இந்திய பொருளாதாரத்தை காக்க மே 3க்கு பின் அரசு என்ன செய்ய போகிறது? #BBCExclusive

பட மூலாதாரம், PUNIT PARANJPE
- எழுதியவர், ஜுகல் புரோஹித்
- பதவி, பிபிசி செய்தியாளர்
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதார சரிவை நிவர்த்தி செய்வதற்கு இந்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்து இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி சுப்பிரமணியன் பிபிசிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியவற்றை தொகுத்து கட்டுரை வடிவில் வழங்குகிறோம்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கையில் பணப்புழக்கம் இருக்க வேண்டும் எனும் நோக்கில் பொருளாதார உதவிகளை கொண்ட தொகுப்பு ஒன்றை இந்திய அரசு உருவாக்கி வருகிறது.
பொருளாதாரத்தில் உண்டாகி உள்ள பாதிப்புகளை சரி செய்யவும் பொருளாதார சரிவு காரணமாக உண்டாகி உள்ள வீழ்ச்சியிலிருந்து மீளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசின் உதவி எப்போது கிடைக்கும்? இந்த உதவித்தொகை எப்பொழுது வெளியாகும்? பண உதவி தேவைப்படுபவர்களுக்கு எப்பொழுது சென்று சேரும்? என்பது குறித்து அரசு இதுவரை தெளிவுபடுத்தவில்லை.

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

இதுகுறித்து விளக்கம் அளித்த கே.வி சுப்ரமணியன், "நாங்கள் அதை இப்பொழுதே அறிவிக்கிறோமா, இரண்டு மூன்று நாட்கள் கழித்து அறிவிக்கிறோமா, என்பது எந்தவிதமான தாக்கத்தையும் உடனடியாக ஏற்படுத்தப் போவதில்லை. அதற்கு காரணமே இந்த ஊரடங்கு நிலைதான். ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் எதுவும் தற்போது இயங்கவில்லை என்பது தயார்படுத்திக்கொள்ள அரசுக்கு ஓர் அவகாசத்தை அளித்துள்ளது. இந்த அவகாசத்தில் நன்கு திட்டமிட்டு முழுமையான ஓர் உதவித் தொகுப்பை அரசால் உருவாக்க முடியும்.
அதுமட்டுமல்லாமல் எங்களுக்கு ஏராளமான ஆலோசனைகளும் வருகின்றன. அவற்றையெல்லாம் பரிசீலனை செய்வதற்கும் எங்களுக்கு சற்று காலம் வேண்டும். ஊரடங்கு நிலை முடிந்து இயல்பு நிலை திரும்பும் பொழுது உதவி தொகுப்பு குறித்த திட்டங்கள் அனைத்தும் தயாராக இருக்கும்," என்று கூறினார்.
வேலைவாய்ப்பு பிரச்சனை
தற்போது பொருளாதார ரீதியாக சிரமப்படுபவர்கள் மற்றும் வேலை வாய்ப்பை இழந்தவர்கள் ஆகியோருக்கு எந்த வகையில் உதவிகள் வழங்கப்படும் என்பதற்கு சுப்ரமணியன் பின்வருமாறு பதிலளித்தார்.
"வேலைவாய்ப்பு என்பது இந்தியாவுக்கு மட்டுமான பிரச்சனை இல்லை. தற்போது அமெரிக்காவில் கூட வரலாறு காணாத அளவுக்கு வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்பட்டுள்ளன. 1918ஆம் ஆண்டு உலகில் உண்டான ஸ்பானிஷ் ஃபுளூ பெருந்தொற்று பரவல் காரணமாக ஏராளமான உயிரிழப்புகள் நடந்தன. எங்கெல்லாம் உயிர்கள் காக்கப்பட்டனவோ, அங்கெல்லாம்தான் இயல்பு நிலை திரும்பிய பின்பு வளர்ச்சி உண்டானது.
இத்தகைய சூழலில் பொருளாதாரம் பாதிக்கப்படுவது தவிர்க்க இயலாதது. ஆனால் இந்த ஊரடங்கு ஒருவேளை அமல்படுத்தப்படவில்லை என்றால் கூட பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து மக்கள் ஒதுங்கியே இருப்பார்கள். அப்பொழுதும் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு நிகழ்ந்திருக்கும். நீண்டகால அடிப்படையில் பார்ப்போமானால் எங்கெல்லாம் மக்கள் பாதுகாக்கப்பட்டு நலத்துடன் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இயல்பு நிலை திரும்பும் பொழுது பொருளாதார நிலைமையும் சீரடையும்," என்றார் சுப்ரமணியன்.

பட மூலாதாரம், Hindustan Times
அந்த சூழலிலும் பொருளாதாரம் சரியாகாவிட்டால் என்ன செய்வது என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். "மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ள சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு மார்ச் 26ஆம் தேதியன்று நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளோம்.
அதுமட்டுமல்லாமல் இன்னொரு முக்கியமான ஒன்றையும் நான் கூற விரும்புகிறேன். ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வங்கிக் கணக்கை சென்று சேர்க்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட கணக்குகளில் தற்பொழுது இருக்கும் பணம் சராசரியாக 15 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள், பருப்புகள் உள்ளிட்டவற்றை சமூகத்தின் கடைநிலையில் இருக்கக்கூடிய மக்களுக்கு நாங்கள் கொண்டு சென்று சேர்த்து விட்டோம் என்ற காரணத்தால் அரசு கொடுக்கும் உதவித்தொகையை தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து மக்கள் எடுக்கவில்லை. ஒருவேளை அவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தால் தங்கள் சேமிப்பு கணக்கில் இருக்கும் பணத்தை அவர்கள் எடுத்திருப்பார்கள்" என்றார்.
உணவு விநியோகத்தில் பாதிப்பு
கடுமையான சமூக விலகல் நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக உணவுப் பொருட்கள் விநியோகம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
போதிய அளவு உணவை பெறுவதில் தங்களுக்கு கடினமான சூழல் நிலவுவதாக புகார்களும் எழுந்துள்ளது பற்றியும் இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "நாம் சுமார் 140 கோடி மக்கள் வாழும் நாடு. இங்கு சில ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அது குறைவான எண்ணிக்கை என்று நாம் தவிர்த்துவிட முடியாது. எனினும் இவ்வாறு பத்தாயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூட அது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் மிக மிக சிறிய அளவுதான்" என்று அவர் கூறினார்.
பொருளாதாரத்தை சீர்செய்ய அடுத்த இலக்கு என்ன?
2024 ஆம் ஆண்டில் 5 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக இந்தியா மாற வேண்டும் என்றும் 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி தன்னுடைய அரசின் இலக்காக தொடர்ந்து தெரிவித்து வருகிறார்,
தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் இந்த இலக்குகளை எவ்வாறு பாதிக்கும் என்று பிபிசி தரப்பில் கேட்கப்பட்டது.
"இப்போதைய சூழலில் குறைவான பாதிப்புகளுடன் மீண்டு வருவதே நம்முடைய முதல் இலக்காக உள்ளது. எதுவும் நிலையற்றதாக இருக்கும் உலகில் சில நேரங்களில் இலக்குகளை சற்று மாற்றி அமைக்க வேண்டும். தற்போது உடனடியாக செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தே நம்முடைய கவனம் இருக்க வேண்டும்" என்று சுப்பிரமணியன் அதற்கு பதிலளித்தார்.
கொரோனா வைரஸ் பெருத்தொற்று இந்தியாவை பாதிப்பதற்கு முன்பே மார்ச் 2020ல் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்து இருந்தது. கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இதுதான் குறைவான விகிதம். கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டு இருந்ததை காண முடிந்தது.
இந்திய அரசின் சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் 6 முதல் 6.5 சதவீதம் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே சரிந்து வரும் பொருளாதாரத்தால் தற்பொழுது உள்ள பாதிப்புகளிலிருந்து மீண்டும் எந்த அளவுக்கு எதிர்கொள்ள முடியும் என்று பிபிசி கேள்வி எழுப்பியது.

"நிலைமை அவ்வளவு ஒன்றும் மோசமானதாக இல்லை. சொல்லப்போனால் பிப்ரவரி மாதம் முதலே பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி அடைவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இந்தியாவின் நிதித்துறை பிற துறைகளை விட சற்று மோசமாக இருப்பதை நம்மால் காண முடிந்தது. அதற்கு காரணம் வாராக் கடன்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு முறையற்ற வகையில் கொடுக்கப்பட்ட கடன்கள் ஆகியவையே. ஆனாலும்கூட நீண்டகால அடிப்படையில் நாம் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் நிதித்துறையில் உள்ளன. வளர்ந்த நாடுகளைவிட வளரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடுகள் சற்று குறைவாகவே உள்ளன. எனினும் கோவிட்-19 பரவலுக்கு முந்தைய நிலையில் இந்திய பொருளாதாரம் எதிர்கொண்டிருந்த பாதிப்புகள் நாம் மீண்டு வருவதற்கு பெரும் தடையாக இருக்காது" என்று அவர் பதிலளித்தார்.
மே 3க்கு பிறகு ஊரடங்கு நீக்கப்படுமா?
மே 3ஆம் தேதிக்கு பிறகு தற்பொழுது அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு நீக்கப்படுமா அல்லது மேலும் நீடிக்குமா என்று இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரிடம் கேட்கப்பட்டது.
எந்தெந்த பகுதிகளில் எல்லாம் பாதிப்பு அதிகமாக இருக்கிறது மற்றும் குறைவாக இருக்கிறது என்பதை கண்டறிந்து ஊரடங்கு படிப்படியாக தளர்த்த வேண்டும். அதிக பாதிப்பு உள்ள இடங்களில் இன்னும் நீண்டகாலம் ஊரடங்கு தேவைப்படும். ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள வேண்டிய தேவை இருக்கும் தொழில்கள் மற்றும் துறைகள் மீண்டும் இயங்குவதற்கு சற்று காலம் காத்திருக்க வேண்டும்.
சமூக விலகலை நாம் கடுமையாக கடைபிடிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பொருளாதாரத்துக்கு அதிக அளவு பங்கு அளிக்கும் துறைகள் எவை என்பது கண்டறியப்பட்டு அதற்கு ஏற்றவகையில் அவற்றின் முடக்கநிலை நீக்கப்படும் என்று கே.வி சுப்ரமணியன் பதிலளித்தார்.
பிற செய்திகள்:
- 'வேற்று கிரக வாசிகள்' - விவரிக்க முடியாத நிகழ்வுகளின் காணொளிகளை வெளியிட்ட அமெரிக்கா
- இளம் வயதில் நடிப்புத்துறையில் இருந்து விலக நினைத்த இர்ஃபான் கான் சாதித்தது எப்படி?
- "தமிழகத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும்": முதலமைச்சர் பழனிசாமி
- கிம் ஜாங் உன்னுக்கு அடுத்து வடகொரியாவுக்கு யார் தலைமை ஏற்பார்?
- கொரோனா வைரஸை எதிர்த்து போராடிய மருத்துவர் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












