கபசுர குடிநீர் வழங்கும் தமிழக அரசு - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மட்டுமே என விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 27 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் சென்னை நகரில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 400ஆக உயர்ந்துள்ளது.
தமிழக அரசின் சுகாதாரத் துறை வியாழனன்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி, புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள 54 பேரையும் சேர்த்து, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1683ஆக உயர்ந்துள்ளது. 90 பேர் குணமடைந்து மருத்துமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, மாநிலத்தில் 752 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் தமிழகத்தில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சிறிய அளவில் குறைந்துள்ளது. புதன்கிழமைவரை 948 பேர் சிகிச்சைபெற்று வந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 908ஆகக் குறைந்துள்ளது.
வியாழனன்று 2 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. 23,303 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 106 பேர் அரசின் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்கியுள்ளனர்.
கொரோனா நோய் இருக்கலாம் என்ற அறிகுறிகளுடன் 1787 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் செய்யப்படும் சோதனைகளின் அளவு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், இன்று 6,954 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 65,977 மாதிரிகள் தமிழகத்தில் சோதிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்று இல்லாமல் இருந்த தர்மபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு இந்நோய் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
கபசுர குடிநீர் வழங்க திட்டம்
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்புக் குடிநீரை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.
இந்தத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் துவங்கி வைத்தார். கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் இந்திய மருத்துவ முறைகளில் உள்ள மருந்துகளை ஆராய்வதற்காக 11 மருத்துவ வல்லுனர்களைக் கொண்ட குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்திருந்தது.
இந்தக் குழுவில் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த மூத்த மருத்துவர்கள் இடம்பெற்றிருந்தனர். இது தொடர்பாக பல ஆலோசனைக் கூட்டங்கள் நடந்த நிலையில், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ முறைகளில் கூறப்படும் நோய்த் தடுப்பு மருந்துகளை ஆராய்ந்து பயன்படுத்த, ஆரோக்யம் என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு வடிவமைத்தது.

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
அதன் ஒரு பகுதியாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீர் சூரணங்களை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு இன்று துவங்கியுள்ளது.
Sorry, your browser cannot display this map
இதன்படி சென்னையில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் (Containment Zone) ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் சூரணங்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது கொரோனா நோய்க்கான சிகிச்சையல்ல என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவே இந்த சூரணம் வழங்கப்படுவதாகவும் மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

மாநில அரசு உருவாக்கியுள்ள மருத்துவர் குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர் கு. சிவராமன், கபசுர குடிநீர் தொடர்பாக பிபிசிக்கு அளித்திருந்த நேர்காணலில், "இந்த மருந்தில் 15 மூலிகைகள் இருக்கின்றன. இவை, சளி, மூச்சு இரைப்பு, காய்ச்சல், தொண்டைவலி ஆகியவற்றைக் குறைக்கக்கூடிய மூலிகைகள். ஆகவேதான் இந்த மருந்தை கொடுக்கலாம் என அரசுக்குப் பரிந்துரை செய்தோம். சுவாச மண்டலக் கிருமிகளை எதிர்க்க உடம்பில் ஒரு ஆற்றல் இருக்கிறது. ஒருவேளை அந்த ஆற்றலை அதிகபடுத்த இந்த மருந்து பயன்படலாம். ஏன் பயன்படலாம் என்று சொல்கிறோம் என்றால், இந்த மருந்து ஏற்கனவே சுவாச மண்டல நோய்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். இதில் உள்ள ஒவ்வொரு மூலிகையின் பயன் குறித்து ஆய்வுகள் நடந்திருக்கின்றன" என்று தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












