You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆர்டிக் டீசல் கசிவு: ரஷ்யாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியை மாசுபடுத்தியது மற்றும் பிற செய்திகள்
ஆர்டிக் பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் சுமார் 20,000 டன் டீசல் கசிந்ததை அடுத்து, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அவசரநிலையை பிறப்பித்திருந்த நிலையில், தற்போது அந்த டீசல் கசிவு நன்னீர் ஏரி ஒன்றை மாசுபடுத்தியுள்ளது.
மேலும், இந்த டீசல் கசிவு ஆர்டிக் பெருங்கடலுக்கும் பரவும் அபாயம் இருப்பதாக ரஷ்ய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளியன்று ரஷ்யாவின் நோரில்ஸ்க் நகரத்துக்கு அருகிலுள்ள மின்னுற்பத்தி நிலையத்தில் இருக்கும் எரிப்பொருள் தொட்டி சேதமடைந்தபோது இந்த கசிவு ஏற்பட்டுள்ளது.
20 கிலோ மீட்டர் தூரம் பரவியிருக்கும் இந்த கசிவை கட்டுப்படுத்த அவசர நிலைக்குழுக்கள் முயற்சி செய்து வருகின்றன.
தற்போது அம்பர்ன்யா நதி மற்றும் அதன் சுற்றியுள்ள நிலப்பரப்பில் 21 ஆயிரம் டன் எண்ணெய் கலந்துள்ளது.
இந்த எண்ணெய் கசிவு நீர் ஆதாரங்களை பாதிப்பதோடு, இதை குடிக்கும் விலங்குகள், கரையில் வளரும் செடி கொடிகள் ஆகியவை மீதும் தாக்கத்தை உண்டாக்கும் என சூழலியாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ்: புதிதாக 1,685 பேருக்கு கோவிட்-19 தொற்று
தமிழ்நாட்டில் 1685 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நேற்று 21 பேர் உயிரிழந்துள்ளனர். 798 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று கொரோனா தொற்று தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தமிழ்நாட்டில் புதிதாக 1685 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர்களில் 1,649 பேர் தமிழ்நாட்டில் வசிப்பவர்கள். மீதமுள்ள 36 பேர் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள்.
கொரோனா வைரஸ் பரவல் உண்மையில் எப்போது தொடங்கியது?
கொரோனா வைரஸ் முதல் முதலில் கடந்த நவம்பரில் தோன்றியதாக அறியப்படும் சீனாவின் வுஹான் நகர மருத்துவமனைகளுக்கு வெளியே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே போக்குவரத்து அதிகரித்ததைக் காட்டும் செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு செய்யப்பட்ட ஓர் ஆய்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல் முதலில் கொரோனா வைரஸ் தொற்று 2019 நவம்பரில் காணப்பட்டதாக நம்பப்படுகிறது.
காரணம் தெரியாத நிமோனியோ நோய்த் திரள் ஒன்று குறித்து 2019 டிசம்பர் 31ம் தேதி உலக சுகாதார நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தார்கள் சீன அதிகாரிகள்.
இந்நிலையில் ஆகஸ்டிலேயே வுஹான் மருத்துவமனைகளுக்கு எதிரே போக்குவரத்து அதிகரித்ததை செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதுடன், அதே காலத்தில் இணையத் தேடுபொறியில் இருமல், பேதி ஆகிய சொற்களைப் பயன்படுத்தி தேடுவது திடீரென அதிகரித்தது என்கிறது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட இந்த ஆய்வு.
விரிவாக படிக்க: கொரோனா பரவல் தொடங்கியது எப்போது? செயற்கைக்கோள் படங்களால் சர்ச்சை
பாஜகவின் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
"ஜோதிராதித்ய சிந்தியா கோவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் திங்களன்று அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.
விரிவாக படிக்க: பாஜகவின் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கன்னியாகுமரி சிறுமி
ஒரு 12 வயது சிறுமியின் வறுமையைப் பயன்படுத்தி அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேர், கன்னியாகுமரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமியின் தந்தை ஓட்டல் தொழிலாளி. தாய் மன நலம் பாதிக்கப்பட்டவர். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த சிறுமியின் தந்தை வெளியூரில் தாம் வேலை செய்துவந்த ஓட்டலிலேயே தங்கிவிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: