You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ICC கூட்டம்: டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை எப்போது நடக்கும்? ஐசிசி கூட்டத்தின் முக்கிய முடிவுகள் என்ன?
கொரோனா வைரஸ் தொற்றால் உலகின் பல நாடுகளிலும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) முக்கிய கூட்டம் இன்று (மார்ச் 10) நடைபெற்றது.
இந்திய / இலங்கை நேரப்படி இன்று மாலை இக்கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடந்தது.
கடந்த மே மாதம் 28-ஆம் தேதி நடக்கவிருந்த இந்த கூட்டம், ஜூன் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மிகவும் முக்கியமான தருணத்தில், நீண்ட இடைவெளிக்கு பிறகு நடக்கும் இந்த கூட்டத்தில், டி20 உலகக் கோப்பை போட்டி தொடர், எதிர்காலத்தில் கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்த செயல்திட்டம் உள்ளிட்ட பல அம்சங்கள் விவாதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஆண்களுக்கான டி20 உலகக்கோப்பை மற்றும் 2021இல் நடைபெறவிருந்த பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை ஆகியவை குறித்த முடிவு அடுத்த மாதம் எடுக்கப்படும் என்று ஐ.சி.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கொரோனா வைரஸ் சூழல் குறித்து தொடர்ந்து மதிப்பீடு செய்யப்படும் என்று ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
நாடுகளின் அரசுகள் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து செயல்பட்டு, போட்டிகளுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று அந்த அமைப்பின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
ஐபிஎல் போட்டிகள் எப்போது நடத்தப்படும்?
இருதரப்பு போட்டிகள் உள்ளிட்ட எண்ணற்ற கிரிக்கெட் போட்டிகள், ஐபிஎல் தொடர் என அனைத்து வகை போட்டிகளும் இக்காலகட்டத்தில் நடத்தப்படவில்லை.
மார்ச் 29-ஆம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் போட்டிகள் ஆரம்பத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த போட்டிகள் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அடுத்த சில மாதங்களுக்கு இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவது மிகவும் சிரமம் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
அதேவேளையில், 2009-ஆம் ஆண்டில், இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்ததால், அந்தாண்டு நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் தென் ஆப்ரிக்காவில் நடந்தது. ஆனால் தற்போதைய நிலையில் உலகெங்கும் கொரோனா பாதிப்பு நிலவுவதால் வேறு நாடுகளிலும் தற்போது ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.
எனவே ஐபிஎல் போட்டிகளை எப்போது நடத்த வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்த இறுதி முடிவு இன்றைய கூட்டத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்று (ஜூன் 9-ஆம் தேதி) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி மான்செஸ்டர் வந்தடைந்தனர்.
அண்மையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வாரியம் வெளியிட்டது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அதற்கேற்ப மாற்று வீரர்களின் பட்டியலையும் அவ்வணி வெளியிட்டுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையே நடக்கும் 3 டெஸ்ட்கள் அடங்கிய கிரிக்கெட் தொடர், வரும் ஜூலை 8-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
உலக அளவில் கொரோனா பரவல் பாதிப்பு தொடர்பாக பல நாடுகளிலும் முடக்கநிலை அமல்படுத்தப்பட்ட மார்ச் மாதத்திற்கு பிறகு நடக்கவுள்ள முதல் கிரிக்கெட் தொடர் இது என்பதால் இந்த தொடர் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
எச்சில் பயன்படுத்த தடை
இதனிடையே, கிரிக்கெட் பந்தை பளிச்சிட செய்ய எச்சில் பயன்படுத்த தடையை ஐசிசி நேற்று உறுதி செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, முன்னாள் இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தலைமையிலான கிரிக்கெட் கமிட்டி குழு, எச்சில் பயன்பாட்டிற்கு தடை, உள்ளூர் நடுவர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பரிந்துரைத்தது.
இந்நிலையில் கிரிக்கெட் பந்தை பளிச்சிட செய்ய எச்சில் பயன்படுத்த தடையை ஐசிசி அறிவித்த நிலையில், இதற்கு வேறு ஏதாவது பொருள் பயன்படுத்தப்படுமா என்று விரைவில் தெரிய வரும்.