மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் ஊரடங்கை தளர்த்தியதை கொண்டாடிய விருந்தால் 180 பேருக்கு கோவிட்-19

முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை கொண்டாடும் வகையில், மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் இளைஞர் ஒருவர் அளித்த விருந்தால் அங்கு 180 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

விருந்து அளித்த இளைஞர் ஒருவர் செய்த இந்த தவறின் காரணமாக நாக்பூரின் நாயிக் தலாவ் பகுதியில் இருக்கும் 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த விருந்தின் காரணமாக 180 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் நாக்பூர் மாநகராட்சியின் ஆணையர் துக்காராம் முண்டே பிபிசியிடம் கூறியுள்ளார்.

நடந்தது என்ன?

நாக்பூரில் சதரஞ்சிபுரா மற்றும் மாமின்புரா ஆகிய இடங்கள் கோவிட்-19 நோய்த்தொற்று பரவலின் மையாக விளங்கி வந்தன. இந்த நிலையில், விருந்து என்ற பெயரில் ஒருவர் செய்த தவறால் வடக்கு நாக்பூரில் உள்ள நாயிக் தலாவ், கொரோனா தொற்று பரவலின் புதிய மையமாக உருவெடுத்துள்ளது.

கடந்த ஆறு நாட்களில் மட்டும், அந்த பகுதியை சேர்ந்த 180 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

எப்படி மிகவும் குறைந்த காலக்கட்டத்தில் ஒரே பகுதியை சேர்ந்த இத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்ற கோணத்தில் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டது.

அப்போது, அந்த குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் முடக்க நிலை தளர்த்தப்பட்டதை கொண்டாடுவதற்காக நாயிக் தலாவ் பகுதியில் விருந்து அளித்தது தெரியவந்தது.

முன்னதாக, அந்த இளைஞர் இறைச்சி வாங்குவதற்காக நாக்பூரில் கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட மாமின்புராவுக்கு சென்றும் அவர் அளித்த விருந்தில் 5 பேர் கலந்துகொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, விருந்துக்கு பிறகு அதை ஏற்பாடு செய்த இளைஞருக்கு உடல்நிலை மோசமடைந்ததும், பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது எப்படி தெரிய வந்தது?

நாக்பூர் மாநகராட்சியின் மருத்துவ அதிகாரியான மருத்துவர் பிரவின் கண்டவாரிடம் பிபிசி மராத்தி பேசுகையில், "நாயிக் தலாவ் பகுதியில் திடீரென்று கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்கள் அதிகமானதும் இதுகுறித்து விசாரிக்கத் தொடங்கினோம். அப்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் அவர்களில் முதலில் கொரோனா தொற்றுக்கான அறிகுறி தெரிந்தவரிடம் விசாரணை நடத்த தொடங்கினோம். காலையில் பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்டபோது தொற்று ஏற்பட்டிருக்கும் என்று சர்வ சாதாரணமாக அந்த இளைஞர் மாநகராட்சி பணியாளர்களுக்கு பதிலளித்தார்" என்று கூறினார்.

"இதுகுறித்து அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், அவருக்கு விருந்துக்கு பிறகுதான் உடல்நிலை மோசமானது என்று தெரியவந்தது. சூழ்நிலையை புரிந்துகொண்ட அதிகாரிகள், இந்த விருந்து தொடர்பாக கேள்விகளை கேட்ட தொடங்கியவுடன், அவர் இறைச்சி வாங்குவதற்காக நாக்பூரில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட மாமின்புரா என்ற பகுதிக்கு சென்றதை ஒப்புக்கொண்டார். மக்கள் கொரோனா குறித்த தகவல்களை மறைக்க பார்க்கின்றனர். இதனால் தொற்று அதிகம் பரவும். இப்போது இது மிகப்பெரிய சவாலாக உள்ளது" என்கிறார் மருத்துவர் கண்டவார்.

மாநகராட்சி முன்னுள்ள சவால்கள் என்னென்ன?

"முடக்க நிலையில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டது வரவேற்கத்தக்கதுதான். இந்த வாய்ப்பை இயல்பு நிலைக்கு திரும்புவதற்காக பயன்படுத்த வேண்டுமே தவிர மக்கள் பொறுப்பற்ற வகையில் செயல்பட கூடாது" என்று நாக்பூர் மாநகராட்சியின் ஆணையர் துக்காராம் முண்டே பிபிசியிடம் கூறினார்.

"மக்கள் எவ்வித பிரச்சனையையும் விளைவிக்கமால் இருந்திருந்தால் தற்சமயம் நாக்பூரில் இயல்பு வாழ்கை திரும்பியிருக்கும். ஆனால், ஒரேயொரு நபர் செய்த தவறினால், தற்போது ஒட்டுமொத்த நகரமும் முடங்கியுள்ளது."

எங்கெல்லாம் கொரோனா பரவியுள்ளது?

முதலில் நாக்பூரின் சதரஞ்சிபுரா பகுதியில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்ட போது அவர் அதை மறைத்ததால் அந்த பகுதியில் 120 பேருக்கு கொரோனா தொற்று பரவியது.

அதேபோல் மாமின்புரா பகுதியில் கொரோனாவால் இறந்த ஒருவர், தனக்கு கொரோனா தொற்று இருந்ததை மறைத்ததால் 200 பேருக்கு அங்கே பரவியது. இப்போது இளைஞர் ஒருவர் அளித்த விருந்தால் நாயிக் தலாவ் பகுதியில் 180க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: