கொரோனா சிகிச்சை: முஸ்லிம்கள் குறித்து அவதூறு காணொளி- உத்தரப்பிரதேச பெண் மருத்துவர் கூறுவது என்ன?

பட மூலாதாரம், ARTI LALCHANDANI
கொரோனாவால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் பற்றி அவதூறாகப் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜிஎஸ்விம் மருத்துவக்கல்லூரியின் முதல்வர், அந்த காணொளி மார்பிங் செய்யப்பட்டது என தற்போது கூறியுள்ளார்.
சில பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஜிஎஸ்விம் மருத்துவக்கல்லூரியின் முதல்வர் மருத்துவர் ஆர்த்தி லால்சந்தானி பேசும் காணொளி சமீபத்தில் வைரல் ஆனது.
அதில் அவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்றும், அவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
'' தப்லிக் ஜமாத்தை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு விஐபி போலச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதன் மூலம் மருத்துவர்களின் உழைப்பு வீணாகிறது. அவர்களுக்கு அரசும் தேவையில்லாமல் ஆயிரக்கணக்கில் செலவழிக்கிறது'' என அந்த காணொளியில் அவர் கூறியுள்ளார்.
மருத்துவர் ஆர்த்தி லால்சந்தானி வீட்டில் சகஜமாக அவர் சில பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது இந்த காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் இந்த காணொளியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் அவர் தாக்கி பேசியுள்ளார்.
''முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த தீவிரவாதிகளைத் திருப்திப்படுத்தும் அரசியல் செய்கிறார். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என முதல்வர் தெளிவாக உத்தரவிடவேண்டும்'' என டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன்,'' இந்த 30 கோடி பேரால் நாட்டின் பொருளாதாரமே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனது பேச்சை கேட்காமல், அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு கடிதம் எழுத உள்ளேன்'' எனவும் அவர் காணொளியில் கூறியிருக்கிறார்.

இந்தநிலையில் மருத்துவர் ஆர்த்தி லால்சந்தானிக்கு எதிராக சில முஸ்லிம் அமைப்புகள் புகார் பதிவு செய்தன.
இந்தநிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ளன டாக்டர் ஆர்த்தி லால்சந்தினி, தனது பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக 70 நாட்கள் முன்பு பதிவு செய்யப்பட்ட வீடியோவை மார்ப் செய்தி தற்போது வெளியிட்டுள்ளனர் என கூறுகிறார்.
'' என்னை மிரட்டி பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, தப்லிக் ஜமாத்தை போன்ற வார்த்தைகளை ஒரு பத்திரிக்கையாளர் சேர்த்து வெளியிட்டுள்ளார். அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளேன். மருத்துவமனையில் சுகாதார ஊழியர்களுக்கு தப்லிக் ஜமாத்தை சேர்ந்த சிலர் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என நான் குற்றஞ்சாட்டியபோது இந்த காணொளி பதிவு செய்யப்பட்டது'' என்கிறார் டாக்டர் ஆர்த்தி.
'' நான் முஸ்லிம்களுக்கு எதிராக பேசியதாகச் சிலர் கூறுகின்றனர். நான் அவர்களுக்கு எதிராக எதையும் பேசவில்லை. அந்த தவறான வார்த்தைகள் என்னை மிரட்ட நினைத்த பத்திரிக்கையாளரால் சேர்க்கப்பட்டது,'' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












