You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த அல்கொய்தா திட்டம்? மற்றும் பிற செய்திகள்
ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவர் மரணத்துக்கு பிறகு அமெரிக்காவில் நிலவிவரும் அமைதியின்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த அல்கொய்தா அமைப்பினர் முயற்சித்து வருவதாக பாதுகாப்புதுறை தொடர்பான பிபிசி செய்தியாளர் ஃப்ராங் கார்டனர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை நிறைவேற்ற, அமெரிக்காவில் தற்போது நடைபெற்றுவரும் போராட்டங்களை முதலாக கொண்டு, முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாதவர்களை அணுகி, 'ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாவலர்களாக' தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துமாறு இந்த அமைப்பினர் அவர்களை கேட்டுக்கொள்கின்றனர்.
ஜிஹாதி குழுவினரான இந்த அமைப்பினரின் ஆன்லைன் பத்திரிகையான ஒன் உம்மா-வின் அண்மைய பதிப்பில், ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்க வீதிகளில் போராடி கொண்டிருப்பவர்களுக்கு தானாக முன்வந்து ஆதரவளிக்குமாறு கோரும் விதத்தில், உயிரிழந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் கடைசி நிமிடங்களை சுட்டிக்காட்டும் படமும், பிரபல சுவர் ஓவியரான பேங்க்சியின் ஓவியமும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் வாழும் மக்களை குறிவைத்து இந்த ஆன்லைன் பத்திரிகையின் ஆங்கில பதிப்பில், அமெரிக்கா மற்றும் அதன் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகள் விரைவில் அழிந்துவிடும் என்றும் கணித்துள்ளது.
''அமெரிக்காவெங்கும் ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் மற்றும் உள்நாட்டு போர் ஆகியவை நடக்க வாய்ப்பு உள்ளது'' என்று அதன் தலையங்கம் கூறியுள்ளது. அதன் மற்றொரு வாசகம், ''ஜனநாயக கட்சியினர்கூட உங்களுக்கு உதவ முடியாது, ஆனால், நாங்கள் உங்களுக்கு உதவுவோம்'' என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக பிபிசி மானிட்டரிங் பிரிவின் மினா அல்-லாமி கூறுகையில், அல்கொய்தா மற்றும் ஐஎஸ் அமைப்புகளுக்கு இந்த விஷயத்தில் என்ன வேறுபாடென்றால், அமெரிக்காவில் நடந்துவரும் போராட்டங்களை கவனித்துவரும் ஐஎஸ் அமைப்பினர், இந்த போராட்டங்கள் மற்ற நாடுகளுக்கும் பரவும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், அல்கொய்தா அமைப்பினர் தாங்களாகவே முன்வந்து இந்த பிரச்சனையை அலசி, அமெரிக்கர்களை இஸ்லாம் மதத்துக்கும், அதன் நோக்கத்துக்கும் மாற்றிட இந்த வாய்ப்பை பயன்படுத்தி முயற்சித்து வருவதாக மினா அல்-லாமி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியா - சீனா எல்லை பிரச்சனை: லடாக் எல்லையில் வாழும் மக்களின் நிலை என்ன?
கிழக்கு லடாக்கில் இந்தியா - சீனா இடையே கடந்த சில வாரங்களாக ராணுவப் பதற்றம் நிலவி வந்தப் பகுதியில் உள்ள பல நிலைகளில் இருந்து இரு நாட்டு ராணுவங்களும் பின்வாங்கியுள்ளன.
இந்தியா - சீனா இடையே ராணுவ மட்டத்திலான இரண்டாவது பேச்சுவார்த்தை இந்த வாரம் தொடங்கவுள்ள நிலையில் இது நிகழ்ந்துள்ளது. இந்த ராணுவப் பதற்றம் எல்லையோர மக்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? அவர்களுக்கு ஏற்பட்ட நடைமுறைப் பிரச்சனைகள் என்னென்ன?
இதுகுறித்து விரிவாக படிக்க:பதற்றத்துக்கு நடுவே: இந்திய - சீன எல்லையில் வாழ்க்கை எப்படி இருக்கும்?
இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு மூன்றாவது முறை தேதி அறிவிப்பு
இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணைக்குழு நேற்று (புதன்கிழமை) அறிவித்தது.
இதன்படி, நாடாளுமன்றத் தேர்தலை ஆகஸ்ட் மாதம் 05ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து விரிவாக படிக்க:இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: மூன்றாவது முறையாக தேதி அறிவிப்பு
டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை எப்போது நடக்கும்?
கொரோனா வைரஸ் தொற்றால் உலகின் பல நாடுகளிலும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) முக்கிய கூட்டம் நேற்று (மார்ச் 10) நடைபெற்றது.
இந்திய/ இலங்கை நேரப்படி நேற்று மாலை இக்கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடந்தது.
இதுகுறித்து விரிவாக படிக்க:ஐ.சி.சி கூட்டம் முடிந்தது: டி20 உலகக்கோப்பை எப்போது நடக்கும்?
பாகிஸ்தானில் இந்துக்கள் வீடு இடிப்பு
பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாபில் உள்ள பஹவால்பூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் 20-ம் தேதி இந்துக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள 22 வீடுகள் உள்ளூர் அதிகாரிகளால் தரைமட்டமாக்கப்பட்டன.
தாங்கள் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்து சமூக மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து விரிவாக படிக்க:பாகிஸ்தானில் இந்துக்கள் வீடு இடிப்பு: மத பிரச்சனையா? சட்ட நடவடிக்கையா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: