You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமிதாப் பச்சன்: புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு விமானத்துக்கு ஏற்பாடு
கொரோனா வைரஸ் முடக்க நிலை உத்தரவால் மும்பையில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களில் 700 பேரை விமானம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உதவி செய்துள்ளதாக பி.டி.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, நேற்று மும்பையில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களுடன் நான்கு விமானங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்பட்டதாகவும், மேலும் இரண்டு விமானங்கள் இன்று இயக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் புதிய உச்சத்தை அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு
முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9,996 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், இந்தியாவில் இதுவரை கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,86,579 என்னும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த 357 பேரையும் சேர்த்து, இதுவரை நாடு முழுவதும் இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,108ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,41,029ஆக உள்ளது.
கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரிட்டனுக்கு அடுத்ததாக ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது.
கொரோனா வைரஸ்: உலக நாடுகளில் என்ன நிலவரம்?
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவின்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் இதுவரை 73,60,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 16 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய இரண்டிலுமே மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. சற்று முன்னர் கிடைத்த நிலவரத்தின்படி, அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது. அங்கு இதுவரை ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கோவிட்-19 நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,54,807ஆக உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நியூயார்க் நகரில் நோய்த்தொற்று பரவல் கடந்த சில வாரங்களாக குறைந்து வரும் நிலையில், அந்த நாட்டின் கலிஃபோர்னியா, டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக நியூயார்க் டைம்ஸின் தரவுத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை
தாய்லாந்தில் கடந்த மூன்று வாரங்களில் முதல் முறையாக நேற்று ஒருவருக்கு கூட கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்றும், உயிரிழப்பும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அதே போன்று, கடந்த 17 நாட்களாக தாய்லாந்தில் சமூக பரவல் காரணமாக நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்றும், புதிதாக நோய்த்தொற்று ஏற்படும் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயபுரம் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு
சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக வந்த செய்திகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
காப்பகங்களில் கொரோனா வைரஸ் பரவல் குறித்தும், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் தற்போதுள்ள நிலை தொடர்பாக அறிக்கையொன்றை தமிழக அரசிடமிருந்து உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.
ராயபுரத்தில் உள்ள காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவியது எப்படி என்றும், காப்பகங்களில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன எடுக்கப்பட்டன என்பது தொடர்பாக தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.
இது தொடர்பான பதில் விளக்கத்தை வரும் திங்கள்கிழமையன்று தமிழக சுகாதாரத்துறை செயலர் தாக்கல் செய்யவுள்ளார்.
குழந்தைகள் காப்பகங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நடத்தும் வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 6-ஆம் தேதி நடக்கவுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இறப்புகள் தொடர்பாக முதல்வர் பேச்சு
சேலத்தில் 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குரங்குச்சாவடி முதல் புதிய பேருந்து நிலையம் வழியாக அண்ணா பூங்கா வரையிலான 5.01 கி.மீ நீளத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலம் மற்றும் ரூ. 42.14 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள லீபஜார் இரயில்வே மேம்பாலம் ஆகியவற்றை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
புதிய இரண்டடுக்கு மேம்பாலத்திற்கு 'புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா இரண்டடுக்கு மேம்பாலம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு இறப்பவர்கள் குறித்த தகவல்களை யாரும் மறைக்க முடியாது, அனைவருக்கும் அது தெரிந்துவிடும். இதை மறைப்பதால் அரசுக்கும் எந்த நன்மையும் கிடையாது. தினந்தோறும் கொரோனா நோய்தோற்று குறித்த விபரங்களை வெளிப்படைத் தன்மையோடு தமிழக அரசு தெளிவுபடுத்தி வருகிறது" என தெரிவித்தார்.
மேலும், "தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று சமூகப்பரவலாக இன்னும் மாறவில்லை. சமூகப்பரவலாக இருந்தால் உங்கள் முன் நான் நின்று பேச முடியாது. சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் பாதிப்பு அதிகமாக உள்ளது' என கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: