கொரோனாவால் ஏற்படும் சானிடரி நாப்கின் பற்றாக்குறை: பிரச்சனையில் தவிக்கும் பள்ளி மாணவிகள்

சானிட்டரி நாப்கின்ஸ்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் முடக்கத்தின் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கும் பள்ளி மாணவிகளுக்கு சானிடரி நாப்கின் கிடைக்காமல் போகிறது. வழக்கமாக இது போன்ற மாணவிகளுக்கு பள்ளியிலிருந்துதான் நாப்கின்கள் கிடைக்கும். ஆனால் முடக்க நிலை காரணமாக பள்ளிகள் மூடியிருப்பதால் பல லட்சம் மாணவிகள் நாப்கின்கள் கிடைக்காமல் கவலையில் உள்ளனர். இந்த சிக்கலை மாணவிகள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை டெல்லியிலிருந்து பிபிசியின் கீதா பாண்டே தொகுத்தளித்திருக்கிறார்.

14 வயதான பிரியா என்னும் மாணவி வடமேற்கு டெல்லியின் குடிசைப்பகுதியான பட்லியில் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் 10 சானிடரி நாப்கின்கள் கொண்ட ஒரு பேக்கை பள்ளியிலிருந்து பெற்று வந்தார் பிரியா. அவர் அரசு பள்ளியில் படித்து வருகிறார். மாதவிடாய் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தூய்மை தொடர்பாக அங்கு நடக்கும் விழிப்புணர்வு முகாமில் உயர் வகுப்புகளில் படிக்கும் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்குவர்.

இது மிகவும் முக்கியமான ஒரு விழிப்புணர்வு முகாம் ஆகும். இந்தியாவில் உள்ள 355 மில்லியன் மாதவிடாய் ஆகும் பெண்களில் 36% மட்டுமே நாப்கின்கள் பயன்படுத்துகின்றனர். மீதமுள்ளவர்கள் துணி, சாம்பல் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். மேலும் 23 மில்லியன் பெண்கள் பருவம் எய்தியவுடன் பள்ளியிலிருந்து நின்று விடுகிறார்கள்.

முடக்கம் காரணமாக பள்ளி மூடியிருப்பதால் நாப்கின்கள் விநியோகமும் நின்றுவிட்டது.

நாப்கின்கள் விநியோகம்

பட மூலாதாரம், Getty Images

"நான் கடைசியாக பிப்ரவரி மாதத்தில் நாப்கின்கள் பெற்றேன். அதன் பின் அருகில் இருக்கும் கடையில் 30 ரூபாய் தந்து 7 நாப்கின்கள் வாங்கும்படி ஆனது" என்கிறார் பிரியா.

தமது பெற்றோர் நாப்கின்கள் வாங்கி தரும் அளவிற்கு உள்ளனர் என்பதால் தன்னை அதிர்ஷ்டசாலி என நினைக்கிறார் பிரியா. அவரது பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் முடக்க நிலை காரணமாக வேலை இழந்து உணவுக்கு வழியின்றி திண்டாடுகின்றனர். இதனால் அந்த குடும்பத்தில் இருக்கும் பெண்கள் மீண்டும் துணியைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

பிரியாவின் வீட்டிலிருந்து சிறிது தொலைவில் பாலஸ்வா பால்பண்னை உள்ளது. கிட்டதட்ட 1900 குடும்பங்கள் அங்குள்ள குடிசைப் பகுதியில் வாழ்கின்றன. அங்கு வசிக்கும் செயற்பாட்டாளர் மதுபாலா ராவட் பள்ளி மாணவிகளுக்கு சானிடரி நாப்கின்கள் பற்றாக்குறை உள்ளது என கூறியிருந்தார்.

"தொற்று என்பதற்காக மாதவிடாய் வருவது நிற்காது. சானிடரி நாப்கின்கள் என்பது உணவு போல் பெண்களுக்கு முக்கியமானதாகும்.. ஆனால் அரசு ஏன் எங்கள் தேவையை கண்டும்காணாது உள்ளது" என கேள்வி எழுப்புகிறார் மது.

மதுபாலாவின் 14 வயது மகளையும் சேர்த்து அந்த குடிசைப்பகுதியில் வாழும் பல பெண்கள் பள்ளியில் கொடுக்கும் இந்த நாப்கின்களை சார்ந்தே உள்ளனர். ஏனென்றால் தங்களால் பணம் கொடுத்து வாங்க முடியாது என்கிறார் மதுபாலா.

சானிடரி நாப்கின்கள்

பட மூலாதாரம், Getty Images

இப்போது அவர்கள் மாதவிடாயை எப்படி சமாளிக்கப்போகின்றனர் என்பது அவர்களின் மிகப்பெரிய கவலையாகும். அவர்கள் நாப்கின்கள் பயன்படுத்த தொடங்கியதால் மீண்டும் துணி போன்றவை பயன்படுத்த முடியாது. அரசு மளிகை பொருட்களுடன் நியாயவிலைக் கடையில் இதையும் வழங்க வேண்டும் என்கிறார் அவர்.

மது இது குறித்து உதவி கேட்டவுடன் வுமெனைட் என்னும் மாதவிடாய் தூய்மைக்காக பணியாற்றும் தொண்டு நிறுவனம் 150 பேக்குகளை அந்த பகுதியில் ஏப்ரல் மாதத்தில் விநியோகித்தது.

வுமெனைட் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஹர்ஷித் குப்தா டெல்லி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் மே 28ஆம் தேதி வரும் சர்வதேச மாதவிடாய் தூய்மை தினத்தை முன்னிட்டு 1,00,000 சானிடரி நாப்கின்கள் விநியோகிக்க உள்ளார்.

"இன்னும் சில தினங்களில் விநியோகத்தை தொடங்க உள்ளோம்", என்று பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.

இதே போல் இந்தியா முழுவதும் சில முயற்சிகள் செய்யப்படுகின்றன. ஒரு சானிடரி நாப்கின் தயாரிப்பு நிறுவனம் 80,000 நாப்கின்களை டெல்லி மற்றும் பஞ்சாபில் விநியோகித்துள்ளது. பெங்களூர், ஹைதராபாத், ஜெய்பூர், புவனேஷ்வர், சண்டிகர் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் குடிசைப்பகுதிகள் மற்றும் வெளி மாநில குடியேறிகள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு உதவி செய்பவர்களிடமிருந்து போலீஸார் நாப்கின்களை கொண்டு சென்று சேர்க்கின்றனர்.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

டெல்லி குடிசைப்பகுதியில் வசிக்கும் பதின்ம பருவ சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு கொடுப்பதற்காக 6,00,000 சானிடரி நாப்கின்கள் போலீஸாரிடம் தரப்போவதாக கடந்த திங்கள்கிழமை பாஜகவினர் அறிவித்தனர்.

ஆனால் இந்த பிரச்சனை மாநகரில் மட்டும் இல்லை. சானிடரி நாப்கின்கள் குறைவதன் தாக்கம் நாடு முழுவது தெரிகிறது. இது குறிப்பாக கிராமப்படுதிகளிலும் நகர்ப் புறங்களிலும் தீவிரமாக உள்ளது என்கிறார் பதின் பருவ பிரச்சனைகளை கையாளும் அமைப்பான தசராவில் பணிபுரியும் ஷைலஜா மேத்தா.

"பல மாநிலங்களில் இருக்கும் எங்களோடு இணைந்து செயல்படும் நிறுவனங்களோடு பேசியபோது, 15% பெண்களுக்கு மட்டுமே முடக்கத்தின்போதும் சானிடரி நாப்கின்கள் கிடைக்கிறது என கேள்விப்பட்டோம்.

பள்ளி மூடியிருப்பதால் சமுதாய மருத்துவப் பணியாளர்கள் தங்களிடம் வரும் நாப்கின்களின் அளவு குறைவாக இருந்தாலும் அவற்றை விநியோகிக்கின்றனர்" என்கிறார் ஷைலஜா.

முதன்முதலில் நாடு முழுவதும் மார்ச் 24ஆம் தேதி முடக்கம் அறிவிக்கப்பட்டபோது இந்த பிரச்சனை தொடங்கியது. அந்த நேரத்தில் சானிடரி நாப்கின்கள் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக சேர்க்கப்படவில்லை.

சானிடரி நாப்கின்

பட மூலாதாரம், Getty Images

மருந்தகங்களில் சானிடரி நாப்கின்கள் பற்றாக்குறையாக இருப்பது பற்றி செய்திகள் வெளியானபோது மார்ச் 29 ஆம் தேதி அத்தியாவாசிய பொருட்கள் பட்டியலில் சானிடரி நாப்கின்களும் சேர்க்கப்பட்டன. இந்த காலதாமதம் 10 நாட்களுக்கான தயாரிப்பைக் குறைத்தது.

நிறுவனத்தைத் திறக்க அனுமதி வந்தும் கூட 3 முதல் 4 நாட்கள் வரை எங்களால் தயாரிப்பு பணியை தொடங்க முடியவில்லை. தொழிலாளர்களுக்கு அனுமதி, தொழிற்சாலை தொடங்க அனுமதி ஆகியவை பெற நாட்கள் ஆனது என்கிறார் இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் சுகாதார அமைப்பின் தலைவர் ராஜேஷ் ஷா.

அதன் பிறகு கூட தொழிலாளர்கள் தங்கள் கிராமத்திற்கு சென்றுவிட்டதால் தங்கள் திறனில் பாதியளவு மட்டுமே தயாரிக்க முடிந்தது என்று பிபிசியிடம் தெரிவித்தார் அவர்.

தொழிற்சாலையில் 60 சதவீத பணிகள் மட்டுமே நடக்கின்றன. எந்த தொழிற்சாலையும் முழு திறனோடு இயங்கவில்லை. இதற்கு ஆள் பற்றாக்குறை ஒரு காரணமாக உள்ளது. மேலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் விநியோகிப்பதில் பெறும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்கிறார் ஷா.

இதனால் நாப்கின் பற்றாக்குறை இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது என்கிறார் ராஜேஷ் ஷா. இந்தியாவின் மூலைமுடுக்குகளிலும் இதன் தாக்கம் தற்போது தெரியத் தொடங்கியுள்ளது.

சானிடரி நாப்கின்

பட மூலாதாரம், Getty Images

தன்னார்வ நிறுவனங்களின் கூட்டமைப்பான இந்திய மாதவிடாய் சுகாதார கூட்டணி என்னும் அமைப்பில் இருக்கும் தான்யா மஹாஜன் கூறுகையில் கிராமப்புறங்களில் நாப்கின் பற்றாக்குறை இருப்பதாக அவர்களோடு தொடர்பில் இருக்கும் அமைப்புகள் கூறுவதாக தெரிவித்தார்.

கிராமப்புறங்களில் உள்ள கடைகளிலும் மருந்தகங்களிலும் நாப்கின்கள் இல்லாமல் போனதால் மக்கள்10-20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரங்களுக்கு சென்று வாங்க வேண்டும். இப்போது பொது போக்குவரத்தும் இல்லாத காரணத்தால் மக்கள் நகரங்களுக்கு செல்ல இயலாமல் உள்ளது.

பெரும்பாலும் பெண்கள் தங்கள் வீட்டில் உள்ள ஆண்களிடம் நாப்கின்கள் வாங்கி வரச் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் இந்தியாவில் குடும்பங்களில் மாதவிடாய் பற்றி பேசுவது தவறாகவே பார்க்கப்படுகிறது.

இதனால் பள்ளியிலிருந்து நாப்கின் பெறும் பதின் பருவ பெண்கள் துணி நாப்கின்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

இந்தியாவில் ஒரு மாதத்தில் நாப்கின்கள் மூலமாக டன் கணக்கில் பிளாஸ்டிக் பயன்படுத்துகின்றனர். இந்த நாப்கின்கள் மட்கும் பொருள் இல்லை என்பதால் மறுபடி மறுபடியும் பயன்படுத்தும் மாதவிடாய் கப் மற்றும் துணி நாப்கின்கள் பயன்படுத்தும்படி கூறப்படுகிறது.

சானிடரி நாப்கின்

பட மூலாதாரம், Getty Images

துணி நாப்கின்கள் பருத்தி நூலில் நெய்யப்பட்ட துணிகளைக் கொண்டு செய்யப்பட்டிருக்க இருக்க வேண்டும். மேலும் அவற்றை நன்றாக வெந்நீரில் துவைத்து சூரிய ஒளியில் காயவைத்த பின்னரே மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்கிறார் சுகாதார தொண்டு நிறுவனமான வாட்டர் எய்டு நிறுவனத்தின் அருந்ததி முரளிதரன்.

இதனை சொல்வது எளிதாக இருக்கலாம் ஆனால் நடைமுறையில் கடினம் என்கிறார் அருந்ததி.

முடக்கம் காரணமாக ஆண்கள் வீட்டிலேயே இருப்பதால், பெண்கள் கழிவறையை அடிக்கடி பயன்படுத்த யோசிப்பார்கள். கிராமத்தில் நாப்கின்களைத் துவைக்க அதிக நீரை பயன்படுத்துவது மற்றும் சூரிய ஒளியில் காய வைப்பது போன்றவை கடினமாக இருக்கும்.

இந்த கோவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட பிரச்சனைகளில் பெண்களின் பிரச்சனைகள், குறிப்பாக, பதின் பருவப் பெண்களின் பிரச்சனைகள் பெரிதாகப் பார்க்கப்படவில்லை என தங்களோடு இணைந்து வேலை செய்யும் அமைப்புகள் கூறுவதாக சொல்கிறார் அருந்ததி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: