இந்தியாவுக்கு சொந்தமான இடத்தில் பாகிஸ்தான் தேர்தல் நடத்துவதா? - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

"இந்தியாவின் சட்டபூர்வமான மற்றும் மாற்றமுடியாத ஒருங்கிணைந்த பகுதியில்" பொதுத் தேர்தல் நடத்துவதற்கும், இடைக்கால அரசை அமைப்பதற்கும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மேலும், பாகிஸ்தான் சட்டவிரோதமாக கைப்பற்றி வைத்துள்ள இந்தியாவின் பகுதிகளை உடனடியாக காலி செய்யுமாறு இந்திய அரசு பாகிஸ்தானிடம் வலியுறுத்தியுள்ளது.

கில்கிட் மற்றும் பால்டிஸ்தான் என்றழைக்கப்படும் பிராந்தியம் ஆகிய இடங்களில் பொதுத் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கில், கடந்த வாரம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் மூலம், அந்த பிராந்தியத்தில் வரும் செப்டம்பர் மாதம் பொதுத் தேர்தலை நடத்துவதற்கும், அதுவரை இடைக்கால அரசு ஒன்றை அமைப்பதற்கும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் அரசின் மூத்த அதிகாரி ஒருவரிடம் இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

"ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களை போன்று, கில்கிட் மற்றும் பால்டிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளும், இந்தியாவின் முழுமையான சட்டபூர்வமான மற்றும் மாற்றமுடியாத ஒருங்கிணைந்த பகுதியாகும் என்பது தெளிவாகத் தெரிவிக்கப்பட்டது" என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"சட்டவிரோதமாகவும், வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிராந்தியங்கள் தொடர்பில் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கோ அல்லது அதன் நீதித்துறைக்கோ உத்தரவுகளைப் பிறப்பிக்கும் உரிமை இல்லை. இதுபோன்ற நடவடிக்கைகளை இந்தியா முற்றிலுமாக நிராகரிக்கிறது. பாகிஸ்தான் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் உடனடியாக வெளியேற வேண்டும்."

இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம், கடந்த ஏழு தசாப்தங்களாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் சில பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததையோ அல்லது கடுமையான மனித உரிமை மீறல்கள், சுரண்டல் மற்றும் சுதந்திரத்தை மறுப்பது போன்ற செயல்களையோ மேற்கொண்டதையோ பாகிஸ்தான் மறைக்க முடியாது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: