கொரோனா வைரஸ்: தமிழகத்தில் மேலும் 1091 பேருக்கு பாதிப்பு; சென்னையில் பாதிப்பு 16,500-ஐ தாண்டியது

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1091 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 1036 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 13 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இன்று உறுதிசெய்யப்பட்டுள்ள 1091 பேரில் 806 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். ஆகவே சென்னையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 16585 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,586ஆக உயர்ந்திருக்கிறது.

செங்கல்பட்டில் 82 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 15 பேருக்கும் தூத்துக்குடியில் 31 பேருக்கும் திருவள்ளூரில் 43 பேருக்கும் நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 55 பேருக்கு இந்நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 536 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆகவே மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,706ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்கள் குணமடைந்தவர்கள் தவிர, தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக 10,680 பேர் உள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 11,094 சோதனைகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில், மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 5,14,433ஆக உயர்ந்துள்ளது. இன்று 13 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 197ஆக உயர்ந்திருக்கிறது.

உயிரிழந்த 3 பேர் பெண்கள். பத்து பேர் ஆண்கள். 8 பேர் 70 வயதைக் கடந்தவர்கள். 3 பேர் 60 வயதுக்குட்பட்டவர்கள். 13 பேரில் 12 பேர் நீரிழிவு நோயாலும் உயர் ரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதாரத் துறை அறிக்கை தெரிவிக்கிறது.

தற்போது தமிழ்நாட்டில் நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களைத் தவிர எல்லா மாவட்டங்களிலும் கொரோனா நோயாளிகள் உள்ளனர்.

Women hairdressers working in a ladies beauty parlour

பட மூலாதாரம், Getty Images

முன்னதாக, தமிழ்நாட்டில் முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண், ஆதார் விவரங்களைச் சேகரிக்கும்படி பேரிடர் அபாய குறைப்பு முகமை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தொடர்ந்து மூடப்பட்ட அழகு நிலையங்கள், முடி திருத்தும் நிலையங்கள் தமிழ்நாடு முழுவதும் படிப்படியாகத் திறக்கப்பட்டன.

முதற்கட்டமாக ஊரகப் பகுதிகளில் மே 19ஆம் தேதி முதல் கடைகள் திறக்கப்பட்டன. அதற்குப் பிறகு மே 24ஆம் தேதி முதல், சென்னை தவிர்த்த பிற இடங்களில் கடைகள் திறக்கப்பட்டன. ஜூன் 1ஆம் தேதி முதல் சென்னையிலும் கடைகள் திறக்கப்பட்டன.

இந்தக் கடைகள் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பேரிடர் அபாய குறைப்பு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி கடைகளின் வாயிலில் கைகளைச் சுத்தம் செய்வதற்கான சானிடைசர்களை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அழகு நிலையங்களுக்கு வருபவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆதார் எண் ஆகியவற்றின் விவரங்களைப் பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

இந்த இடங்களில் கைகளைத் துடைப்பதற்கான பேப்பர் நாப்கின்கள் வைக்கப்பட வேண்டுமென்றும் அவை பயன்படுத்தப்பட்ட பிறகு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சேவையைத் துவங்கும் முன்பாக பணியாளர்கள் தங்கள் கைகளை சானிடைசர்களைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் பணியாளர்களும் உரிமையாளரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டுமென்றும் பணியாளர்கள் உடல்நலக் குறைவு இருக்கும்போது பணிக்கு வரக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்

காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றுடன் வரும் வாடிக்கையாளர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் அழகு நிலையங்களுக்குள் ஐம்பது சதவீத இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டுமென்றும், பெரும்பாலும் முன்கூட்டியே நேரத்தைப் பதிவுசெய்ய வாடிக்கையாளர்களை அறிவுறுத்த வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்குப் பயன்படுத்திய பிறகு, எல்லாக் கருவிகளும் சானிடைசர்களை வைத்து சுத்தம் செய்யப்பட வேண்டுமென்றும் இருக்கைகள் சுத்தம் செய்யப்பட வேண்டுமென்றும் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியக்கூடிய மேலங்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகம் ஆகியவை கண்காணிக்குமெனக் கூறப்பட்டுள்ளது.

தமிழநாட்டில் சலூன் கடைகள் பாதுகாப்புடன் இயங்குவது எப்படி?

Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: