You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: சமூகப் பரவலை இந்திய அரசு மறுப்பது ஏன்?
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
ஆனால், அரசாங்கமோ இந்தியாவில் இன்னமும் கோவிட்-19 பெருந்தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்று தொடர்ந்து கூறி வருகிறது.
“இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு, ஆனால் இங்கு பரவல் மிகவும் குறைவாகவே உள்ளது” என்று கூறுகிறார் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தலைவரான பல்ராம் பார்கவா.
இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று பரவல் குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவுகளை கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் அவர் வெளியிட்டு பேசினார்.
இந்தியாவில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, 2,97,535 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதாவது, கோவிட்-19 பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்து நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது.
பார்கவாவின் கருத்துகள் பல்வேறு தரப்பினரிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினந்தினம் புதிய உச்சத்தை அடைந்து வரும் வேளையில், அரசு இன்னமும் கூட நாட்டில் சமூகப் பரவல் ஏற்படவில்லை என்று கூறுகிறது.
இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு காரணமென்ன?
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பெருந்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் என எவருடனும் தொடர்பில்லாத ஒருவருக்கு இந்த நோய்த்தொற்று உறுதியானால் அது சமூகப் பரவல் என்று பொதுவாக கருதப்படுகிறது.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
ஆனால், இந்திய அரசாங்கமோ சமூகப் பரவலுக்கென்று ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறை ஏதுமில்லை என்று கூறுகிறது.
சமூகப் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால், அதில் சமூகப் பரவல் என்பதற்கான விளக்கம் தெளிவுற குறிப்பிடப்படவில்லை.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பிரபல நச்சுயிரியல் வல்லுநரான ஜேக்கப் ஜான், இந்தியாவின் மக்கள் தொகையில் 0.3 - 0.4 சதவீதத்தினருக்கு நோய்த்தொற்று பரிசோதனையை அரசு மேற்கொண்டுள்ளதாக கூறுகிறார்.
“தற்போது இந்தியாவுக்குள்ளேயே இரண்டு நாடுகள் உள்ளதாக நான் கருதுகிறேன். அதாவது, கோவிட்-19 நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 40 லட்சம் பேர் அல்லது மக்கள் தொகையில் 0.4 சதவீதத்தினர் ஒரு நாடு, மீதமுள்ளவர்கள் மற்றொரு நாடு. இதனடிப்படையில் பார்க்கும்போது, நாட்டில் மீதமுள்ள 99.6 சதவீதத்தினருக்கு நோய்த்தொற்று ஏற்படவில்லை என்றும் நோய்த்தொற்றின் பரவல் மிகவும் குறைவாக உள்ளது என்றும் அரசு கூறுகிறது.”
“கோவிட்-19 நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட மிகவும் குறைந்த எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு, நாட்டில் சமூகப் பரவலே இல்லை என்று அரசு கூறுகிறது” என்று அவர் கூறுகிறார்.
ஆனால், உண்மையில் இந்தியாவில் சமூகப் பரவல் நடந்து வருவதற்கான தெளிவான அறிகுறிகள் தெரிவதாகவும், ஆனால் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அதிகாரிகள் அந்த வார்த்தையை பயன்படுத்த மாட்டார்கள் என்றும் மருத்துவர் ஜான் கூறுகிறார்.
இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் சமூகப் பரவலாக மாறியுள்ளதாக அந்த யூனியன் பிரதேசத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஒப்புக்கொள்கிறார். ஆனால், அதை சமூகப் பரவல் என்று அறிவிப்பதா அல்லது வேண்டாமா என்பது மத்திய அரசின் முடிவு என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
“உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலில் தெளிவுற தகவல்கள் இல்லாததால், சமூகப் பரவலை வரையறுப்பதில் பெரும் விவாதம் நடந்து வருகிறது. இந்தியாவில் கண்டிப்பாக சமூகப் பரவல் ஏற்படவில்லை, அது ஒரு சொல் மட்டுமே” என்று மருத்துவர் பார்கவா கூறுகிறார்.
‘நாம் நோய்த்தொற்றை பரப்புகிறோம்’
இந்தியாவில் இருக்கும் பாதிப்புகளை பார்க்கும்போது, இப்போது நாட்டில் சமூகப் பரவல் ஏற்பட்டுவிட்டதா என்று விவாதிப்பதே தேவையற்றது என்று மருத்துவத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
“முதலில் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட இந்த நோய்த்தொற்று பிறகு, ஒரு கொள்ளை நோயாக உள்நாட்டில் பரவி வருகிறது” என்று மருத்துவர் ஜான் கூறுகிறார்.
“நாம் மற்றவர்களுக்கு நோய்த்தொற்றை பரப்பி வருகிறோம். இதுதான் சமூகப் பரவலின் உண்மையான வரையறை. இப்போது அதற்கான ஆதாரம் முக்கியமற்றது. இது உண்மையிலேயே சமூகத்தில் பரவி வரும் கொள்ளை நோய். எனவே எனது வரையறையின்படி, இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று சமூகப் பரவல் என்னும் நிலையை அடைந்துவிட்டது."
இந்தியாவின் 83 மாவட்டங்களில் உள்ள ஒட்டுமொத்த கோவிட்-19 நோயாளிகளில் 0.73 சதவீதத்தினர் மட்டுமே கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கூறுவதாக கூறும் மருத்துவர் ஜான், நாட்டில் சமூகப் பரவல் இல்லையென்றால் “இவர்களுக்கு எப்படி நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கும்” என்று கேள்வியெழுப்புகிறார்.
“இதற்கு இந்தியாவில் சமூகப் பரவல் தொடக்க நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். ஆனால், அரசு இந்த தகவலின் மூலம் அதை நேரடியாக சொல்லாமலே ஒப்புக்கொண்டுள்ளது என்றே அர்த்தம்” என்று அவர் கூறுகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை அடையவில்லை என்று கூறுவது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
“இந்தியாவில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்; பத்தாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சமூகப் பரவல் இன்னமும் ஏற்படவில்லை என்பது போன்ற பொய்கள் உயிரிழப்புகளுக்கு காரணமாகின்றன” என்று மூத்த பத்திரிகையாளரான வித்யா கிருஷ்ணன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- அழியும் அபாயத்தில் சுமார் 10 லட்சம் உயிரினங்கள் - பருவநிலை மாற்றத்தை தொடர்ந்து புதிய சிக்கல்
- 'தமிழ் தாய் வாழ்த்தையும் வந்தே மாதரம் போல பாட வேண்டும்': ரஹ்மானிடம் கேட்கும் கமல்
- ஊரடங்கை தளர்த்தியதால் கொண்டாட்டம்: 180 பேருக்கு பரவிய கொரோனா
- கொரோனா எனும் கொலையாளி: பிடிப்பது எப்படி? விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: