கொரோனா வைரஸ் தொற்றுடன் சென்னை - புதுச்சேரி பயணித்த குடும்பத்தினர் - நடந்தது என்ன?

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

புதுச்சேரியில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழலில், சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு அனுமதியின்றி பயணம் செய்த குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம், நோய்த்தொற்று தடுப்பு சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட புதுச்சேரி தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் விளக்கம் கேட்டபோது, "புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அரசு ஓட்டுநராக பணிபுரியும் நபர், கடந்த 24ஆம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள குடியிருப்பில் அவரது மகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இதற்காகச் சென்னையிலிருந்து உறவினர் ஒருவரை அனுமதியின்றி அவர் புதுச்சேரிக்குள் அழைத்து வந்துள்ளார்.”

“வளைகாப்பு நிகழ்ச்சி முடித்துவிட்டு அந்த உறவினர்கள் சென்னை திரும்பியுள்ளனர். சென்னை திரும்பிய மறுநாள் அவரது தந்தை உடல்நிலை முடியாமல் இருந்துள்ளார். மேலும், அவரை சென்னை மருத்துவமனையில் சேர்க்காமல், புதுச்சேரியில் உள்ள உறவினர் உதவியுடன் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என அவரை இங்கே அழைத்து வர முயற்சி மேற்கொண்டுள்ளனர்," எனத் தெரிவித்தார் உதவி காவல் ஆய்வாளர் இனியன்.

"இதனைத் தொடர்ந்து, சென்னையிலிருந்து 25ஆம் தேதி இரவு பாதிக்கப்பட்ட நபர் உட்பட 4 பேரும் புதுச்சேரிக்கு எந்த அனுமதியும் பெறாமல் காரில் வந்துள்ளனர். புதுச்சேரி எல்லையில் அவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது, தந்தைக்கு உடல்நலம் முடியாத காரணத்தினால் சிகிச்சைக்காகப் புதுச்சேரி வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.”

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

“இருப்பினும் நோயாளி முடியாமல் இருப்பதைக் கண்டு அவர்களை மருத்துவமனைக்குச் செல்ல அனுமதித்துள்ளனர். இதனையடுத்து, ஜிப்மர் மருத்துவமனையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாகக் கருதி, பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, அவருக்குத் தொற்று இருப்பது தெரியவந்தது. மேலும், அவருடன் வந்த மனைவி, மகள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது அனைவருக்கும் கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது."

இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இரண்டு முறை எந்தவித அனுமதியுமின்றி வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கோப்புப்படம்

ஒரு காரில் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் பயணம் செய்து கொரோனா ஊரடங்கு விதி மீறலில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, தடை உத்தரவை மீறி வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்திய ஜிப்மர் மருத்துவமனை அரசு ஓட்டுநர் மற்றும் சென்னையிலிருந்து வந்த அவரது உறவினர்கள் உட்பட 5 பேர் மீதும் பேரிடர் மேலாண்மை சட்டம், நோய்த்தொற்று தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, இவர்களில் ஒருவர் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். இதன் மூலம் இந்நோய்த் தொற்று மற்றவருக்கும் பரவியிருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் யார்? என்பது குறித்து விபரங்களைச் சேகரித்து வருவதாக கூறுகிறார் உதவி காவல் ஆய்வாளர் இனியன்.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வளைகாப்பு நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து பங்குபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னதாக, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று வரை 51ஆக உயர்ந்துள்ளது, இதில் 12 நபர்கள் குணமடைந்து வீடு‌ திரும்பினர். இதில், புதுச்சேரி மற்றும் மாஹே பகுதிகள் உட்பட 39 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் புதுச்சேரியில் 13 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட 5 நபர்கள் இந்நோய்த் தொற்று காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

கோப்புப்படம்

"புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று முன்னதாக பாதிக்கப்பட்டவர்கள் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் இருந்து அதிகமாகப் பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாக, கடந்த மே 17ஆம் தேதிக்குப் பிறகு புதுச்சேரியில் கொரோனா தொற்று பெருமளவு பரவத் தொடங்கியுள்ளது. சமூக விழிப்புணர்வு இல்லையென்றால், புதுச்சேரி மாநிலம் கொரோனா மாநிலமாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது," என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: