தமிழகத்தில் எவ்வளவு கொரோனா பரிசோதனை கிட்கள் உள்ளன?: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் கையிருப்பில் உள்ளதாகக் கூறப்படும் பரிசோதனை கிட்கள் குறித்து மு.க. ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி விளக்கமளித்துள்ளார். தமிழ்நாட்டில் நோயாளிகளுக்கு பெரிய அளவில் வென்டிலேட்டர்கள் தேவைப்படவில்லையென்றும் அவர் கூறினார்.
சென்னையில் கொரோனா வேகமாகப் பரவிவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுக் கூட்டம் சென்னை மாநகராட்சியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர், அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
"கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பரவலைத் தடுக்க அரசு எடுத்த முயற்சிகளால் நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில்தான் சற்று தொற்று அதிகரித்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மாநகரப் பகுதியில் தொற்றைத் தடுக்க என்ன செய்ய வேண்டுமென்ற ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 2)நடைபெற்றது.

பட மூலாதாரம், FACEBOOK/MK STALIN
இந்தக் கூட்டத்தில் பல்வேறு மட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு தொற்று அதிகரிப்பதற்கான காரணங்களை விளக்கினார்கள். குடிசைப் பகுதிகள், மக்கள் நெருக்கமாக வாழுகின்ற பகுதிகளில் நோய்ப் பரவல் கூடுதலாக உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம். எல்லா வகையிலும் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று தெரிவித்தார் முதல்வர் பழனிசாமி.
மேலும் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் சோதனைகள் செய்யப்படுவதால்தான் அதிக அளவில் தொற்று கண்டறியப்படுவதாகவும் அவர் கூறினார். "தமிழ்நாட்டில் அதிகமாக பரிசோதனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 13 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. மாநகராட்சிப் பகுதியில் நான்காயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனையில் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேடிப் பிடிக்கப்பட்டு அவர்களுக்கும் சோதனை செய்யப்படுகிறது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 23495 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 56 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 10,138 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். சரியாக மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் சிகிச்சையளிப்பதால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இறப்பு விகிதம் 0.8தான் இருக்கிறது. இதனால் அச்சமடையத் தேவையில்லை" என்று முதல்வர் தெரிவித்தார்.
தமிழக அரசின் கையிருப்பில் உள்ள பரிசோதனை கிட்களின் எண்ணிக்கை குறித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வியெழுப்பியிருந்தார். அது தொடர்பாகவும் முதல்வர் விளக்கமளித்தார்.


"எதிர்க்கட்சித் தலைவர் ஒரு குற்றச்சாட்டைச் சொல்லியிருக்கிறார். அதாவது, 9,14,000 பிசிஆர் கிட் இருந்ததாகவும் அதில் 4.66 லட்சம் கிட்களை பரிசோதனைக்கு பயன்படுத்திவிட்ட நிலையில், மீதம் 4.47 லட்சம் கிட்கள் இருக்கவேண்டும். ஆனால், 1.76 லட்சம் கிட்களே இருப்பதாக முதல்வர் சொல்லியிருக்கிறார் என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆனால், அவர் ஒரு விஷயத்தைக் கவனிக்கத் தவறிவிட்டார். அதாவது, மீதமுள்ள 2.41 லட்சம் கிட்கள் 43 பரிசோதனை மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுவிட்டன. 1.76 லட்சம் கிட்கள் தலைமை அலுவலகத்தில் உள்ளன.
இதுவரை 15 லட்சத்து 45 ஆயிரம் கிட்களை வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் 11 லட்சத்து 51 ஆயிரம் கிட்கள் பெறப்பட்டுள்ளன. 53,516 கிட்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆகவே இதுவரை தமிழக அரசால் பெறப்பட்ட பிசிஆர் கிட்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 55 ஆயிரத்து 216. தற்போது தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் இருப்பாக 4,59,800 கிட்கள் உள்ளன" என்று கூறினார்.
கொரோனா தொற்றைத் தடுப்பதில் தமிழக அரசு செயல்படும் விதம் குறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் பாராட்டியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "நம்முடைய மாநிலத்தில் அதிக சோதனைகளைச் செய்கிறோம். பிற மாநிலங்களில் எப்படிச் செய்கிறார்கள் என அங்கே போய் பார்த்தால்தான் தெரியும். இதுவரை பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 1,620 பேருக்கு தொற்று இருக்கிறது. அப்படியானால், அங்கெல்லாம் எப்படி பரிசோதனைகள் நடக்கின்றன என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்" என்று கூறினார்.

பட மூலாதாரம், ARUN SANKAR
தமிழ்நாட்டில் வென்டிலேட்டர்கள் தேவைப்படுமளவுக்கு பாதிப்படைந்தவர்கள் மிகவும் குறைவு எனவும் முதல்வர் கூறினார்.
"தமிழ்நாட்டில் 2741 வென்டிலேட்டர்கள் அரசாங்கத்திடமே இருக்கின்றன. 620 வென்டிலேட்டர்கள் புதிதாக வாங்கப்பட்டவை. தனியார் மருத்துவமனைகளில் 630 வென்டிலேட்டர்கள் இருக்கின்றன. ஆனால், இந்தத் தொற்றின் காரணமாக வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படுவது மிக மிகக் குறைவு. தற்போது வெறும் 5 பேர்தான் வென்டிலேட்டரில் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு ஆக்ஸிஜன்தான் கொடுக்கப்படுகிறது. வென்டிலேட்டர் இல்லாததால் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று சொல்வது பொய்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்காக 17,500 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 75,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 1.5 முகக் கவசங்கள் ஏழைகளுக்கு வழங்கப்படுகின்றன" எனவும் முதல்வர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












