கொரோனா வைரஸ்: கோவிட் 19 தொற்று முடிவுக்கு வந்த பின் இந்தியா எந்த திசையில் பயணிக்கும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜுபைர் அகமது
- பதவி, பிபிசி செய்தியாளர்
நாட்டில் மாற்றம் வரப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் பிரதமர் நரேந்திர மோதி பேச்சில் தென்படுகின்றன. அண்மையில் நாட்டின் பஞ்சாயத்து அமைப்புகளின் தலைவர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங்கில் உரையாற்றிய அவர். கொரோனா நெருக்கடி ஒரு புதிய செய்தியை மட்டுமல்ல, புதிய திசையையும் காட்டியுள்ளது என்று அப்போது அவர் கூறியிருந்தார்.
"ஒரு வழியைப் பின்பற்றும்படி நமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறும் அவர், "அந்த பாதை என்ன, அந்த திசை என்ன?" என்ற கேள்விகளை நாடகப்பாணியில் கேட்கிறார். பிறகு, "நாம் தன்னிறைவு பெற வேண்டும் என்பதை இந்த கொரோனா நெருக்கடியால் கண்டறிந்துள்ளோம்" என்று உடனடியாக தானே அதற்கான பதிலையும் அளிக்கிறார்.
தற்சார்பு என்பது சிறியதாக இருந்தாலும், மிகவும் பொருள் பொதிந்த சொல். "இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக இந்தக் கருத்தியல் உண்டு. ஆனால் இன்று மாறிவரும் சூழ்நிலைகள், மீண்டும் தற்சார்பு கொள்ளவேண்டும், தன்னம்பிக்கையுடன் செயலாற்றவேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன" என்று அவர் கூறினார்.
தன்னம்பிக்கை தொடர்பான அவரது வலியுறுத்தல் அவரது நோக்கங்களை உணர்த்துகிறது. சில நாட்களுக்கு முன்பு, ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பாகவத், கொரோனா நெருக்கடிக்குப் பின்னர் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார்.
இது குறித்த தனது கருத்தை தெரிவித்த அவர், "ஆட்சி, நிர்வாகம் மற்றும் சமூகம்" ஆகிய மூன்றின் உதவியோடு இந்தியா உள்நாட்டு சந்தையை ஊக்கப்படுத்தி, தன்னிறைவு அடைய வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
சுதேசி அதாவது உள்நாட்டு உற்பத்தியை சார்ந்திருப்பது என்ற யோசனையை ஊக்குவித்த, மோகன் பாகவத், "வெளிநாட்டிலிருந்து வரும் பொருட்களை நாம் சார்ந்து இருக்கக்கூடாது, பொருட்களை இறக்குமதி செய்தால் அது நமது நிபந்தனையின் அடிப்படையில் இருக்க வேண்டும். நமக்கு தேவையான பொருட்களை நாமே தயாரித்து பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
"உள்நாட்டு தயாரிப்பு என்ற யோசனையை, தனிநபர் முதல் குடும்பங்கள் வரை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப நாட்களில், வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் விடுத்திருந்த ஒரு அழைப்பை குறிப்பிட்டு சொல்லலாம். உள்நாட்டுத் தொழில்துறையை பெருமளவில் சார்ந்திருக்கவேண்டும் மற்றும் நாட்டை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான இலக்கை அடைய தேசியவாத உணர்வை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார். "தேசியவாதம் மற்றும் தன்னிறைவு அடையும் மனப்பான்மையுடன் தொழில் துறை செயல்பட வேண்டும்" என்றும் கோயல் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஆர்.எஸ்.எஸ்ஸின் சிந்தனையும் அரசாங்கம் மற்றும் பாஜக எண்ணமும் ஒன்றே
தற்சார்பு மற்றும் சுதேசி எனப்படும் உள்நாட்டை மையப்படுத்தும் யோசனை குறித்து அரசு, ஆளும் கட்சியான பாஜக மற்றும் அவர்களின் கருத்தியல் வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ்ஸின் சிந்தனைப்போக்கும் ஒன்றாகவே இருக்கிறது. இந்த பழமைவாத வலதுசாரி சித்தாந்தம் ஒரு முக்கியமான குறிக்கோளைக் கொண்டுள்ளது. கொரோனா நெருக்கடி அவர்களுக்கு இந்த நோக்கத்தை அடைய ஒரு வாய்ப்பை வழங்கியிருப்பதாகத் தோன்றுகிறது.
தற்போதைய கொரோனா உலகத் தொற்று காலத்திற்கு பிந்தைய உலகில், அனைத்து பெரிய நாடுகளும் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதோடு, உலகமயமாக்கலுக்கு பதிலாக உள்நாட்டை மையப்படுத்தும் என்று பல பொருளாதார வல்லுநர்கள் நம்புகிறார்கள். இதைத் தவிர, பெரிய நாடுகள் வெளிநாட்டு நிறுவனங்களைவிட, தங்கள் நாட்டு நிறுவனங்களுக்கே பாதுகாப்பு அளிப்பதில் முனையும்.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா காலத்திற்குப் பிறகு "அனைத்து நாடுகளிலும் பொருளாதார தேசியவாதம் வரும்" என்று ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புடைய 'சுதேசி ஜாக்ரன் மஞ்ச்' அமைப்பின் அருண் ஓஜா கூறுகிறார். பொருளாதாரத்தின் திசை மறுபரிசீலனை செய்யப்படுவது மகிழ்ச்சியளிப்பதாக கூறும் அவர், "தன்னிறைவு மற்றும் சுதேசி மாதிரியை நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்" என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
சுதேசி இந்தியா தொடர்பான ஒரு பார்வை
70 மற்றும் 80 களில் இருந்த இந்திய பொருளாதாரமும், தற்போதைய நவீன பொருளாதாரமும் எவ்வளவு வித்தியாசமானது என்பதை இன்றைய இந்தியாவின் இளைஞர்கள் உணர்ந்திருக்க மாட்டார்கள். இந்த மாற்றத்தில் நேருவின் சோஷியலிச கொள்கைகளும், வங்கிகளை தேசியமயமாக்கும் இந்திரா காந்தியின் முடிவும் பெரும் பங்கு வகிக்கின்றன. அன்றைய காலகட்டத்தில் 'சுதேசி' என்பது நாட்டின் பொருளாதாரத்தின் மந்திரமாக இருந்தது, தேவையை பூர்த்தி செய்வதற்கு உள்நாட்டு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. தன்னிறைவு அடைந்தாலும், தரம் குறைவாகவும், விலைகள் அதிகமாகவும் இருந்தன. எனவே தான், வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்கள் மீது மதிப்பும், விருப்பமும் அதிகமாக இருந்தது.
அரசாங்கத்தின் குறுக்கீடும் கட்டுப்பாடும் எல்லா நிலைகளிலும் அனைத்து இடங்களிலும் வியாபித்திருந்தது. அந்த சகாப்தத்தை 'லைசன்ஸ் ராஜ்' மற்றும் 'கோட்டா பர்மிட் ராஜ்' என்று குறிப்பிடுவார்கள்.
சாதாரண குடிமக்களுக்கு லண்டன் வெகு தொலைவில் இருந்தது. வெளிநாட்டு பயணங்கள் என்பது செல்வந்தர்கள், செல்வாக்கு மிக்கவர்கள், அரசு அதிகாரிகளுக்கானதாகவே இருந்தன. வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் வெறும் 500 டாலர்களை மட்டுமே கொண்டுச் செல்ல முடியும். அம்பாசிடர் மற்றும் ஃபியட் கார்கள் உள்நாட்டு சந்தையில் தயாரிக்கப்பட்டன. 1991 ஆம் ஆண்டு இந்தியாவின் திருப்புமுனை ஆண்டாக இருந்த்து. அப்போதுதான், இந்தியா தனது சந்தையை வெளிநாடுகளுக்குத் திறந்துவிட்டது.
இது நவீன இந்தியாவின் மிக முக்கிய முடிவுகளில் ஒன்றாகும். கிழக்கிந்திய கம்பெனியைப் போல, வேறெந்த வெளிநாட்டு நிறுவனமும் மீண்டும் நாட்டை அடிமைப்படுத்திவிடுமோ என்ற பயம் மக்களின் மனதில் இருந்தது. மக்களின் மனநிலையை மாற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது.
மனநிலை மாறியது, வெளிநாட்டு தொழில்நுட்பமும், அந்நிய முதலீடும் இந்தியாவிற்குள் வந்தன. பிறகென்ன? நவீனமயமாக்கல் நடந்தது, பழைய வேலைகள் போய்விட்டன, புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. மாருதி-சுசுகி கார்கள் இந்தியாவில் உருவாகத் தொடங்கின, வெளிநாட்டு வாகனங்கள் இந்திய நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் ஓடத் தொடங்கின. புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. வெளிநாட்டுப் பொருட்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் வரத் தொடங்கி. அவற்றின் தரம் உள்நாட்டு பொருட்களை விட மேம்பட்டு இருந்ததோடு, விலைகளும் குறைவாக இருந்தன. இதன் பின்விளைவாக, உள்ளூர் நிறுவனங்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இல்லாவிட்டால் அவை தொழிலை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
1978 இல் சீனா தொடங்கிய பணிகளை, 1991 ஆம் ஆண்டில் இந்தியா தொடங்கிய முயற்சிகளுடன் ஒப்பிடலாம். சீனர்கள் தங்கள் நாட்டை 'உலகளாவிய உற்பத்தி மையமாக' மாற்றினார்கள். உலகம் முழுவதிலுமிருந்து வந்த மிகப்பெரிய நிறுவனங்கள் சீனாவில் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்தன. வறுமையில் வாடிக் கொண்டிருந்த கோடிக்கணக்கான மக்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இதன் விளைவாக சீனப் பொருளாதாரம் துரித கதியில் வளர்ந்தது. இன்று சீனா அமெரிக்காவிற்குப் பிறகு உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளதே, சீன பொருளாதார வளர்ச்சியின் வேகத்திற்கு மிகப்பெரிய சான்றாகும்.
அதே நேரத்தில், இந்தியாவில் உலகமயமாக்கல் என்பதன் குறிக்கோள் முழுமையடையாமல் அரைகுறையாக இருந்துவிட்டது. இங்கேயும் தொழிற்சாலைகள் கட்டப்பட்டன, இங்கும் மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேலே உயர்ந்தனர், ஆனால் சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வெற்றித் தராசு தாழ்ந்திருப்பதாகத் தெரிகிறது. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியானது ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளியை விரிவுபடுத்துவதாக இருந்தது. பெரும் நகரங்களில் குடிசைவாசிகளின் எண்ணிக்கை மட்டும் வேகமாக அதிகரிக்கவில்லை, அவர்களின் வறுமையும் அதிகரித்தது. ஆரம்ப சுகாதாரத்தை பேணுவதில் அரசாங்கங்கள் தோல்வியடைந்தன, தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா முன்னேறி, அந்தத் துறையின் கோட்டையாக மாறினாலும், திறமையான ஏராளமானவர்கள் அமெரிக்கா, ஐரோப்பா என வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றனர்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

உள்நாட்டை சார்ந்திருங்கள்.... ஆனால் முன்பு போல அல்ல
சுதேசி மாதிரியை மீண்டும் நாம் பின்பற்றினால், பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 70 மற்றும் 80 களில் இருந்தது போன்று இரண்டு அல்லது இரண்டரை சதவீதம் என்ற நிலைக்கு மீண்டும் நம்மை அழைத்துச் செல்லுமா? இந்த கேள்விக்கு பதிலளிக்கிறார் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜான் ஹான்கே. உள்நாட்டு உற்பத்தி சந்தையை மையமாக கொண்டால், அது இந்தியாவை ஐந்தாண்டு திட்ட பொருளாதாரத்தை நோக்கி தள்ளும், நாட்டின் வளர்ச்சி விகிதத்தை பாதியாக குறைக்கும் என்று அவர் கூறுகிறார்.
பல ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றிய பிறகு தாயகம் திரும்பிய மும்பையைச் சேர்ந்த ரஞ்சிதா பராட்கர் நவீன இந்தியாவில் பிறந்தவர். அவரது கருத்துப்படி, "அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 'அமெரிக்காவுக்கே முன்னுரிமை' கொள்கை சர்ச்சைக்குரியது. இது ஒரு அரசியல் முழக்கம். தன்னிறைவு என்பது பாராட்டத்தக்க நடவடிக்கை, ஆனால் அது ஆளும் கட்சியின் அரசியல் நோக்கத்தில் இருந்து விலகி இருந்தால் தான் பயனுள்ளதாக இருக்கும்".

பட மூலாதாரம், Getty Images
பழைய மாடல் சுதேசி ஒத்துவராது என்று கூறுகிறார் ரஞ்சிதா பராட்கர். அவரைப் பொறுத்தவரை இது எப்போதும் வெளிநாட்டு முதலீட்டிற்கு எதிரானது. "நாட்டிற்குள் பொருட்களை உருவாக்குவது சிறப்பான அம்சம் தான். இன்று இந்தியா தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறியுள்ளது, பொருட்களின் தரம் மற்றும் விலையில் போட்டி நிலவுவது நல்லது. எனவே உள்நாட்டு உற்பத்தியை மையமாக கொள்ளும் பொருளாதாரத்தின் புதிய வடிவம் வித்தியாசமாக இருக்கும். ஆனால், இதில் இந்துத்துவ சித்தாந்தம் கலந்துவிடுமோ என்றுதான் அச்சமாக இருக்கிறது. அதுமட்டும் நடக்கக்கூடாது" என்று அவர் கூறுகிறார்.
நம் நாட்டில் தேவையான ஆற்றலும் திறமையான உழைப்பும் போதுமான அளவு உள்ளது. "இதை சரியாகப் பயன்படுத்த வேண்டும்." "நாம் அச்சப்படவோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களை எதிர்க்கவோ கூடாது, அந்நிய முதலீட்டை தவிர்க்கவும் வேண்டியதில்லை" என்றும் ரஞ்சிதா ஆலோசனை கூறுகிறார்.
புதிய இந்தியாவில் இந்திய நிறுவனங்களின் தரம் மற்றும் விலைகள்

பட மூலாதாரம், Getty Images
உள்நாட்டு உற்பத்தி மற்றும் தன்னிறைவை ஆதரிப்பவர்கள் உற்பத்தி செலவுகள் குறைக்கப்படவேண்டும், அரசு வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும், நுகர்வுத் தேவையை குறைக்க வேண்டும் என்பது உட்பட பல விஷயங்களை வலியுறுத்துகின்றனர். "ஒரு குடும்பத்திற்கு ஒன்றுக்கு பதிலாக ஐந்து வாகனங்களுக்கான தேவை என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்படும் சோப்பைப் பயன்படுத்தினால், பல வகையான வெளிநாட்டு சோப்புகளுக்கான அவசியம் என்ன?" என்று கேள்வி எழுப்புகிறார் சுதேசி ஜாக்ரான் மஞ்சின் அருண் ஓஜா.
அவர் பல உள்ளூர் நிறுவனங்களை உதாரணமாக சுட்டிக் காட்டுகிறார். தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் குறைந்த விலையில் சானிட்டரி பேட் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர். பிபிசி, அவருடன் பேசியபோது, "பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள் இத்தனை ஆண்டுகளாக 10 சதவீத பெண்களிடம் மட்டுமே சானிட்டரி நாப்கின்களைக் கொண்டு சேர்க்க முடிந்த்து. ஆனால் எனது நிறுவனம் பெருமளவிலான பெண்களிடம் சானிடரி நேப்கின்களை கொண்டு சேர்த்துள்ளது" என்று தெரிவித்தார்.
அவரது வெற்றியின் முழக்கங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எதிரொலிக்க ஆரம்பித்தன. அக்ஷய் குமாரின் 'பேட்மேன்' திரைப்படம், அருணாசலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தி மலிவான மற்றும் தரமான பொருட்களை தயாரிப்பது, "உள்ளூர் சிந்தனை மற்றும் உலகளாவிய செயல்" என்பதுதான் திரைப்படத்தின் கருவாகும். இதை விளக்கும் அவர், "நான் எனது வணிகத்தை சிறு தொழிலைப் போலவே தொடங்கினேன்" என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
அருணாசலம் முருகானந்தத்தின் பெயர் மட்டும் உலகளவில் பரவவில்லை, அவரது தயாரிப்புகள் பல நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இதைவிட மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பெரிய அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் செல்லாத கிராமப்புறங்களிலும் அருணாசலம் முருகானந்தத்தின் உற்பத்தி இயந்திரங்கள் சென்றடைகின்றன.
கிராமப்புற வளர்ச்சி குறித்து பஞ்சாயத்து தலைவர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "தன்னிறைவு பெற்ற கிராமங்களின் அடிப்படையே வலுவான பஞ்சாயத்துகள் தான். பஞ்சாயத்தின் அமைப்பு வலுவாக இருந்தால்தான், ஜனநாயகம் வலுவாக இருக்கும். வளர்ச்சியானது அடித்தட்டைச் சேர்ந்த சாதாரண மக்களுக்கு பயனளிப்பதாக இருக்கும்" என்று கூறினார். ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைந்த குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை பிரதமர் உதாரணமாக குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
சீனாவிலிருந்து இந்தியாவுக்கு நிறுவனங்கள் திரும்புமா?
கொரோனா நெருக்கடிக்குப் பின்னர், சீனாவின் மீது கோபமடைந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அங்கிருந்து இந்தியாவுக்கு மாற்ற விரும்புகின்றன என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் தெரிவித்திருந்தார்.
டெல்லியில் உள்ள FORE School of Management கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் இந்தோ-பசிபிக் நிபுணர் ஃபசல் அஹ்மத் இந்த கூற்றை மறுக்கிறார். "நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றும் என்று நான் கருதவில்லை. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வர்த்தகப் போர் என்ற ஊகங்களின் அடிப்படையில் இவ்வாறான கருத்துகள் கூறப்படுகின்றன. ஆனால் இதுபோன்ற எதுவும் நடக்கவில்லை" என்பதே அவரது கருத்தாக இருக்கிறது.
உள்கட்டமைப்பு மற்றும் உயர் தொழில்நுட்பத்தில் இந்தியா சீனாவை விட மிகவும் பின்தங்கியிருக்கிறது என்று கூறுகிறார் ஃபசல் அஹ்மத். பெரிய அளவில் உற்பத்தி செய்வதும், தனது தொழில்நுட்பத்தை மேம்படுத்திக் கொண்டே இருப்பதும் சீனாவின் சிறப்பம்சம் என்பதால், பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து விலகிச் செல்வதற்கான வாய்ப்பு இல்லை என்பதே அவரது ஆணித்தரமான கருத்தாக இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் கொரோனா நெருக்கடி அனைத்தையும் மாற்றிவிட்டது என்கிறது சுதேசி ஜாக்ரான் மஞ்ச். "கடந்த 15-20 ஆண்டுகளாக, உலகப் பொருளாதாரம் சீனாவைச் சார்ந்திருக்கிறது. இப்போது பெரிய நிறுவனங்கள் தங்கள் நாடுகளின் அரசாங்கங்களிடமிருந்து சீனாவிலிருந்து வணிகத்தை அகற்றுமாறு அழுத்தம் கொடுக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் மற்ற நாடுகளை விட இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்."
இந்தியா தனது பொருளாதாரக் கொள்கைகளை மாற்றி, சுதேசி மாதிரிக்குத் திரும்ப முடிவு செய்தால், சீனாவில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்களில் கணிசமான அளவு இந்தியாவுக்கு வரும் என்று வாதிடுவது அர்த்தமற்றது.
கொரோனா நெருக்கடி உலகப் பொருளாதாரத்தை உலுக்கியது என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. இந்தியாவும் அதில் இருந்து தப்பிக்கவில்லை. மாற்றம் என்பது காலத்தின் தேவை, அது விருப்பம் அல்ல. இப்போது மாற்றத்தின் பாதை தீர்மானிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தான், நாட்டின் 135 கோடி மக்களின் பொருளாதார எதிர்காலம் அமையும்.

பட மூலாதாரம், Getty Images
உள்நாட்டு உற்பத்தியை மையப்படுத்தும் பொருளாதாரம் இந்தியாவை எந்த இடத்திற்கு கொண்டு செல்லும்?
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீவ் எச். ஹான்கேவின் கருத்து இது. அவர் இதை மின்னஞ்சல் மூலம் பிபிசி-க்கு அனுப்பினார்.
"ஒரு பொருளாதார சீர்திருத்தவாதியாக, பிரதமர் மோடி செயல்படுவதாகக் தெரியவில்லை. அவரது ஆளுகையின் கீழ், நீதித்துறை மற்றும் சிவில் சேவையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதன் விளைவாக, இந்தியா ஊழல் அடுக்குகளில் சிக்கியுள்ளது, பொருளாதாரத் துறை வீழ்ச்சியடைந்திருக்கிறது, வாராக்கடன் அதிகரித்திருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யப்படவில்லை. அவரது பணவிலக்க நடவடிக்கையை யாரால் மறக்க முடியும்?"
"இந்தியாவில் சீர்திருத்தங்கள் இல்லாத நிலையில், மோதி தலைமையில் இந்திய துணைக் கண்டம், தனது பலத்தை விட குறைந்து செயல்படும் ஒரு பலவீனமான பிராந்தியமாகிவிட்டது. அதிகாரத்தில் இருக்கவும், தங்களது இந்து கருத்தியலை பெரிய அளவில் ஊக்குவிப்பதற்காகவும் பிரதமரும் பாஜகவும் சாதி, மத விரோதம் என்று மக்களை கொம்பு சீவி விடுகிறார்கள். நீண்டகாலமாக இந்தியாவில் தொடரும் Xenophobia அதாவது வெளிநாட்டு எதிர்ப்பை இப்போது அவர்கள் கையில் எடுக்க முடிவு செய்துள்ளார்கள்" என்று அவர் குறிப்பிடுகிறார்.
மேலும், "வெளிநாட்டு எதிர்ப்பை கையில் எடுத்ததால் மோதிக்கு என்ன கிடைத்தது? ஒரு பழைய மற்றும் வரவேற்பற்ற உள்நாட்டு பொருளாதார திட்டம். சுதேசி என்ற திட்டமானது இந்தியாவின் பேரழிவு தரும் ஐந்தாண்டு திட்டங்களின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அது இந்தியாவை எந்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும்? இந்திய துணைக் கண்டத்தின் பொருளாதார வளர்ச்சித் திறன் பாதியாகக் குறைக்கப்படும். அரசாங்கத்தின் அடக்குமுறை ஊக்குவிக்கப்படும். அரசியல் வர்க்கம் மற்றும் ஊழல் நிறைந்த இந்திய அதிகாரத்துவவாதிகளுக்கு அதிக அதிகாரம் கிடைக்கும். சுதேசி யோசனையானது, மோதி-பாஜகவின் அதிகார அபகரிப்பு கோட்பாட்டுடன் ஒத்துப் போகிறது. இந்த 'அதிகார அபகரிப்பு' மூலம், அனைத்தும் அரசியல்மயமாகும். அனைத்து விழுமியங்களிலும் அரசியல், அனைத்து முடிவுகளும் அரசியல் என அனைத்துமே அரசியல் மயமாக மாறிவிடும்.
அதுமட்டுமல்ல, இந்திய சுதேசிய கட்டளைகளைப் பின்பற்றாதவர்களுக்கு, தடியடிகளே மிஞ்சும்" என்று பேராசிரியர் ஸ்டீவ் எச். ஹான்கே தனது கருத்தை மின்னஞ்சலில் பதிவு செய்திருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












