பாலத்திலிருந்து கயிற்றில் இறக்கப்பட்ட தலித் சடலம்: வைரலான காணொளியின் உண்மை பின்னணி #BBCGroundReport

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
வேலூர் மாவட்டம் நாராயணபுரத்தில் தலித் ஒருவரின் சடலத்தை எரிக்கச் செல்வதற்கு வழி மறுக்கப்பட்டதாக கூறி, கயிறுகள் மூலம் பாலத்திலிருந்து ஆற்றுக்குள் சடலத்தை இறக்கி தகனம் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிய பிபிசி தமிழின் செய்திக் குழு நாராயணபுரத்துக்கு பயணம் மேற்கொண்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியிலிருந்து சுமார் இருபது கிலோ மீட்டர் தூரத்தில், ஆந்திர மாநில எல்லையில் உள்ளடங்கி அமைந்திருக்கிறது நாராயணபுரம். இந்த ஊரில் சுமார் 40 ஆதிதிராவிடக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் இருநூறு பேர் வசிக்கின்றனர். இந்த ஊரைச் சேர்ந்த குப்பன் என்பவரது சடலத்திற்கு இறுதிச் சடங்குகளைச் செய்வதிலேயே இந்த பிரச்சனை ஏற்பட்டது.
இறந்துபோன குப்பன் யார்?
நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதாகும் குப்பன் தனக்குத் திருமணம் ஆன சில வருடங்களுக்குள்ளாகவே அந்த ஊரைவிட்டு வெளியேறி மனைவியின் ஊரான புத்துக்கோவில் என்ற பகுதியில் தங்கி வேலைபார்த்து வந்தார். 55 வயதாகும் கூலித் தொழிலாளியான அவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.
புத்துக்கோவிலில் தங்கி வேலை பார்த்துவந்த குப்பன் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று வேலை முடிந்து, சாலையில் நடந்துவரும்போது பெதகல்லுபள்ளி என்ற இடத்தில் இரவு பத்தரை மணியளவில் வாகனம் மோதி உயிரிழந்தார்.

பட மூலாதாரம், youtube
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக அவரது உடலை சொந்த ஊரான நாராயணபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு உறவினர்கள் கொண்டுவந்தனர்.
பிரச்சனை எப்படி ஏற்பட்டது?
நாராயணபுரத்தில் வசிக்கும் ஆதி திராவிடர்களுக்கென அவர்கள் ஊரின் நுழைவாயிலிலேயே ஒரு சிறிய இடுகாடு இருக்கிறது. குப்பன் சாலை விபத்தில் இறந்ததாலும் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதாலும் அவரது உடலைப் புதைக்காமல் தகனம் செய்ய உறவினர்கள் முடிவுசெய்தனர்.
ஆனால், அங்கிருந்த இடுகாட்டில் சடலத்தை தகனம் செய்யும் வசதிகள் இருக்கவில்லை. ஆகவே, தங்கள் ஊரிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள மண்ணாற்றில் உடலைத் தகனம் செய்ய முடிவுசெய்தனர்.
மண்ணாற்றில் அவர்கள் தகனம் செய்ய முடிவெடுத்த இடத்தின் இரு புறமும் பட்டா நிலங்கள் இருந்த நிலையில், ஆற்றின் குறுக்கே அமைந்திருந்த பாலத்திலிருந்து தகனம் செய்வதற்கான மரம் உள்ளிட்ட பொருட்களை குப்பனின் உறவினர்கள் ஆற்றில் போட்டனர்.
அப்போது, ஆற்றின் ஒருபக்கம் அமைந்திருந்த நிலத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த பெண்மணி, எதற்காக அந்தக் கட்டைகளை ஆற்றுக்குள் வீசுகிறீர்கள் என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

"அதை மட்டும்தான் நான் கேட்டேன். பிறகு எனது கணவரிடம் தெரிவித்தேன். அவரும் வந்து எதற்காக கட்டைகளை இறக்குகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள், தாங்கள் சடலத்தை ஆற்றில் எரிக்கப்போவதாகச் சொன்னார்கள். என் கணவர் அந்த நிலத்திற்கு அருகில் இதைச் செய்யாதீர்கள் என்று கூறினார். பிறகு நிலத்தின் உரிமையாளருக்கு போன் செய்து சொன்னார். அவர் என்ன சொன்னார் எனத் தெரியவில்லை," என்கிறார் காவல் பணியில் இருந்த கீதா.
கீதாவின் கணவர் நாராயணன் இது குறித்துப் பேச மறுத்துவிட்டார்.
"அவர்கள் கட்டைகளைப் போடவே எதிர்ப்புத் தெரிவித்ததால், நாங்கள் அப்பாவின் சடலத்தை தொட்டில்போலக் கட்டி ஆற்றில் இறக்க முடிவுசெய்தோம். பிறகு மண்ணாற்றில் உடலைத் தகனம் செய்தோம்" என்கிறார் குப்பனின் மகனான கண்ணதாசன் (27).
இப்படி தொட்டில் போலக் கட்டி ஆற்றில் இறக்கும் காட்சியை, குப்பனின் உறவினர்கள் சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக எடுத்து பலருக்கும் அனுப்பவே, இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது.
இந்த சம்பவம் முடிந்து சர்ச்சையான பிறகு, நிலத்தின் உரிமையாளர் என ஒருவர் தன் உறவினரைத் தொடர்புகொண்டு, 'ஏன் தன்னிடம் கேட்டிருந்தால் தான் அனுமதித்திருப்பேனே? ஏன் இப்படி என்னை பிரச்சனைக்குள்ளாக்குகிறீர்கள்?' என்று கேட்டதாகச் சொல்கிறார்கள்; ஆனால் எனக்கு அதைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை என்கிறார் கண்ணதாசன்.
ஆனால், தகனம் செய்வதற்காக உறவினர்கள் அந்த பட்டா நிலத்தின் வழியாகச் சென்றார்கள் என்பதை இரு தரப்புமே ஒப்புக்கொள்கிறார்கள்.
நில உரிமையாளர் தரப்பு என்ன சொல்கிறது?
நாராயணபுரம் பகுதியில் பாயும் மண்ணாறு என்ற சிறிய ஆற்றில்தான் குப்பனின் உடல் தகனம் செய்யப்பட்டது. தகனம் செய்யப்பட்ட இடத்தின் ஒருபுறம் சுந்தரம் என்பவரது கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மற்றொரு கரையில் கோவிலும் அதற்கான வாகன நிறுத்தம் பகுதியும் இருக்கின்றன.

வாகன நிறுத்தம் உள்ள பகுதியின் வழியாக ஆற்றை அடைந்திருக்கலாமே என்று கேட்டபோது, "அந்தப் பகுதியில் கரை உயரமாக இருப்பதால், அதன் வழியாக இறங்க முடியாது என்று விட்டுவிட்டோம்" என்கிறார் ஆதி திராவிடர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன்.
காவல் பணியில் இருந்த நாராயணன் பேச மறுத்துவிட்ட நிலையில், நில உரிமையாளர் சுந்தரத்தின் மருமகனான தேவகுமாரன் இந்த சம்பவம் குறித்துப் பேசினார்.
"நடந்த சம்பவத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த விரும்பவில்லை. காவல் பணியில் இருந்தவர் அனுமதி மறுத்ததாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் எங்களைத் தொடர்புகொண்டிருக்கலாம். நாங்கள் உடனடியாக அனுமதி கொடுத்திருப்போம்" என்கிறார் தேவகுமாரன்.
இந்த நாராயணபுரம் கிராமத்தில் வன்னியர், கவுண்டர், ஆதி திராவிடர் என பல சமூகத்தினரும் வசிக்கின்றனர். சர்ச்சைக்குரிய நிலம் கவுண்டர் வகுப்பினருக்குச் சொந்தமானது.
இதற்கு முன்பாக இதுபோல ஆதி திராவிடர்கள் சடலத்தைத் தகனம் செய்யும் நிகழ்வு பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. அப்போது எந்த இடத்தில் சடலம் எரிக்கப்பட்டது, பிரச்சனை ஏதும் ஏற்பட்டதா எனக் கேள்வியெழுப்பினால், அது குறித்து தெளிவான பதில்கள் யாரிடமும் இல்லை.
அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
இது தொடர்பான வீடியோ புதன்கிழமையன்று சமூக வலைதளங்களில் பரவலாக வெளியானதும், வியாழக்கிழமையன்று வாணியம்பாடி வட்டாட்சியர் அந்தப் பகுதியில் இது தொடர்பாக ஆய்வு நடத்தினார்.

இதற்குப் பிறகு, நாராயணபுரம் ஊராட்சி பணதோப்பு பகுதியில் அரசுக்குச் சொந்தமாக உள்ள 3.16 ஏக்கர் நிலத்தில், 50 சென்ட் நிலம் ஆதி திராவிடர்களின் இடுகாட்டிற்காக ஒதுக்கப்பட்டது. விரைவில், தகன மேடைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், ஊடகங்களில் வெளியான இது தொடர்பான செய்திகளை மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
இதையடுத்து இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்காக ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு விளக்கம்கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. வழக்கு ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட துணை ஆட்சியர் பிரியங்காவைத் தொடர்புகொண்டு முன்னதாகக் கேட்டபோது, "சடலம் இறக்கப்பட்ட சனிக்கிழமையன்று எல்லோருமே அலுவலகத்தில்தான் இருந்தோம். இது தொடர்பாக யாருமே எங்களைத் தொடர்புகொள்ளவில்லை. ஏன், காவல் துறையைக்கூட தொடர்புகொள்ளவில்லை. விசாரித்தால், பட்டா நிலத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்கிறார்கள். ஆதி திராவிடர் தரப்பில், யார் மறுப்புத் தெரிவித்தது என்பது குறித்து தெளிவாகச் சொல்ல மறுக்கிறார்கள். இதனால் சட்ட நடவடிக்கை ஏதும் எடுக்க முடியவில்லை. தற்போது இடுகாட்டிற்கென நிலம் ஒதுக்கப்பட்டுவிட்டது" என பிபிசியிடம் கூறினார்.

சடலத்தை எரியூட்டும் சடங்கில் பங்கேற்க வந்தவர்கள், சடலம் எடுத்துச் செல்ல மறுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் நிலத்தின் வழியாகத்தான் வந்திருக்கிறார்கள். தவிர, வழக்கமாக இம்மாதிரி சடலம் செல்லும்போது பிரச்சனை ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொள்வார்கள். இந்த முறை ஏன் அப்படிச் செய்யவில்லை என்பது தெரியவில்லை என்கிறார் துணை ஆட்சியர்.
பிரச்சனை ஏற்பட்ட பிறகு, காவல்துறையையோ, மாவட்ட நிர்வாகத்தையோ அல்லது நிலத்தின் உரிமையாளரையோ ஏன் தொடர்புகொள்ளவில்லையெனக் கேட்டபோது, தாங்கள் இறுதிச் சடங்குகள் தொடர்பான வேலையில் இருந்ததால், பாலம் வழியாகவே இறக்கிவிட முடிவுசெய்ததாகக் கூறுகிறார்கள் குப்பனின் உறவினர்கள்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில் அரசு ஒதுக்கித் தந்த மயானத்திற்குச் செல்ல வேண்டுமானால், வன்னியர்கள் வசிக்கும் பகுதியின் வழியாகச் செல்ல வேண்டும். அப்போது பிரச்சனை ஏற்படலாம்; ஆகவே வேறு இடத்தில் ஒதுக்கித்தந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் ஆதி திராவிட சமூகத்தினர்.
"ஒரு பிரச்சனையைத் தீர்க்கத்தான் புதிதாக மயான பூமிக்கு நிலத்தை ஒதுக்கித் தந்திருக்கிறோம். வன்னியர்கள் சாலையில் இருபுறமும்தான் வசிக்கிறார்கள். அந்தச் சாலைப் பெரிய சாலை. அதன் வழியாக இப்போதும் எல்லோரும் சென்றுவருகிறார்கள். எந்தப் பிரச்சனையும் சடலத்தை எடுத்துச் செல்வதில் வராது. அவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் மயான நிலம் வேண்டும் என்கிறார்கள். ஆனால், அவர்கள் பகுதிக்கு அருகில் அரசுக்குச் சொந்தமான நிலம் ஏதும் காலியாக இல்லை" என்கிறார் பிரியங்கா.
மேலும், பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தையும் காவல்துறையையும் தொடர்புகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












