கோவிட் 19: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வது குறைந்துவிட்டதா? - அமைச்சர் விஜயபாஸ்கார் பதில்

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் புதிதாக 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக நிலை
சென்னையில் கொரோனா தாக்கத்திற்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 7,117ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று நோய் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட 536 நபர்களில், 364 நபர்கள் சென்னையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்ட நபர்களில் 46 நபர்கள் மகாராஷ்டிராவிலிருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கடலூர், திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் புதிதாக தொற்று ஏற்பட்டவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தமிழகம் திரும்பியவர்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை குறைந்துவிட்டதா?
கொரோனா தொற்று பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா சோதனைகளை குறைந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சிலர் ஊடகங்களில் பேசிவருவதாக தெரிவித்த அமைச்சர் அந்த விமர்சனத்தை மறுத்துள்ளார். ''மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, ஒவ்வொரு தினமும் எத்தனை நபர்கள் தமிழகம் வருகிறார்கள், தொற்று உள்ளவர்களோடு தொடர்பில் உள்ளவர்கள் யார் என கண்டறிந்து சோதனைகள் செய்கிறோம். அதனால் சோதனை செய்வதில் எந்த விதத்திலும் குறைவில்லை.

பட மூலாதாரம், Twitter
சென்னையில் மட்டும் 85,000 சோதனைகளை செய்துள்ளோம்.சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தாலே கொரோனா சோதனை செய்யப்படுகிறது,'' என்றார்.
தமிழகத்தில் மொத்தம் 61 சோதனை மையங்கள் உள்ளன என்றும் அதில் 39 அரசு மையங்களாக உள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் அதிக அளவிலான கொரோனா சோதனைகளை செய்யும் மாநிலமாக தமிழகம் இருப்பதாக தெரிவித்த அமைச்சர், சோதனை செய்வதில் ஈடுபடும் சோதனை மைய அலுவலர்கள், மருத்துவர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவேண்டும் என்றார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 234 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4406ஆக உயர்ந்துள்ளது என்றார்.
தற்போதுவரை தமிழகம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 7270 நபர்கள் சிகிச்சை எடுத்துவருவதாக தெரிவித்தார். இன்று ஒரே நாளில் மூன்று நபர்கள் இறந்துள்ளார் என்றும் அதனால் மாநிலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 81ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் விகிதம் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது என்று குறிப்பிட்டு, மத்திய அரசின் குழு பாராட்டியதாக அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.68சதவீதமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












