தெலங்கானாவில் 10-ம் வகுப்புத் தேர்வு ரத்து: எல்லா மாணவர்களும் பாஸ்

பட மூலாதாரம், Getty Images
கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் தேர்வு நடத்துவது சாத்தியமில்லை என்று கூறி 10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்.
அத்துடன், 10-ம் வகுப்பு படித்த அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அவர்கள் அடுத்த வகுப்புக்கு உயர்த்தப்பட்டுள்ளனர் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.
அகநிலை மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களுக்கு தரநிலை அளிக்கப்படும் என்றும் முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு - எஸ்.எஸ்.எல்.சி. - பொதுத் தேர்வினை ஜூன் 15ம் தேதி நடத்தியே தீருவது என தமிழக அரசு பிடிவாதமாக இருக்கிறது.
தேர்வு வேண்டாம் என்று பரவலாக கல்வியாளர்கள் வலியுறுத்திவந்தாலும், தமிழக அரசு தமது நிலையை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லாத நிலையில், அது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது. நீதிபதி வழக்கை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில் தெலங்கானா அரசின் முடிவு வந்துள்ளது.
தமிழக அரசின் நிலைப்பாடுஎன்ன?

பட மூலாதாரம், Getty Images
பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமெனக் கோரி நடந்துவந்த வழக்கு ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுகளை ஜூன் 15ஆம் தேதி நடத்த மாநில பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு, ஜூன் 10ஆம் தேதிக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில், தமிழ்நாடு உயர்நிலை - மேல் நிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, மாணவர்களின் எதிர்காலத்தைவிட, அவர்களது உயிர் முக்கியமானது என்றும் தற்போதைய சூழலில் அவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதைப் போல இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்தனர். தேர்வை ஏன் ஒத்திவைக்கக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணன், இது தொடர்பாக தாங்கள் ஒரு விரிவான திட்டத்தை வைத்திருப்பதாகவும் எவ்வித பாதிப்புமின்றி தேர்வு நடைபெறுமென்றும் தற்போதுதான் தேர்வை நடத்த சரியான தருணமென்றும் இது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல்செய்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக மேலும் பல வழக்குகள் ஜூன் 11ஆம் தேதி விசாரணைக்கு வரவிருப்பதால் அன்று விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்வதாக தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கை ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- கொரோனா பாதிப்பில் சீனாவை விஞ்சிய மகாராஷ்டிரா - சர்வதேச நிலவரம் என்ன?
- இந்தியாவில் இன்று முதல் திறக்கப்படும் வழிபாட்டுதலங்கள், ஷாப்பிங் மால்கள் - சில முக்கிய தகவல்கள்
- 'வந்தே பாரத்' விமானங்களின் கட்டணம் உயர்வு: வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள்
- ''அரசியலமைப்பு சட்டத்திலிருந்து திசைமாறிச் செல்கிறார் டிரம்ப்'' - குடியரசு கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












