ஜெ. அன்பழகன்: தி.மு.க. எம்.எல்.ஏ. உடல்நிலை கவலைக்கிடம்

ஜெ. அன்பழகன்

பட மூலாதாரம், J ANBAZHAGAN FACEBOOK PAGE

படக்குறிப்பு, ஜெ. அன்பழகன்

தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இருதயம் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் மோசமடைந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தி.மு.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு உயிர்காக்கும் கருவி மூலம் 80 சதவீத ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாக கடந்த வியாழக்கிழமையன்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ள ஜெ.அன்பழகன், கொரோனா ஊரடங்கு காலத்தில், திமுகவின் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவது, விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

மே 2ஆம் தேதி, காய்ச்சல் இருப்பதாக தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்த அவருக்கு கொரோனா சோதனை செய்ததில், நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதற்குப் பிறகு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரெலா இன்ஸ்டிடியூட் அண்ட் மெடிகல் சென்டரில் சேர்க்கப்பட்டார்.

மூச்சுத் திணறல் அதிகமானதை அடுத்து அவருக்கு மே 3ஆம் தேதியன்று வென்டிலேட்டர் பொறுத்தப்பட்டது. துவக்கத்தில் 90 சதவீதம் அளவுக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு அது 40 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. பிறகு, நிலைமை மேம்பட்டதால் வென்டிலேட்டர் அகற்றப்பட்டது.

ஆனால், திங்கட்கிழமை மாலை முதல் அவரது உடல்நலம் மோசமடைந்து வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருடைய ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதோடு இதய செயல்பாடுகளும் மோசமடையத் துவங்கியுள்ளன. ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, மருந்துகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே அவரது சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர்தான், அன்பழகனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: