நரேந்திர மோதி 2.0: ஆட்ட நாயகன் அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரெஹான் ஃபஜல்
- பதவி, பிபிசி நிருபர்
மக்களவை தேர்தலுக்கு பாஜக தயாரா என்று 2019 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக அமித் ஷாவிடம் ஒரு முறை கேட்கப்பட்டது. வாக்காளர்களை எதிர்கொள்ள பயப்படுகிறாரா? என்ற தொனியில் கேட்கப்பட்ட கேள்வி அது. '2019 தேர்தலுக்கான தயாரிப்புகளை நாங்கள் 2014 மே 27 முதலே தொடங்கிவிட்டோம்' என்று அதிரடியான பதிலை அளித்தார் அமித் ஷா.
சதுரங்க விளையாட்டில் வல்லவரான அமித் ஷா எப்போதுமே தனது போட்டியாளர்களை வியூகம் வகுத்து வென்று மகிழ்கிறார். அமித் ஷாவின் செயல்படும் பாணியே அவரை பிற தலைவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
'Amit Shah and the March of BJP ' என்ற அமித் ஷாவின் சுயசரிதை புத்தகத்தை எழுதிய அனிர்பன் கங்குலி மற்றும் சிவானந்த் துவிவேதி ஆகியோர் இப்படி குறிப்பிடுகின்றனர். 'ஒரு முறை அமேதியில் ஜகதீஷ்பூருக்கு பயணம் மேற்கொண்ட அமித் ஷா திடீரென்று யாரும் எதிர்பாராதவிதமாக பாஜக தொண்டர்கள் கூட்டத்தை கூட்டினார் கடைசி நிமிடத்தில் கூட்டத்தை கூட்ட வேறு இடம் கிடைக்கவில்லை எனபதால் . சமையல் எண்ணெய் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் கிடங்கில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கூட்டம் அதிகாலை 2 மணி வரை நீடித்தது.
கூட்டம் முடிந்தவுடன் ஷா மீண்டும் லக்னோவுக்கு திரும்பிச் சென்றுவிடுவார் என்று கருதிய உள்ளூர் பாஜக தலைவர்கள் அமித் ஷா தங்குவதற்குத் தேவையான எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. எனவே, பொருட்களை சேகரித்து வைத்திருக்கும் அந்தக் கிடங்கிலேயே அன்று இரவு தங்க முடிவு செய்தார் அமித் ஷா. படுப்பதற்கு இடம் தேடியவாறு படிக்கட்டுகளில் ஏறிச் சென்ற அவர், அங்கேயே ஒரு இடத்தில் படுத்துவிட்டார். தங்கள் கட்சியின் தேசியத் தலைவர் ஒரு கிடங்கில், எந்த வசதியும் இல்லாமல் தகரக் கூரையின் கீழ் படுத்து, எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியாக உறங்குவார் என்பதை உள்ளூர் தலைவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை'.

பட மூலாதாரம், Getty Images
நரேந்திர மோதியின் தளபதி அமித் ஷா
2019 தேர்தலில் அமித் ஷா வெற்றி பெற்றவுடன், கட்சித் தலைமையகத்தில் அவர் நரேந்திர மோதியை வரவேற்ற விதம், அவரது அந்தஸ்து இப்போது மோடியின் சீடர் என்பதையும் தாண்டி உயர்ந்து தற்போது மோதியின் தளபதி என்ற நிலையை அடைந்துவிட்டதையும் காட்டியது. ராஜ்நாத் சிங்கிற்கு பதிலாக அமித் ஷா உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த மறுசீரமைப்பை ராஜ்நாத் சிங் விரும்பவில்லை. தனக்கு ஒப்படைக்கப் பணியை அவர் செவ்வனே செய்திருந்தார் என்ற நிலையில் ராஜ்நாத் சிங்கிற்கு வருத்தமே எஞ்சியது.
பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கத்தை செயல்படுத்தவதற்காகவே இந்த பொறுப்பு அமித்ஷாவுக்கு கொடுக்கப்படுகிறது என்பது, உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பை அமித் ஷாவுக்கு வழங்கியதன் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளிப்பட்டது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்வது, ராமர் கோயில் பிரச்சனையை தீர்ப்பது, சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேசத்து மக்களைத் தடுக்க குடிமக்களின் தேசிய பதிவேட்டை உருவாக்குதல் மற்றும் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, அண்டை நாடுகளில் அல்லலுற்று இந்தியாவிற்கு வரும் இந்துக்களுக்கு குடியுரிமை கொடுப்பது போன்றவை இதில் அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images
சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்யவேண்டும் என்று புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நரேந்திர மோதி முடிவு செய்திருந்தாலும், பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இவ்வாறு செய்கிறார் என்று அவரது எதிரிகள் குற்றம் சாட்டக்கூடும் என்பதால் பொறுமையாக காத்திருந்தார். தேர்தல் வெற்றிக்கு பிறகு உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அமித் ஷா, காஷ்மீர் தொடர்பான அனைத்து கோப்புகளையும் படித்து, அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்த பிறகு, சட்டப்பிரிவு 370 தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம் என மோதிக்கு அறிவுறுத்தினார்.
அவர்கள் இருவரும் தங்களுடைய நெருங்கிய ஆலோசகர்களுடன் பல்வேறு கோணங்களிலும் கலந்தாலோசனை செய்தனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவு அகற்றுவதோடு, ஜம்மு-காஷ்மீரை இரண்டு பகுதிகளாக பிரித்து, யூனியன் பிரதேசங்களாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக அமித் ஷா அல்லும் பகலும் சிந்தித்து செயலாற்றினார்.
அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியிருந்த நிலையில், யாத்ரீகர்களின் பயணம் நடுவிலேயே நிறுத்தப்பட்டது. மூன்று முன்னாள் முதல்வர்கள் உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கின் உயர்மட்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
"ஒரு இலக்கை நிர்ணயித்து அதை நிறைவேற்றத் திட்டமிடுபவர் அமித் ஷா. காஷ்மீர் விவகாரத்தில் அவரது நடவடிக்கைகளுக்கு பள்ளத்தாக்குப் பகுதியில் பலத்த எதிர்ப்பு இருந்தாலும், முந்தைய அரசாங்கங்களின் பயனற்ற செயல்பாடுகளால் தான் காஷ்மீரில் பிரச்சனை தொடர்கிறது என்ற செய்தியை இந்தியாவின் பிற பகுதிகளிலும், தெளிவாக கொண்டு சேர்ப்பதில் ஷா வெற்றிபெற்றார். அதோடு, அவர் பள்ளாத்தாக்கில் நிலைமையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தார், இதுதான் அமித் ஷாவின் செயல்பாடும் பாணி' என்று கூறுகிறார் அனைவராலும் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளரும், பாஜக தலைமைக்கு நெருங்கியவருமான ராம் பகாதூர் ராய்.

பட மூலாதாரம், Getty Images
காஷ்மீரில், அமித் ஷா மேற்கொண்ட மற்றுமொரு பெரிய நடவடிக்கை காஷ்மீரின் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் அளித்தது. அது, பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.
அமித் ஷா உள்துறை அமைச்சரான பிறகு ஜம்மு-காஷ்மீரின் பஞ்சாயத்து சட்டங்களை மாற்றினார். இதனால், இப்போது 29 பிரிவுகளில் 23-இல் பணிபுரிய தேவையான நிதி மற்றும் ஊழியர்களைக் கொண்ட இந்தியாவின் முதல் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் மாறிவிட்டது. எந்தவொரு மாவட்ட ஆட்சியர் அல்லது ஆணையரின் ஒப்புதலையும் பெறாமல், தனது முடிவுகளை சுயமாக எடுக்கும் உரிமை இந்த யூனியன் பிரதேசங்களின் பஞ்சாயத்துகளுக்கு உண்டு.
இது பஞ்சாயத்துகளுக்கு சுதந்திரத்தை வழங்கி, பஞ்சாயத்துராஜின் அடிப்படை நோக்கங்களை பூர்த்தி செய்கிறது. இது அரசியல்வாதிகளின் பங்கையும் குறைத்துவிட்டது. ஆனால் தற்போது நடைமுறைபடுத்தப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரை மறுசீரமைக்கும் செயல்முறைக்கு மற்றுமொரு வடிவத்தை எவ்வாறு கொடுக்க முடியும் என்பதே அமித் ஷா சந்திக்கவிருக்கும் உண்மையான சவாலாக இருக்கும்.
சர்ச்சைகளில் சிக்கிய குடியுரிமை திருத்த மசோதா
ஷாவின் இரண்டாவது பெரிய நடவடிக்கை குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதேயாகும். அண்டை நாடுகளின் சிறுபான்மையின மக்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்குவதாகக் கூறப்பட்டதன் அடிப்படையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்தது. நாடு முழுவதும் எழுந்த போராட்டங்ளுக்கு பிறகு, 'இது முஸ்லிம்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தாது. ஏனெனில் இந்த மசோதாவின் நோக்கம் குடியுரிமையைப் பறிப்பதல்ல, குடியுரிமையை வழங்குவதாகும்' என்று அமித் ஷா கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
"இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பு, உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களை குறிப்பாக சிறுபான்மையினரை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை அல்லது அயோத்தி வழக்கில் செய்ததைப் போல இஸ்லாமியர்களைத் தயார்படுத்தவில்லை" என்கிறார் இந்தியா டுடே என்ற பத்திரிகையின் ஆசிரியர் ராஜ் செங்கப்பா.
"முதலில் இந்த மசோதாவைப் பற்றி மக்களுக்கு சரியாக தெரியப்படுத்தவில்லை. இரண்டாவதாக வேறு எந்த பிரிவையும் குறிப்பிடாமல் இந்த மசோதாவைக் கொண்டு வந்திருக்க முடியும்" என்று ராம் பகாதூர் ராய் கூறுகிறார். "காரணமே இல்லாமல் நரேந்திர மோதி அரசுக்கு எதிராக மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது. அமித் ஷா, CAA ஐ NRC உடன் இணைத்துப் பேசியது அவர் சறுக்கிய மற்றொரு இடம்.

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இந்த விஷயத்தை சாந்தப்படுத்துவதற்காக, பிரதமர் மோதி ராம்லீலா மைதானத்தில் மக்களை சந்தித்து, NRC ஐ அமல்படுத்துவது குறித்து அமைச்சரவையே முடிவு செய்யவில்லை என்று விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. உண்மையில், நேரு, சர்தார் படேல் ஆகியோரும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் அடிப்படையான நோக்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் இந்த விஷயத்தை மக்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும்' என்று ராம் பகாதூர் ராய் கூறுகிறார்.
வீதிக்கு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலையில் அமித் ஷாவின் பங்கு
கோவிட் 19 சிக்கலை சமாளிக்கும் முக்கிய மையமாக, அமித் ஷாவின் உள்துறை அமைச்சகம் மாற்றப்பட்டது. இந்த முழு நெருக்கடியின் போதும், அவர் தினசரி காலை எட்டு மணியளவில் டெல்லியின் நார்த் பிளாக்கில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்று நள்ளிரவு வரை அங்கிருந்தே பணியாற்றுகிறார். தன்னுடைய அமைச்சகம் வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் பணிகள் குறித்து உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்.
இது மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான சுமூகமான ஒருங்கிணைப்பை உறுதி செய்கிறது. தனது மேசைக்கு வரும் அனைத்து கோப்புகளையும் பார்த்து, பணியை முடிக்கும் வரை அவர் வீட்டிற்கு கிளம்பமாட்டார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய ஊர்களுக்கே திரும்ப அனுப்பவதற்கு தேவையான திட்டமிடலை அமித் ஷா முழுமையாக செய்யவில்லை. இந்தியப் பிரிவினையின் போது ஒன்று முதல் ஒன்றரை கோடி மக்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு நடந்து சென்றபோது கண்ட காட்சிகளை மீண்டும் நாடு பார்க்கிறதோ என்ற திகைப்பு தோன்றியது.
இந்த சீர்குலைவுக்கும் குழப்பத்திற்கும் அமித் ஷாவே காரணம் என்று பிரபல வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா குற்றம் சாட்டுகிறார்.
'இந்த பிரச்சனை சரி செய்யப்பட வேண்டுமானால், இந்த முழு பொறுப்பும் உள்துறை அமைச்சகத்திடமிருந்து மாற்றப்பட வேண்டும்' என்றும் குஹா விமர்சிக்கிறார். நான்கு மணி நேரம் முன்னதாக செய்யப்பட்ட அறிவிப்பில் இந்தியா முழுவதிலும் முடக்கநிலை அமல்படுத்தப்பட்டது தொடர்பாக பல்வேறு தளங்களிலும் நரேந்திர மோதியும், அமித் ஷாவும் விமர்சிக்கப்படுகின்றனர்.
முடக்கநிலையை செயல்படுத்துவதற்கு முன் ஓரளவாவது முன் தயாரிப்பு செய்திருக்க வேண்டும் என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், மக்களுக்கு போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தால், கோடிக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று அமித் ஷாவின் தரப்பினர் இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த விஷயம் எவ்வளவு தீவிரமானது என்பதையும், அது ஏற்படுத்தக்கூடிய பேரழிவையும் 'அதிர்ச்சி வைத்தியம்' கொடுத்தபோதுதான் இந்திய மக்கள் புரிந்து கொண்டனர் என்கிறார் ராம் பகாதூர் ராய். "இந்த திடீர் முடிவு முற்றிலும் சரியானது, ஏனென்றால் இதுபோன்ற 'ஷாக் ட்ரீட்மெண்ட்' மூலமாகவே உளவியல் ரீதியாக மக்களை தயார்படுத்த முடியும்" என்கிறார் அவர்.
ஆனால் இதற்குப் பிறகு, மாநிலங்களுடன் ஒருங்கிணைப்பு, மற்றும் திட்டங்களை உருவாக்குவது, அவற்றை செயல்படுத்துவதிலும் நிச்சயமாக குறைபாடு ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் நிர்கதியாக விடப்பட்டனர். அதுமட்டுமல்ல, பல மாநில அரசாங்கங்கள் புலம்பெயர் தொழிலாளர்களை தங்கள் மாநிலத்தை விட்டு வெளியேற்ற முயற்சிக்கின்றன. 1991 முதல், கிராமங்களில் இருந்து நகரத்திற்கு புலம் பெயர்ந்த 20 முதல் 25 கோடி மக்களின் கனவும், வாழ்க்கையும் தரைமட்டமானது, அவர்கள் நிர்கதியாய் நிற்கின்றனர்.
அமித் ஷாவின் மற்றுமொரு பக்கம்
பிரிட்டிஷ் வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான பேட்ரிக் பிரெஞ்சுக்கு அளித்த ஒரு நீண்ட நேர்காணலில் பேசிய அமித் ஷா, தான் நாட்குறிப்பேட்டில் தொடர்ந்து எழுதுவதாகவும், அது சுய மதிப்பீட்டிற்கானது, வெளியீட்டிற்காக அல்ல என்றும், தனது அனுபவங்களின் பதிவே அவை என்றும் அவர் கூறினார்.
இந்த நேர்காணலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களிலும், அமித் ஷாவின் அறையின் சுவரில் மாட்டப்பட்டுள்ள இரண்டு புகைப்படங்களை பார்க்க முடிகிறது. அந்த புகைப்படங்களின் பின்னணியில்தான் தன்னை முன்வைக்க விரும்புகிறார் என்பது பல சந்தர்ப்பங்களில் காணமுடிகிறது. அமித் ஷா இந்த இரண்டு நபர்களிடமிருந்து அதிக அளவில் உத்வேகம் பெற்று வருகிறார் என்பதை இதை வெளிப்படையாகக் காட்டுகிறது. ஆர்.எஸ்.எஸ்ஸுடன் எந்த தொடர்பும் இல்லாத சாணக்கியர் மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆகிய இருவரின் புகைப்படங்களே அவை என்பது குறிப்பாக சொல்ல வேண்டிய விஷயமாகும்.

பட மூலாதாரம், Getty Images
சாணக்கியரின் 'சாம, பேத, தான, தண்டம்' என்ற முக்கிய கொள்கைகளும், அமித் ஷாவின் அரசியல் பாணியில் பிரதிபலிக்கிறது. அமித் ஷா எந்த விஷயத்தையும் முயற்சிக்க தயங்குவதில்லை. இந்துத்துவா என்ற வார்த்தையின் தந்தையாக கருதப்படும் சாவர்க்கர், முஸ்லிம்களின் புனித நிலம் இந்தியா அல்ல என்பது உட்பட பல விஷயங்களை வலியுறுத்தியவர்.
அமித் ஷா தனது கையில் கடிகாரம் கட்டுவதில்லை. வகை வகையான உணவுகளை விரும்பிச் சாப்பிடும் அமித் ஷாவுக்கு பக்கோடா மிகவும் பிடித்தமானது. பா.ஜ.காவின் கட்சித் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு டெல்லியில் தங்கியிருந்த சமயங்களில் அவர், அடிக்கடி சோனிபத் சாலையை ஒட்டியுள்ள சாலையோரக் கடைக்கு சென்று சாப்பிடுவார். அமித் ஷாவுக்கு இந்தி நடிகர் குருதத்தின் திரைப்படங்கள் மிகவும் பிடித்தமானது. திரைப்படங்களையும், சாஹிர் லூதியன்வி மற்றும் கைஃபி ஆஸ்மி எழுதிய பாடல்களையும் கஜல்களையும் ரசித்துக் கேட்பார்.
பியாசா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள, சாஹிரின் 'யே துனியா அகர் மில் பீ ஜாயே' என்ற பாடல் அவருக்கு மிகவும் பிடித்தமானது. அந்தப் பாடலால் மிகவும் ஈர்க்கப்பட்ட அமித் ஷா, பதின்பருவத்தில் அந்தப் பாடலை எழுதிய சாஹிர் லூதியானியைச் சந்திக்க மும்பைக்குச் செல்ல முயன்றார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வசித்து வந்த கிருஷ்ணா மேனன் மார்க்கில் உள்ள வீட்டில் தான் தற்போது அமித் ஷா வாசம் செய்கிறார். அமித் ஷா, தனது தலைவரைப் போலவே, வாரத்தின் ஏழு நாட்களுமே அரசியலிலேயே திளைத்திருக்கிறார். அரசியல் என்பது அவருக்கு ஒரு தொழில் அல்ல, அதுவே அவரின் வாழ்க்கை.

பட மூலாதாரம், Getty Images
கடினமாக உழைக்கும் அரசியல்வாதி
அமித் ஷாவைப் போல் கடினமாக உழைக்கும் அரசியல்வாதிகளை இந்தியாவில் பார்ப்பது அரிது. பிரபல பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தனது '2019 - How Modi Won India' என்ற புத்தகத்தில் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார், 'ஒருமுறை நான் காலை 6.40 விமானத்தில் லக்னோவுக்குச் சென்று கொண்டிருந்தேன். அதிகாலையில் எழுந்ததால் என்னுடைய கண்கள் சிவந்துபோய், தலைமுடி கலைந்திருந்தது. அதே விமானத்தில் பயணித்த அமித் ஷா வெள்ளை குர்தா பைஜாமா அணிந்து புத்துணர்ச்சியுடன் இருந்தார்.
நள்ளிரவில் கொல்கத்தாவிலிருந்து திரும்பிய அவர், ஆறு மணி நேரத்தில் அடுத்த பயணத்திற்காக மீண்டும் விமானத்திற்குள் நுழையும்போது புத்துணர்ச்சியுடன் காணப்பட்டார். விமானத்தில் நான் இட்லி சாப்பிட்டேன். தான் அன்று உண்ணாவிரதம் என்று கூறிய அமித் ஷா, தண்ணீர் மட்டுமே போதுமென்று உணவை மறுத்துவிட்டார். தற்செயல் நிகழ்வாக, நாங்கள் இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தோம் ".
அந்த ஹோட்டல் அனுபவத்தையும் ராஜ்தீப் நினைவு கூர்கிறார், "ஹோட்டலின் தாழ்வார நடைபாதையில் சுமார் 11 மணியளவில் சலசலப்பு சப்தம் கேட்டது. அப்போதுதான் அமித் ஷா தனது பணியை முடித்துக் கொண்டு, பாதுகாப்புக் காவலர்கள் புடைசூழ தனது அறைக்கு வந்தார். அப்போதும் அவரை சந்திப்பதற்காக, அவரது கட்சியின் தலைவர்கள் வரிசையில் காத்திருந்தனர். நள்ளிரவுக்குப் பிறகும் அவர் பலரையும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்.
மறுநாள் காலை ஏழு மணிக்கு தூங்கி எழுந்த நான், அமித் ஷாவுடன் பேசுவதற்காக அவரது அறைக்குச் சென்றேன். ஆனால், அவரோ அதிகாலையில் எழுந்து, டெல்லிக்கு புறப்பட்டுவிட்டார் என்பது தெரிந்து ஆச்சரியத்துடன் திகைத்துப் போனேன். நாட்டின் இரண்டாவது சக்திவாய்ந்த நபருக்கு இதுபோன்ற வாழ்க்கை இயல்பானது என்பதை புரிந்துக் கொண்டேன்" என்கிறார் பிரபல ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்.
முன் தயாரிப்புடன் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்
கட்சித் தலைவராக நரேந்திர மோதிக்குப் பிறகு இரண்டாவது பெரிய தலைவராக நீண்ட காலமாக இருந்தவர் அமித் ஷா. மோதி அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் ஓராண்டிற்குள் அமித் ஷா அரசாங்கத்தின் மீதான தனது பிடியை வலுவாக்கியிருக்கிறார். ஒரு காலத்தில் 'மோதி அரசு' என்று அழைக்கப்பட்ட அரசாங்கம் இப்போது 'மோதி-ஷா' அரசாங்கமாக பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
சண்டே கார்டியன் ஆசிரியர் பங்கஜ் வோஹ்ரா இவ்வாறு எழுதுகிறார்: "அமித் ஷா அவர் ஒரு சாதாரண அரசியல்வாதி அல்ல என்பதை பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறார். எந்தவொரு விஷயத்தையும் விவாதிப்பதற்கு முன்பு அவர் அது குறித்த தகவல்களை பரந்துபட்ட முறையில் படித்து தயார் செய்கிறார், தனது கட்சியின் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும் வெறும் வாய் வார்த்தைகளோடு நின்றுவிடுவதில்லை. களத்தில் இறங்கி ஓயாமல் பணியாற்றுபவர். குடியுரிமை மசோதா மீதான விவாதத்தில், அனைத்து எம்.பி.க்களுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.
உண்மையில், நீண்ட காலமாக இந்திய நாடாளுமன்றத்தில் வேறு எந்தவொரு மத்திய அமைச்சரும் அரசாங்கத்தின் கொள்கைகளை அவ்வளவு சிறப்பாக முன்வைக்கவில்லை என்றே சொல்லலாம். கடந்த மூன்று தசாப்தங்களில், சந்திரசேகர், எல்.கே.அத்வானி ஆகிய இருவரும் எந்தவொரு விஷயத்திலும் குறிப்புகளைப் பார்க்காமலும், எந்த உதவியும் இல்லாமல் நாடாளுமன்றத்தில் பேசக்கூடியவர்கள். தற்போது அமித் ஷாவை மட்டுமே அந்த பிரிவில் சேர்க்கலாம்.'
'உண்மையான அரசியலை' (Real politics) நம்புபவர் அமித் ஷா என்று பாஜகவில் உள்ள அவரது அபிமானிகள் என்று கூறுகிறார்கள். அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் அனிர்பன் கங்குலியும், சிவானந்த் துவிவேதியும் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார்கள், 'ஒருமுறை அவர் தனது கோட்டையான நரன்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தனது காங்கிரஸ் போட்டியாளரான ஜிதுபாய் படேலின் 500 சுவரொட்டிகளை வைக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தினார். ஆச்சரியப்பட்ட அவர்கள் காரணத்தை கேட்டதற்கு அமித் ஷா என்ன சொன்னார் தெரியுமா?
"எதிர் கட்சி வேட்பாளர் தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆனால், போட்டி கடுமையாக இருக்கிறது என்று காட்டுவதற்காக இந்த சுவரொட்டிகளை ஒட்டவேண்டும். அப்போதுதான் வாக்குப்பதிவு நாளில் அதிக எண்ணிக்கையில் நமது வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். எனது வெற்றி நிச்சயம் என்று அவர்கள் உணர்ந்தால் வாக்களிக்க வராமல் மெத்தனமாக வீட்டிலேயே இருந்துவிடக்கூடாது". வெற்றி பெற்றுவிடுவோம் என்று உறுதியாக இருந்தாலும், அதை எப்படி மேலும் சிறப்பாக்க முடியும் என்று சிந்திக்கும் ஆக்கப்பூர்வ அணுகுமுறையால் அந்தத் தேர்தலில் அமித் ஷா அபார வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பட மூலாதாரம், Getty Images
நரேந்திர மோதியின் வாரிசு
சில வட்டங்களில், மோதியின் வாரிசாக பார்க்கப்படுகிரார் அமித் ஷா. நரேந்திர மோதியே இந்த கருத்தை பராமரிக்க விரும்புகிறார் என்பதுதான் மேலும் சுவாரஸ்யமான விஷயம். குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நாளன்று, மக்களவையில் பிரதமர் நாற்காலி காலியாக இருந்தது.
அமித் ஷா தான் மக்களவையை வழிநடத்துகிறார் என்ற எண்ணத்தை அந்த முக்கியமான நாள் தோற்றுவித்தது. பாஜக எம்.பி.க்களும் 'பாரத் மாதா கி ஜெய்' என்ற முழக்கத்துடன் உற்சாகமாக அந்த மசோதாவை வரவேற்றனர் என்பதையும் பார்க்க முடிந்தது.
அன்றைய தினம் ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் தீவிரமாக இருந்ததால் அவர் மக்களவைக்கு வர முடியவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், "இந்த மசோதாவை மக்களவையில் முன்வைத்து நிறைவேற்றிய பெருமை அனைத்தும் அமித் ஷாவுக்கே செல்ல வேண்டும் என்பதற்காகவே பிரதமர் மோடி இதை வேண்டுமென்றே செய்தார். இதன் மூலமாக நரேந்திர மோதியின் வாரிசு என்ற முத்திரை அமித் ஷாவின் மீது அழுத்தமாக பதியவேண்டும் என்று அவர் விரும்பினார்" என்றும் சில பாஜக தலைவர்கள் நம்புகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












