முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் தகனம்

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் தகனம்

பட மூலாதாரம், Getty Images

நேற்று (சனிக்கிழமை) டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமான முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல் இன்று டெல்லி நிகாம்போத் கட் பகுதியில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அருண் ஜெட்லியின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

முன்னதாக, இன்று காலை அருண் ஜெட்லியின் உடல் டெல்லியின் கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து பாஜக தலைமையகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

பாஜக தலைமையகத்திலிருந்து நிகாம்போத் கட் பகுதிக்கு எட்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும். அருண் ஜெட்லியின் இறுதி ஊர்வலம் பாஜக அலுவலகத்திலிருந்து சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

பிரதமர் நரேந்திர மோதி தற்போது வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இருப்பினும் அவர், "என் மதிப்பிற்குரிய நண்பரை இழந்துவிட்டேன். அவரை பல ஆண்டுகளாக தெரியும். எனக்கும் அவருக்கும் உடைக்க முடியாத உறவு இருந்தது. அவசர நிலை காலத்தில் நம் ஜனநாயகத்தை காக்க போராடிய மாணவர் தலைவராக இருந்தார். பின்னர் கட்சியின் முகமாகினார்" என்று தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான செய்தியை பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த அருண் ஜெட்லி நேற்று (சனிக்கிழமை) மதியம் 12.07 மணியளவில் மரணமடைந்தார்.

1999 முதல் 2004 வரை அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் சட்டம் மற்றும் நீதி, தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, 2014 தேர்தலில் நரேந்திர மோதி பிரதமரானபின், அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சராகவும் இருந்தார். அதே ஆட்சிக் காலத்தின் முதல் சில மாதங்கள் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்தார்.

அருண் ஜெட்லி

பட மூலாதாரம், Getty Images

2018இல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஜெட்லி, உடல்நிலை காரணமாக புதிய அரசில் பொறுப்பு எதையும் தமக்கு வழங்க வேண்டாம் என்று 2019 மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

2019 மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்நலமின்மை காரணமாக, 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நிதியமைச்சர் பொறுப்பை அருண் ஜெட்லி கவனிக்காததால், அந்த அமைச்சரவையை கூடுதலாக ரயில்வே அமைச்சராக இருந்த பியூஷ் கோயல் கவனித்து வந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: