'கொரோனா வைரஸ் என் குடும்பத்தையே சிதறடித்துவிட்டது' - ஒரு பிபிசி செய்தியாளரின் அனுபவம்

- எழுதியவர், ராக்சி கக்டேகர்
- பதவி, பிபிசி குஜராத்தி செய்தியாளர்
என்னுடைய சகோதரி மகள் குஷாலி டமாயச்சி தனது 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை எடுத்த போது கண்ணீர் விட்டாள். அவளுடைய பிரிவில் முதல் வகுப்பில் தேறிய சிலரில் அவளும் ஒருவர்.
இதற்கு என்ன காரணம் என்று அந்தப் பகுதியில் எல்லோருக்கும் தெரியும். அப்போது அவளுடைய தந்தை உயிரோடு இருந்தார். தேர்வு முடிவு வருவதற்கு சில தினங்களுக்கு முன்பாக அவளுடைய தந்தை உமேஷ் டமாயச்சி கொரோனாவுக்குப் பலியாகிவிட்டார்.
42 வயதான உமேஷ் அகமதாபாத் மெட்ரோ நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மே 12ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. மே 11ஆம் தேதி திங்கள்கிழமை மாலை சுவாசிக்க முடியவில்லை என்று சொன்னார்.
அதையடுத்து என் சகோதரி ஷெபாலி அவரை அருகில் உள்ள ஆனந்த் சர்ஜிகல் மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அந்தப் பகுதியில் அது பிரபலமான மருத்துவமனை. சில தினங்களுக்கு முன்பு கோவிட்-19 சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக அகமதாபாத் மாநகராட்சி அறிவித்திருந்தது.
ஆனந்த் சர்ஜிகல் மருத்துவமனையில் இருந்து ஷெபாலி என்னைத் தொடர்பு கொண்டு, விவரங்களைத் தெரிவித்தார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

அது அதிர்ச்சி தருவதாக இருந்தது. கொரோனா பாதிப்பு எங்கள் வீட்டுக்கும் வந்துவிட்டது என்பதை நினைத்துகூட பார்க்க முடியவில்லை. ஒரு மாத காலத்திற்குப் பிறகு அன்றைக்கு தான் நான் வெளிப்புற படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டு சுரேந்திர நகர் லிம்டியில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன். உமேஷ் மூச்சுவிட திணறியபோது, அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று நான் சந்தேகப்பட்டேன்.
அமைதியாக, பொறுமையாக இருக்கும்படி ஷெபாலியிடம் கூறினேன். ஆனந்த் சர்ஜிகல் மருத்துவமனைக்கு நான் சில முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். கோவிட்-19 சிகிச்சைக்கான மருத்துவமனையாக தங்கள் மருத்துவமனை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தனிமைப்படுத்தல் அறை வசதி தங்களிடம் இல்லை என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் வென்டிலேட்டர்கள் கிடையாது.
கொரோனா பாதிப்பு என்ற சந்தேகத்துடன் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவர்களும் இல்லை. வேறு ஏதாவது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்குமாறு ஷெபாலியிடம் நான் கூறினேன். அவர் ஒவ்வொரு மருத்துவமனையாக முயற்சித்துப் பார்த்திருக்கிறார். ஆனால் உமேஷுக்கு ஆரம்பகட்ட சிகிச்சை அளிப்பதற்கு கூட யாரும் முன்வரவில்லை.
அந்தப் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனையில் உமேஷின் மார்புப் பகுதி எக்ஸ்ரே எடுத்து உதவினர். சுவாசத்தில் பிரச்சனை வந்ததற்கு என்ன காரணம் என்று அறிந்து கொள்ள ஷெபாலி முயற்சி செய்தார். மார்பில் சளி இருப்பதாக எக்ஸ்ரே மூலம் தெரிய வந்ததும் கொரோனா பாதிப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் தீர்ந்துவிட்டது.
இந்தியாவில் பிரபலமான தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொது மேலாளராக என் சகோதரி ஷெபாலி டமாய்ச்சி இருக்கிறார். குபேர் நகரில் சரண் நகர் பகுதியில் தன் குடும்பத்தினருடன் அவர் வசிக்கிறார்.
மும்பை தாராவியைப் போன்ற குட்டி தாராவி போல அந்தப் பகுதி இருக்கும். அடுக்கடுக்காக வீடுகள், சிறிய சந்துகள், அடிப்படை சுகாதார வசதிகள் கிடையாது, குப்பைகள் நிறைந்த அழுக்கான வீடுகள், குறுக்கும் நெடுக்குமாக ஒழுங்கில்லாமல் கட்டிய வீடுகள் என இருக்கும். கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்குப் பெயர் பெற்ற இடம் சரண் நகர்.
நடுத்தர வர்க்கத்தினர் அதை மோசமான இடம் என்று குறிப்பிடுவர். நாங்கள் சரண் நகரில் ஒன்றாக வளர்ந்தோம். நான் வேறு பகுதிக்குச் சென்றுவிட்டேன். ஆனால் அவர் சரண் நகரிலேயே வசிக்க முடிவு செய்துவிட்டார்.

உமேஷ் மற்றும் ஷெபாலி தம்பதியினர் கடுமையாக உழைத்து சரண் நகரில் நவ்கோலி பகுதியில் ஒரு வீடு கட்டினர். அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். அவர்கள் கான்வென்ட் பள்ளியில் படிக்கின்றனர்.
அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் பெண்களின் கல்விக்கு அதிக செலவு செய்ய மாட்டார்கள் என்பதால், இந்த இருவரும் கான்வென்ட்டில் படிப்பது அரிதான விஷயமாகக் கருதப்பட்டது. மூத்தவள் குஷாலி இப்போது தான் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறாள். அடுத்தவள் 15 வயதான ஊர்வசி, 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதி இருக்கிறாள். தன் தந்தையைப் போல வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்புகிறாள்.
எக்ஸ்ரே கிடைத்ததும் ஷெபாலி என்னைத் தொடர்பு கொண்டு, உமேஷுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக ரேடியாலஜிஸ்ட் சந்தேகிக்கிறார் என்று தெரிவித்தார். சில தினங்களுக்கு முன்புதான், கொரோனா பாதிப்புக்கு எப்படி ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பது பற்றி நான் ஒரு நிகழ்ச்சி தயாரித்து, சுகாதார ஆணையாளர் ஜெயபிரகாஷ் ஷிவ்ஹாரே மற்றும் அமதாபாத் சிவில் மருத்துவமனையின் அப்போதைய மருத்துவக் கண்காணிப்பாளர் ஜி.எச். ரத்தோட் ஆகியோரிடம் பேட்டி எடுத்திருந்தேன்.
நோய்த் தொற்றை சமாளிக்க நம்மிடம் எல்லா வசதிகளும் இருப்பதாகவும், தரமான வென்டிலேட்டர்கள் இருப்பதாகவும், அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற அலுவலர்கள் இருப்பதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.
அந்த நிகழ்ச்சி என் நினைவுக்கு வந்தது. முதல்கட்ட சிகிச்சைக்கு சிவில் மருத்துவமனைக்கு செல்லுமாறு ஷெபாலியிடம் நான் கூறினேன். அந்த மருத்துவமனையில் கொரோனா புறநோயாளிகள் பிரிவு அனைத்திலும் நோயாளிகள் நிறைந்துவிட்டனர். ஷெபாலி அங்கே செல்வதற்கு முன், நான் மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் பணியில் இருந்த டாக்டர்களுடன் தொடர்பு கொண்டு பேசினேன். நோயாளியைப் பார்த்துவிட்டு, தேவை இருந்தால் சிகிச்சைக்கு சேர்த்துக் கொள்வதாக அவர்கள் கூறினர்.
எக்ஸ்ரே பார்த்த பிறகு, மருத்துவமனையில் சேர்க்குமாறு டாக்டர்கள் யோசனை கூறினர். முதலில் நோய் சந்தேகத்துக்கு உரியவர்களின் வார்டில் உமேஷ் சேர்க்கப்பட்டார். பிறகு கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டார். அந்த மருத்துவமனையில் உமேஷுக்கு சரியான சிகிச்சை கிடைக்காது என்று நான் கருதினேன்.
நான் துணை முதல்வர் நிதின்பாய் படேலை தொடர்பு கொண்டேன். அவர் குஜராத்தின் சுகாதார அமைச்சராகவும் உள்ளார். என் விஷயத்தை கனிவுடன் கேட்டுக் கொண்ட அவர், உமேஷ் குறித்து கவனம் செலுத்துமாறு அசார்வாவில் உள்ள சிவில் மருத்துவமனை டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

சாதாரணமாக, நோயாளியின் நிலை குறித்து அவருடைய உறவினர்களிடம் டாக்டர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் டாக்டர்கள் மற்றும் உமேஷ் உறவினர்களுக்கு இடையில் தொலைபேசி தொடர்பு எதுவும் இல்லை.
செவ்வாய்க்கிழமை மதியம், உமேஷ் உடல்நிலை மோசமானதை அடுத்து ஐ.சி.யூ.வுக்கு மாற்றப்பட்டார். சிவில் மருத்துவமனையில் அவருக்குத் தரப்படும் சிகிச்சை பற்றியும், கவனிப்பு பற்றியும் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்ல முயற்சி செய்தேன்.
ஸ்டெர்லிங் மருத்துவமனையை நான் தொடர்பு கொண்டேன். கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையாக அதை அறிவித்திருந்தனர். அந்த மருத்துவமனையில் பொதுவான போர்டு தொலைபேசி எண்களை அடைவது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. இருந்தபோதிலும், மருத்துவமனையில் நோயாளிகள் நிறைந்துவிட்டதாக எனக்குப் பதில் கிடைத்தது.
எச்.சி.ஜி. மருத்துவமனையை நாடியபோது, அங்கும் இடம் இல்லை என்று தெரிவித்தனர். பின்னர் சந்த்கேடாவில் எஸ்.எம்.எஸ். மருத்துவமனையில் கேட்டபோது, சிவில் மருத்துவமனையில் இருந்து வரும் நோயாளியை தாங்கள் ஏற்பது விதிகளுக்கு முரணானது என்பதால், ஏற்க முடியாது என்று கூறினர்.
பிறகு சாட்டிலைட்டில் டப்பன் மருத்துவமனை, அறிவியல் நகர சாலையில் சிம்ஸ் மருத்துவமனைகளை நாடினேன். ராகிலாவில் நாராயணி மருத்துவமனைக்கு பல முறை முயற்சித்தும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஒரு படுக்கை ஒதுக்கக் கேட்டு பல தனியார் மருத்துவமனைகளிடம் கேட்டுப் பார்த்தேன். நகரில் எந்த மருத்துவமனையிலும் இடம் கிடைக்கவில்லை.
நிருபர்களில் நண்பர்கள் சிலரை அழைத்தேன். கிரைம் நிருபர்கள், மருத்துவத் துறை நிருபர்களைத் தொடர்பு கொண்டேன். எனக்காக அவர்களும் முயற்சி செய்து பார்த்தார்கள். மே 12 மற்றும் 13 தேதிகளில் எந்த மருத்துவமனையிலும் ஒரு படுக்கையை அவர்களால் பெற முடியாமல் போனது. அறை எதுவும் கிடைக்கவில்லை. நகரின் மேயரைத் தொடர்பு கொண்டேன்.

தனியார் மருத்துவமனையில் படுக்கை கிடைப்பது சிரமம் என்று அவர் தெரிவித்தார். ஆனால் உமேஷுக்கு நல்ல சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய, சிவில் மருத்துவமனையின் கண்காணிப்பாளரிடம் தாம் பேசுவதாக மேயர் தெரிவித்தார். அவர் பேசியிருப்பார் என்று நான் நம்புகிறேன்.
இருந்தபோதிலும், தனியார் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காது என்று நம்பிக்கை இழந்துவிட்ட நிலையில், சிவில் மருத்துவமனையில் உமேஷ் சிகிச்சை மீது கவனம் செலுத்தினேன். அந்த நிலையில் சிவில் மருத்துவமனை தான் நல்லது என்று நிருபர் நண்பர்களும் கூறினர்.
கோவிட்-19 மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அதிகாரியுடன் நான் பேசத் தொடங்கினேன். முதல் மூன்று நாட்கள் அவர் என்னுடைய அழைப்புகளுக்குப் பேசினார். இருந்தாலும் உமேஷின் உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. வெளியில் இருந்து அவருக்கு ஆக்சிஜன் தர வேண்டிய தேவை அதிகரித்தது.
உயிர்காக்கும் மருத்துவ சாதனங்களின் வசதியுடன் உமேஷுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்குவதற்கு முன்பு கமலேஷ் உபாத்யாய என்ற டாக்டரிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
உமேஷின் சுவாசம் சீரடையாத காரணத்தால் வென்டிலேட்டர் உதவியுடன் கூடிய சிகிச்சைக்கு மாற்ற வேண்டி இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆக்சிஜன் எடுத்துக் கொள்ள முடியாமல் உமேஷ் போராடுவதை அவர் வீடியோ கால் மூலம் காட்டினார். அவரால் பேச முடியவில்லை. தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று கையால் சைகையாக மட்டும் காட்டினார்.
தினமும் உடற்பயிற்சி செய்யக் கூடிய, நல்ல உடல்வாகு உள்ள, ஆரோக்கிய குறைபாடு எதுவும் இல்லாத, பலசாலியான அவருக்கு மருந்துகள் மீது நம்பிக்கை கிடையாது. மன உறுதியில் தான் நம்பிக்கை கொண்டவர். ஏதோ ஒரு வைரஸ் தன்னை ஐ.சி.யூ. வரை கொண்டு செல்லும் என்றோ, தன் குடும்பத்தினருக்காகவும் தன் பிள்ளைகளுக்காகவும் போராட வேண்டியதற்குப் பதிலாக, சிறிதளவு ஆக்சிஜனுக்காகப் போராட வேண்டியிருக்கும் என ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்.
அவர் தளர்வாக, பலவீனமாக, ஏறத்தாழ போராட்டத்தில் தோல்வி அடையும் நிலையில் இருந்தார். எதையாவது செய்து, என்னை என் குடும்பத்தினருடன் சேர்த்து வைத்து விடுங்கள் என்று கூற முயற்சிப்பது போல இருந்தது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
அவருடைய குடும்பத்தினர் வேறொரு போராட்டத்தில் இருந்தனர். சமுதாயத்தில் நன்கு படித்தவராக ஷெபாலி இருக்கிறார். உறுதியானவர், தன் கனவுகளுக்காக உழைத்து வருபவர்.
இருந்தபோதிலும், அவர் உறுதி குலைந்து இருப்பதைக் காண்பது துரதிருஷ்டமானதாக இருந்தது. இளைய சகோதரிக்கு இப்படியொரு நிலை வருவதை எந்த சகோதரனும் பார்க்க விரும்பாத சூழ்நிலை அது. அவள் நிலைகுலைந்துவிட்டாள்.
பயம் சூழ்ந்து கொண்டது. பலவீனமாகிவிட்டாள். அருகில் குடும்பத்தினர் நிறைய பேர் வசித்தாலும், அவளை யாராலும் சந்தித்து ஆறுதல் கூற முடியவில்லை. தங்களின் தந்தை திரும்பி வந்துவிட வேண்டும் என்று தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்த, தன் இரண்டு மகள்களுடன் அவள் தனியாக இருந்தாள். அவருடைய புகைப்படத்துடன் - சிறந்த தந்தை - என்று குறிப்பிடும் ஒரு போஸ்டரை மகள்கள் சமீபத்தில் பரிசாக அளித்திருந்தனர். அதை தன்னுடைய அறையில் உமேஷ் பெருமையுடன் வைத்திருந்தார்.
ஒருபுறம் உமேஷ் சிகிச்சை பெற்று வந்தார். மறுபுறம், பல நாட்களாக அவருடன் இருப்பதால் ஷெபாலிக்கு மருத்துவப் பரிசோதனை செய்தாக வேண்டும். ஷெபாலிக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளது. தனக்கு கொரோனா பரிசோதனை செய்யும்படி கேட்டு 104 ஹெல்ப்லைனுக்கு ஷெபாலி தொடர்பு கொண்டார். அவருக்குப் பரிசோதனை செய்ய பல அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள நான் முயற்சி செய்தேன். ஆனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
அடுத்த 3 நாட்கள் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படவில்லை. நீரிழிவு நோயாளியாக இருப்பதால், அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் சிக்கலாகிவிடுமே என்று நாங்கள் பயந்தோம்.
அரசு அதிகாரிகள் யாரும் பதில் அளிக்காததால், அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட ஆய்வகங்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று யோசித்தோம். தனியார் மருத்துவமனைகளில் மருத்துவப் பரிசோதனைகள் செய்வதை நிறுத்துவதற்கான அரசின் சுற்றறிக்கை இன்னும் வரவில்லை. டாக்டரின் பரிந்துரை சீட்டை ஆய்வகத்தில் கேட்டார்கள்.

பட மூலாதாரம், Science Photo Library
சகோதரி உள்ள பகுதி, குறைந்த வருவாய் பிரிவினர் வாழும் பகுதி. அங்கு டாக்டர்கள் சிகிச்சை மையங்களை மூடிவிட்டனர். நான் வசிக்கும் கட்லோடியா பகுதியில் ஒரு டாக்டரிடம் இருந்து நான் பரிந்துரை சீட்டை வாங்கி வந்தபோது, இனிமேல் புதிய சாம்பிள்களை வாங்க வேண்டாம் என்று அரசு உத்தரவு வந்திருப்பதாக ஆய்வகத்தில் கூறிவிட்டனர்.
தனியார் ஆய்வகத்தை அணுகுவதற்கு ஒரு நாள் முன்னதாக, சகோதரி அருகில் நகர்ப்புற சுகாதார மையத்திற்குச் சென்றிருக்கிறார். இருந்தபோதிலும், அங்கு நீண்ட வரிசையில் நிறைய பேர் காத்திருந்தனர். பரிசோதனை செய்வதற்கு அலுவலர்கள் இல்லை. அவர் தன் மகள்களுடன் நீண்ட நேரம் தனியாக நின்றிருக்கிறார். ஆனால், யாருமே வரவில்லை. அதனால் சகோதரி திரும்பி வந்துவிட்டார். பிறகு, தனியார் ஆய்வகத்திலும் பரிசோதனை செய்து கொள்ள முடியாமல் போனது.
அவருடைய மனவேதனையைப் பார்த்து ட்விட்டர் பதிவு மூலம் முதல்வர், பிரதமருக்கு தகவல் கொடுத்தேன். மருத்துவப் பரிசோதனை செய்வதற்கு சந்திக்கும் சிரமங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பதிவை பலரும் பல முறை மீண்டும் மீண்டும் மறுபதிவு செய்த போதிலும், அதனால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. அந்த ட்விட்டர் பதிவின் நோக்கம் அரசின் முயற்சிகளுக்கு களங்கம் கற்பிப்பதாக இல்லை. ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் துன்பங்கள் பற்றி தெரிவிப்பதாக அது இருந்தது.
இருந்தபோதிலும், என் அலுவலகத்தில் சக ஊழியர் ஒருவரின் உதவியுடன் மே 15ஆம் தேதி ஷெபாலிக்கு நாங்கள் மருத்துவப் பரிசோதனை செய்தோம். மறுநாள் அதன் முடிவு வந்தது. ஷெபாலிக்கும், இளைய மகள் ஊர்வசிக்கும் நோய் பாதிப்பு இருப்பதாக அதில் தெரிய வந்தது. அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்ப நாங்கள் முடிவு செய்தோம்.
மே 16 மாலை சுமார் 4 மணிக்கு, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஷெபாலி ஏறியபோது, என்னுடைய காரில் அறிவியல் நகர சாலையில் உள்ள சிம்ஸ் மருத்துவமனைக்கு நான் பின்தொடர்ந்து சென்றேன். என் அலுவலக நண்பரின் உதவியுடன் அந்த மருத்துவமனையில் சகோதரியை சேர்க்க ஏற்பாடு செய்தோம்.
வழியில் சிவில் மருத்துவமனையை நாங்கள் கடந்தபோது, அந்த சமயத்தில் உறவினர் ஒருவர் என்னை அழைத்து, உமேஷ் உடல்நிலை குறித்து கேட்க முடியுமா என கேட்டார். டாக்டர்களிடம் இருந்து தகவலை அறிய காலையில் இருந்து முயற்சி செய்து வந்த போதிலும், யாரும் பதில் அளிக்கவில்லை என்றும், உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்றும் நான் கூறினேன். இன்று காலையில் உமேஷ் இறந்துவிட்டதாக தனக்குத் தகவல் வந்திருப்பதாக அவர் கூறினார்.
நான் எதுவும் சொல்ல முடியவில்லை, எதையும் யோசிக்க முடியவில்லை, நான் செய்யக் கூடியது எதுவுமே இல்லை. நான் காரை நிறுத்த முடியாது, ஆம்புலன்ஸ் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன்.
பலத்தை எல்லாம் திரட்டிக் கொண்டு, டாக்டர் கமலேஷ் உபாத்யாயவை தொடர்பு கொண்டேன். மருத்துவமனையில் இன்று தனக்கு பணி இல்லை என்பதால், உமேஷ் நிலை பற்றி தனக்கு தகவல் தெரியாது என்று அவர் கூறினார். அவருடைய பதில் அதிர்ச்சி அளித்தது. சிவில் மருத்துவமனையை நம்பியது மிகப் பெரிய தவறு என்பதை மிகவும் தாமதமாக நான் உணர்ந்து கொண்டேன்.
மற்றவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். டாக்டர் மைத்ரேய கஜ்ஜாரை தொடர்பு கொண்டபோது, சனிக்கிழமை காலை உமேஷ் இறந்துவிட்டதாக உறுதி செய்தார். இருந்தபோதிலும், மாலை 5 மணிக்கு நான் தொடர்பு கொள்ளும் வரையில், மருத்துவமனை நிர்வாகத்தினர் இதை எனக்குத் தெரிவிக்கவே இல்லை.

அப்போது எழுந்த சூழ்நிலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. கொரோனா வைரஸ் ஏற்கெனவே குடும்பத்தை சிதறடித்துவிட்டது. இன்னும் அதிக வலியைக் கொண்டு வரவுள்ளது. ஷெபாலி சென்ற ஆம்புலன்ஸ் சிம்ஸ் மருத்துவமனையை அடைந்தது. ஆனால் தூரத்தில் இருந்தாவது, கடைசி முறையாக தன் கணவரை பார்க்க வேண்டும் என்று அவர் விரும்பியதால், சிகிச்சைக்கு சேர்க்க முடியவில்லை.
அவருடைய கணவர் இறந்துவிட்டார் என்ற தகவலை அவரிடம் தெரிவிப்பது எனக்கு மிகவும் கஷ்டமான விஷயமாக இருந்தது. வாழ்க்கை முழுக்க அவளை நேசித்த ஒரு மனிதர், சிவில் மருத்துவமனையில் தனிமையில் இறந்துவிட்டார். பல மணி நேரமாக அவரது உடல் கேட்பாரற்றுக் கிடக்கிறது. இதை என் சகோதரியிடம் தெரிவிக்க வேண்டும்.
ஷெபாலியை திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் முன்வரவில்லை. தனியார் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. என்னுடைய காரிலும் அவரை உட்கார வைக்க முடியவில்லை. வீட்டுக்கு அழைத்துச் செல்வது கஷ்டமானதாக இருந்தது. டாக்டர்கள் இப்போது சிகிச்சைக்கு சேர்க்க மறுக்கிறார்கள் என்று பொய் சொல்லி, நாம் நாளைக்கு தான் வர வேண்டும் என்று கூறினேன்.
ஒரு ஸ்கூட்டருக்கு ஏற்பாடு செய்து கொடுத்து, அதில் வீட்டுக்கு வருமாறும், நான் பின்தொடர்ந்து வருகிறேன் என்றும் கூறினேன். அவர் வீட்டுக்குச் சென்றதும், உமேஷ் மரணம் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது.
நீண்ட அலறலுக்குப் பின், ``அண்ணா, உமேஷ் வீட்டுக்குத் திரும்பி வருவார் என்று கூறினாயே, இப்போது உமேஷ் எங்கே'' என்று கேட்டாள்.
வெறும் மூன்று நாட்களில் அவளுடைய குடும்பத்தை கொரோனா வைரஸ் சிதைத்துவிட்டது. கடந்த 20 ஆண்டுகளாக உருவாக்கிய குடும்பம் அது. அவள் தனிமையாகிவிட்டாள். அவளை எதிர்கொள்ளும் தைரியம் எனக்கு இல்லை. தன்னுடைய கணவரை மீண்டும் அழைத்து வந்துவிடும் அளவுக்கு எனக்கு தொடர்புகள் இருப்பதாக அவள் நம்பினாள். நான் மிக மோசமான அளவுக்கு அதை நிறைவேற்றத் தவறிவிட்டேன்.
இந்த நகரில் கடந்த 20 ஆண்டு காலமாக நான் பத்திரிகையாளனாக இருக்கிறேன். மாநிலத்தில் உயர்நிலையில் உள்ளவர்களுடன் தொடர்பு உள்ளது. பல சமயங்களில், நான் உதவி கிடைக்காத நிலைக்கு ஆளானேன். கடந்த சில தினங்களாக, தானாக நடக்க வேண்டிய சாதாரண விஷயங்களுக்குக் கூட நான் பல முறை தொடர்பு கொள்ள வேண்டிய சங்கடங்கள் ஏற்பட்டன. அகமதாபாத்தில் கொரோனா குழப்பத்துக்கு எதிராக எதுவுமே சாத்தியப்படவில்லை.
அவருடைய மரணம் நடந்து 20 நாட்கள் கழித்தும், அவருக்கு என்ன சிகிச்சை தரப்பட்டது, எத்தனை மணிக்கு அவர் இறந்தார், அவரைக் காப்பாற்ற கடைசி நேரத்தில் டாக்டர்கள் என்ன முயற்சி செய்தார்கள், அவருடைய உயிரைக் காப்பாற்ற எந்த வென்டிலேட்டர் பயன்படுத்தப்பட்டது, சர்ச்சைக்குரிய தாமன்-1 என்ற சுவாச உதவி சாதனமா என்று எந்த விவரமும் எனக்கு கிடைக்கவில்லை.
விடை தெரியாத பல கேள்விகள் உள்ளன. என் சகோதரியுடன் இணைந்து, பல தளங்கள் மூலம் நான் தொடர்ந்து இவற்றைக் கேட்பேன். காணாமல் போன அவருடைய செல்போன், சிம் கார்டு, கையில் கட்டியிருந்த கடிகாரம் குறித்த எந்தக் கேள்விகளுக்கும் மருத்துவமனை நிர்வாகம் பதில் அளிக்கவில்லை.
இறந்த அவருடைய உடலில் இருந்து இவற்றை மற்றவர்கள் திருடியிருக்க வேண்டும்.

நடந்த விஷயங்களை மற்றவர்களிடம் நான் கூறியபோது, உங்களுக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களின் நிலைமை பற்றி யோசித்துப் பாருங்கள் என்று ஏறத்தாழ அனைவருமே கூறினர். யாருடனும் தொடர்பு வசதிகள் இல்லாத மக்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.
அவர்களுக்கோ, அவர்களுடைய உறவினருக்கோ என்ன நடந்திருக்கும் என நினைத்துப் பாருங்கள்.
அகமதாபாத்தில் நோய்த் தாக்குதல் நிறைய பேருக்கு ஏற்பட்டுள்ளது. அந்தத் தகவல் தினமும் வெளியிடப் படுகிறது. ஆனால் அதேசமயத்தில் படுக்கை வசதிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகின்றன.
இப்போதைய நிலையில், அறிகுறிகள் உள்ள, சந்தேகத்துக்கு உரியவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. அதாவது பரிசோதனை செய்யப்படும் ஒவ்வொருவருக்கும் ஒரு படுக்கை தேவைப்படுகிறது, டாக்டரும் தேவைப்படுகிறார். ஆனால் நகரில் கூடுதல் டாக்டர்களோ, கூடுதல் படுக்கைகளோ கிடையாது.
அகமதாபாத் நகரில் உள்ள நிலைமை அச்சம் தருவதாக உள்ளது. இப்போது சில காலம் நான் கொரோனா பாதிப்புகள் சூழ்நிலையில் இருப்பதால், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் சேர உதவி செய்வதால், நிறைய பேர் உதவி கேட்டு என்னை தொடர்பு கொள்கிறார்கள். சமீபத்தில் கோவிட் நோய்த் தாக்குதல் உறுதி செய்யப்பட்ட 60 வயதான சுர்சிங் பஜராங்கே என்ற ஆண் பற்றி தெரிய வந்தது. பரிசோதனை முடிவு வந்ததும், அவரை சிகிச்சைக்கு சேர்க்க பல்வேறு மருத்துவமனைகளில் அவருடைய மகன் விவேகாந்த் பஜராங்கே முயற்சி செய்துள்ளார்.
யாருமே அரசு மருத்துவமனைகளை நம்பவில்லை போல தெரிகிறது. அவர் சிம்ஸ், எச்.சி.ஜி. மற்றும் பல தனியார் மருத்துவமனைகளுக்குத் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் எங்குமே படுக்கை கிடைக்கவில்லை. பல முறை முயற்சித்த பிறகு, ஆஸ்ரம் சாலையில் காப்பாளர் தனியார் மருத்துவமனையில் ஒரு படுக்கை கிடைத்தது.
இந்தக் கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், நிகுல் இந்த்ரேக்கர் என்ற இளைஞரின் தாயார் ஜைடஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று மாலையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை முடிவு வரும். அவருக்கு நோய்த் தாக்குதல் உறுதி செய்யப்பட்டால், வேறொரு மருத்துவமனைக்கு அவரை மாற்ற வேண்டும். நிகுல் அனைத்து மருத்துவமனைகளிலும் முயற்சி செய்து பார்த்துவிட்டார்.
ஆனால் இதுவரையில், எந்த மருத்துவமனையிலும் ஒரு படுக்கையும் கிடைக்கவில்லை. அவருக்கு அரசு மருத்துவமனைகள் மீது நம்பிக்கை இல்லை. தனியார் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்கவில்லை. அவர் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
இதுபோன்ற உதவியற்ற நிலை அகமதாபாத் நகரில் தினமும் பலருக்கு ஏற்படுகிறது. மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்காத காரணத்தால், வீடுகளிலேயே பலர் இறந்துள்ளனர். எந்த மருத்துவமனையிலும் என் தாயாருக்கு ஒரு படுக்கையை பெற முடியவில்லை என்றால், மாநிலத்தில் வளர்ச்சிகள் ஏற்பட்டிருப்பதால் என்ன பயன் என்று நிகுல் என்னிடம் கேட்டார்.
ஷெபாலியின் குடும்பம் போல பல குடும்பங்களை கொரோனா சிதைத்துள்ளது. நிலைமையை கையாள வழி தெரியாமல் அரசு திணறுவதாகத் தெரிகிறது. நல்ல சிகிச்சை மற்றும் கண்ணியமான சாவுக்கான உரிமை நம் எல்லோருக்கும் உள்ளது.
ஷெபாலி மே 18-ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐந்து நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மறுபக்கம் அவரது 15 வயது மகள் ஊர்வசி அவரது வீட்டில் எங்கள் அத்தையுடன் இருந்தார். குஷாலிக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்த நிலையில், இத்தனை நாட்கள் தனியாக அவர் வசித்து வந்தார்.
இவர்கள் மூவரும் மே 23-ம் தேதி ஒன்றாக இணைந்தனர். தங்களது வழக்கமான வாழ்க்கையை வாழ முயன்று வருகின்றனர். ஷெபாலி வீட்டிலிருந்தபடியே மீண்டும் தனது பணியைத் துவங்கியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












