நரேந்திர மோதி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மோகன் பாஜகவில் சேரவில்லை என மறுப்பு

மதுரை சலூன் கடைக்காரர்

பிரதமர் நரேந்திர மோதியின் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் இடம்பெற்ற மதுரையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன், தான் பா.ஜ.கவில் சேர்ந்ததாகச் சொல்லப்படுவதை மறுக்கிறார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் 'மனதின் குரல்' நிகழ்ச்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒளிபரப்பானது. அதில், "தன்னலமற்று தொண்டாற்றுவதில் அனைத்தும் அர்ப்பணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. இது போன்றவர்களில் ஒருவர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி. மோகன். இவர் மதுரையில் முடித்திருத்தகம் நடத்தி வருகிறார். தன்னுடைய உழைப்பில் கிடைத்த ஐந்து லட்சம் ரூபாயை தனது மகளின் படிப்புச் செலவுக்காக சேர்த்து வைத்திருந்தார். ஆனால், அவருடைய மொத்த சேமிப்பையும் இந்தக் கடினமான காலகட்டத்தில் தேவையால் வாடுபவர்கள், ஏழைகள் ஆகியோருக்கு சேவை செய்யும் வகையில் அவர் முழுக்க செலவு செய்திருக்கிறார்" என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதையடுத்து மதுரை மேலமடையில் வசிக்கும் மோகனுக்கு பாராட்டுகள் குவிந்தன. பல்வேறு தரப்பினரும் அவரைத் தொடர்பு கொண்டும் நேரிலும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த சி. மோகன், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மதுரைக்கு வந்து சலூன் கடை ஒன்றைத் துவங்கினார். இவருக்கு 9ஆம் வகுப்புப் படிக்கும் நேத்ரா என்ற 13 வயது மகள் இருக்கிறார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு இவரும் தன் சலூன் கடையை மூடிவிட்டார். "அப்போது எங்கள் பகுதியில் வசிக்கும் பல ஏழைகள் தங்கள் கஷ்டத்தைச் சொல்லி அழுதார்கள். அப்போதுதான் அவர்களுக்கு உதவலாம் என நானும் என் குடும்பத்தினரும் முடிவெடுத்தோம். சின்னச் சின்னதாக உதவிகளைச் செய்ய ஆரம்பித்தோம். பிறகு அண்ணா நகர் காவல்நிலைய அதிகாரிகளும் காய்கறிகள் போன்றவற்றைக் கொடுத்து உதவிகளைச் செய்தனர். இது இவ்வளவு பிரபலமாகுமென்று நினைக்கவில்லை" என்கிறார் மோகன்.

பிரதமரின் உரையில் இடம்பெற்ற பிறகு, பல்வேறு தரப்பினரும் வந்து பாராட்டிய நிலையில், மதுரை மாவட்ட பா.ஜ.கவினரும் மாவட்டத் தலைவர் கே.கே. சீனிவாசன் தலைமையில் அவரை நேரில் சந்தித்துப் பாராட்டினர். அப்போது மோகனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பா.ஜ.கவின் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

இது குறித்துக் கேட்டாலே அச்சமடைகிறார் மோகன். "யார் யாரோ பேசுகிறார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிரதமர் என்னைப் பாராட்டியது மகிழ்ச்சிதான். ஆனால், நான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. எல்லோரும் எனக்கு வேண்டுமென நினைக்கிறேன்" என்று பிபிசியிடம் கூறினார் மோகன்.

பா.ஜ.கவின் உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொண்டது குறித்துக் கேட்டபோது, "பாராட்ட வந்தவர்கள் அந்த அட்டையையும் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அந்தத் தருணத்தில் மறுத்தால் நன்றாக இருக்காது என்பதால் ஒன்றும் சொல்லவில்லை. எந்தக் கட்சியிலும் சேர்வது குறித்தும் நான் முடிவெடுக்கவில்லை. ரொம்பவும் குழப்பமாக இருக்கிறது" என்கிறார் மோகன்.

இது குறித்து மதுரை மாவட்ட பா.ஜ.க. தலைவர் சீனிவாசனிடம் கேட்டபோது, "அப்படியெல்லாம் இல்லை. அவர்தான் பிரதமர் மோதிக்கு நன்றி. நான் உறுப்பினராக விரும்புகிறேன் என்றெல்லாம் சொன்னார். அதனால்தான் உறுப்பினர் அட்டை கொடுத்தோம்" என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: