கொரோனாவால் உயிரிழந்தவரை அலட்சியமாக அடக்கம் செய்த மூவர் பணியிடை நீக்கம்

கொரோனா

பட மூலாதாரம், Twitter

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் அலட்சியமாக செயல்பட்ட மூன்று அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த 40 வயது நபர் கடந்த 3-ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தனர். ஆனால், மருத்துவமனை கொண்டு வருவதற்கு முன்பே அவர் உயிரிழந்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அரசு வெளியிட்டுள்ள நடைமுறையின்படி, வருவாய்த் துறை, காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னிலையில் புதுச்சேரியின் வில்லியனூர் பகுதியில் அவரது உடலை பாதுகாப்பாக அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால், கொரோனா தொற்றால் உயிரிழந்த நபரை அடக்கம் செய்தபோது, அவரது உடலை அலட்சியமாகக் குழியில் வீசியதாகக் கூறி சமூக வலைத்தளத்தில் வெளியான காணொளி ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கடந்த சனிக்கிழமை (ஜூன் 6) சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறியதாவது, "சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது 12 அடி ஆழம் கொண்ட பள்ளத்தின் அருகே உயிரிழந்தவரின் உடலைக் கொண்டு சென்றபோது ஊழியர்களில் ஒருவருடைய கை நழுவியதால் அவருடைய உடல் உருண்டு பள்ளத்தில் விழுந்துள்ளது. குறிப்பாக, புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரை அடக்கம் செய்வது இதுவே முதன்முறை என்பதால், ஊழியர்கள் அச்சம் கொண்ட காரணத்தினால் இது நடைபெற்றிருக்கலாம். மேற்கொண்டு இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று தெரிவித்திருந்தார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

இதையடுத்து நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி, புதுச்சேரி வில்லியனூர் பகுதி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் அருண் அறிக்கை அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, "அவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாலும் கூட, கொரோனா தொற்று இருக்கின்ற காரணத்தினால், அவரது உடலை குடும்பத்தினர் வீட்டுக்கு கொண்டுசெல்ல விரும்பவில்லை. பின்னர், அவர்கள் எழுத்துப் பூர்வமாகக் கடிதம் கொடுத்து, அரசே அவரது உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்."

"பிறகு இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை ஆட்சியருக்கு மருத்துவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் அவரது உடலை நல்லடக்கம் செய்கின்ற சமயத்தில், அதை ஒரு சிலர் வீடியோ எடுத்து, அவர் முறையாக நல்லடக்கம் செய்யப்படவில்லை; அவரது உடலை உருட்டிவிட்டார்கள் என்ற புகார் வந்திருக்கிறது. இது வைரலாக பரவி புதுச்சேரி மாநிலம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் எல்லாரிடத்திலும் சென்றிருக்கிறது. இது நமக்கெல்லாம் மிகப்பெரிய வருத்தத்தைக் கொடுக்கின்ற விஷயமாக மாறியுள்ளது மாறியுள்ளது" என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

மேலும் அவர், "யார் எந்த நோயால் உயிரிழந்தாலும் நல்லடக்கம் செய்யும் பொழுது, உரிய மரியாதையுடன் செய்ய வேண்டும். இதில் சம்மந்தப்பட்டவர்கள் யார், யார்? என்பது தொடர்பாக நானும், அமைச்சர் நமச்சிவாயமும் இணைத்து மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகளுடன் பேசிய பிறகு, அந்த சம்பவத்தில் ஈடுபட்ட உள்ளாட்சித் துறையின் இரண்டு பணியாளர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர் ஒருவரை இடைக்காலமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், "ஒருவர் உயிரிழந்து விட்டால் அவரது புனிதர் ஆகிவிட்டார் என்று அர்த்தம். அவர்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவேண்டியது நம்முடைய கடமை. ஆகவே, இது சம்பந்தமாக உள்ளாட்சித்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இனிவரும் காலங்களில் விதிமுறைப்படி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மேலும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: