனால் தற்போது நாங்கள் பிடித்து வரும் மீன்களை கொள்முதல் செய்ய மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் தயாராக இல்லை. உலகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக மீன்களின் தேவை முற்றிலுமாக குறைந்துள்ளது.
தனியார் மீன் ஏற்றுமதி நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று நாங்கள் 24 மணிநேர மீன் பிடி தொழிலை விட்டு விட்டு இரவு கடல் தொழில் அதாவது 12 மணி நேரம் மட்டும் மீன்பிடிக்க செல்வதாக முடிவு செய்து தமிழகத்தில் உள்ள வடக்கு கடலோர மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க கடலுக்குள் செல்கிறோம் என்றார் ஜேசுராஜா.
இரவு நேர மீன் பிடிப்பு:
12 மணி நேரம் மட்டும் மீன் பிடிப்பு என்பதால் மீன் பிடி தொழில் முற்றிலும் பாதிப்படையும். இருப்பினும் தொழில் நடக்கட்டும் 80 நாட்களாக தொழில் இல்லாமல் பசியும் பட்டினியுமாக வாழ்ந்து வந்த மீனவ குடும்பங்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் மீன் பிடிக்க செல்கிறோம். என்றார்.
கொரோனாவால் உலக நாடுகளின் மீன் சந்தைகள் முடங்கியது:
மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை ஏன் கொள்முதல் செய்ய முடியவில்லை என தனியார் மீன் ஏற்றுமதி நிறுவன மேலாளர் பிபிசி தமிழிடம் பேசுகையில், இது நாள் வரை வடக்கு கடலோர மாவட்ட மீனவர்கள் பிடித்து வரும் இறால் மீன்கள் ஜப்பான் நாட்டிற்க்கும்,விலை உயர்ந்த மீன் வகைகள் மற்றும் கனவாய் மீன்கள் உள்ளிட்டவைகள் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக மீன் சந்தை முடங்கியுள்ளது என்றார் ஜேசுராஜா.
ஜப்பானில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகளவில் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இறால் மீன்களை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அவர்கள் இறால் மீன்களை வாங்க முன் வரவில்லை. எனவே எங்களால் மீனவர்கள் பிடித்து வரும் இறால் மீன்களை கொள்முதல் செய்ய முடியவில்லை. கொரோனா ஊரடங்கிற்க்கு முன்பே மீனவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மீன்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் இன்றும் எங்களது சேமிப்பு கிடங்கில் உள்ளது.
புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள்:
தனியார் மீன் ஏற்றுமதி நிறுவனங்களில் அதிகளவு புலம் பெயர் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். கொரோனா தொற்று காரணமாக அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் உள்ளுரில் வேலைக்கு ஆட்களை அழைத்து நிறுவனங்களை நடத்தி வருகிறோம். அவர்களும் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்தால் வேலைக்கு வருவார்களா என்பது சந்தேகமே என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: