சானிடரி நாப்கின், டயாப்பர் பொருட்களின் விலை குறைகிறதா?
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளிவந்த முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தினமலர்: சானிடரி நாப்கின், டயாப்பர் பொருட்களின் விலை குறைகிறதா?

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE
அதிகமானோர் பயன்படுத்தும்,'சானிடரி நாப்கின் பேட்' மற்றும் முதியோருக்கான, 'டயாபர்' போன்ற பொது சுகாதார பராமரிப்பு பொருட்களுக்கான விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலின் கீழ், 384 அத்தியாவசிய மருந்து பொருட்கள், உபகரணங்கள் ஆகியவற்றுக்கு, மத்திய அரசே, அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயிக்கிறது. மத்திய அரசின், தேசிய மருந்து பொருட்கள் விலை நிர்ணய ஆணையம், இதை கவனிக்கிறது.இந்த நிலையில், பெண்கள் பயன்படுத்தும், சானிடரி நாப்கின், பெரியவர்களுக்கு பயன்படுத்தப்படும் டயாபர், ஹேண்ட் வாஷ் போன்ற பொது சுகாதார பராமரிப்பு பொருட்களையும், இந்தப் பட்டியலின் கீழ் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், இதய நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும், 'ஸ்டென்ட்' கருவி உள்பட, 384 மருந்து பொருட்கள் மற்றும் கருவிகள், விலை கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. இதைத் தவிர, மற்ற மருந்துகளில், 12 மாதங்களின் விற்பனையைப் பொருத்து, ஆண்டுக்கு, 10 சதவீதம் வரை விலையை உயர்த்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. புற்று நோய்க்கான, 42 வகையான மருந்துகளுக்கு, 'டிரேட் மார்ஜின்' என்ற அடிப்படையில், விலையை உயர்த்த, மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. தற்போது, சானிடரி நாப்கின் உள்ளிட்ட பொது சுகாதார பராமரிப்பு பொருட்களையும், அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் கொண்டு வருவது குறித்து ஆராயப்படுகிறது என்றார் என இந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.
தினமலர்: சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்

பட மூலாதாரம், Barcroft Media
ஈரோடு பகுதியில் சூரியனைச் சுற்றி ஏற்பட்ட ஒளி வட்டத்தை பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்ததாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. கோடை காலத்தைப்போல வெயில் வாட்டியது. இந்த நிலையில் காலை 11 மணி அளவில் திடீரென சூரியனைச் சுற்றிலும் ஒளி வட்டம் தோன்றியது. இதனால் சூரியன் பிரகாசமாக ஒளிர்ந்தது.
வட்டத்தின் விளிம்பில், வானவில் தோன்றும்போது ஏற்படும் நிறங்கள் சூழ்ந்திருந்தன. திடீரென வானில் இந்த மாற்றத்தைக் கண்ட ஈரோடு, கிருஷ்ணம்பாளையம் பகுதியில் உள்ள பொதுமக்கள் பலர் தெருக்களில் திரண்டு இந்த அதிசய நிகழ்வைக் கண்டு ரசித்தனர்.
ஏராளமானோர் தங்கள் வீட்டு மாடிக்கு சென்று வானில் தோன்றிய இந்த ஆபூர்வ நிகழ்வை கண்டு ரசித்ததோடு தங்கள் செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஒளிவட்டம் நீடித்தது.
வானில் மழை மேகங்கள் சூழ்ந்து இருக்கும்போது, சூரிய ஒளி 22 டிகிரியில் விழுந்தால் ஒளிச்சிதறல் ஏற்படும். அப்போது சூரியனைச் சுற்றிலும் இதுபோன்ற வளையம் ஏற்படும். இதேபோல நிலவிலும் வளையம் தோன்றும். இது ஒளிச்சிதறலின் பரிணாமம் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் தலைவர் பேராசிரியர் ந.மணி கூறியதாக மேலும் அச்செய்தி கூறுகிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு


டைம்ஸ் ஆஃப் இந்தியா - 2 மாதங்களில் 30 லட்சம் பேரை இளைஞரணியில் சேர்க்க உதயநிதி ஸ்டாலின் திட்டம்

பட மூலாதாரம், FACEBOOK
அண்மையில் திமுகவின் இளைஞரணி செயலாளராக பொறுப்பு ஏற்ற உதயநிதி ஸ்டாலின் தலைமையில் முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை சென்னையில் கூடிய திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம் குறித்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நீலகிரி மற்றும் கேரளாவில் பெய்த கன மழை காரணமாக தங்கள் உடமைகள், உயிர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
செப்டம்பர் 14 முதல் நவம்பர் 14ஆம் தேதிக்குள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 10,000 பேருக்கு குறையாமல் மொத்தம் 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழக அரசு வேலைகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் மற்றும் தேசிய கல்விக் கொள்கை வரையறையை திரும்பப் பெற வேண்டும் போன்ற தீர்மானங்களும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












