கொரோனா வைரஸ்: விழுப்புரம் வடநாட்டு கோவிட்-19 நோயாளி காணாமல் போனது எப்படி? - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா தொற்று இல்லை என்று தவறுதலாக விடுவிக்கப்பட்டு, காணாமல் போய், மீண்டும் வட இந்திய கொரோனா நோயாளி முதலில் எப்படி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார், பிறகு எப்படி விடுவிக்கப்பட்டார் என்ற தகவல்கள் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளன.
டெல்லியை சேர்ந்த நிதின் ஷர்மா என்ற அந்த 30 வயது நபர், தனது பர்ஸ், செல்பேசி ஆகியவற்றை திருட்டுக் கொடுத்துவிட்டு, பசியோடும், பல நாள் காய்ச்சலோடும், உதவி கேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தபோது, அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதற்குப் பதிலாக விழுப்புரம் செஞ்சிலுவை சங்க அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டார் என்றும், செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் ஓரிரு நாள்கள் தங்கவைக்கப்பட்ட பிறகு, செங்சிலுவை சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்துக்குப் பிறகே அவரை பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முடிந்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பே அவர் போக்கிடம் தெரியாமல் விழுப்புரத்தில் பல இடத்தில் தங்கி, பலரோடும் பழகியும் இருந்தார். இவ்வளவு போராட்டத்துக்குப் பிறகு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர்தான், கொரோனா தொற்று இல்லை என்ற தவறான பரிசோதனை முடிவால் விடுவிக்கப்பட்டார்.
பிறகு அவரைப் பிடிப்பதற்கு நீண்ட போராட்டமும், ஒரு வார கால இடைவெளியும் தேவைப்பட்டது.
செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட பிறகு அவருடன் உரையாடி, அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டியதோடு, போராடி அவரை மருத்துவமனைக்கு அனுப்புகிற பணியில் ஈடுபட்ட செஞ்சிலுவை சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் சி.உமாபதி பிபிசி தமிழிடம் இது பற்றிக் கூறியது:
“உதவி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றவரை அதிகாரிகள் செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அவர் அங்கிருந்து தொடக்கத்தில் சில முறை தமது தேவைகளுக்கு வெளியே சென்றார். ஆனால், அவருக்கு காய்ச்சல் இருப்பது தெரிந்ததும் அலுவலகத்தில் உள்ள விருந்தினர் அறையில் அவரை அடைத்துவைத்து, அவருக்குத் தேவையான உணவு, உடை, தண்ணீர் ஆகியவற்றை ஏற்பாடு செய்தோம்.
அவரிடம் நேரடியாக உரையாடாமல் அவரிடம் ஒரு செல்போன் கொடுத்துவிட்டு தொலைவில் இருந்து தொலைபேசி மூலம் உரையாடி அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டினோம். இதன் மூலம் அவரது பெயர், அவர் டெல்லியைச் சேர்ந்தவர் என்ற தகவலும், அவரைப் பற்றிய பிற தகவல்களும் கிடைத்தன.

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த அவர், ஒரு வேலைக்கான நேர்க்காணலில் கலந்துகொள்வதற்காக, டிசம்பர் 10-ம் தேதி புதுச்சேரி வந்ததாக அவர் தெரிவித்தார்.
புதுவை காலாப்பட்டில் ஒரு விபத்து சம்பந்தமாக கைது செய்யப்பட்ட அவர், சிறையில் இருந்த பிறகு மார்ச் 16-ம் தேதி விடுவிக்கப்பட்டார் என்றும் பிறகு புதுவை கடற்கரையில் நான்கு நாள்கள் சுற்றித் திரிந்ததாகவும் அவர் தெரிவித்தார். பிறகு மார்ச் 21ம் தேதி விழுப்புரம் வந்து சேர்ந்த அவர், டெல்லி செல்வதற்கு ஏதாவது லாரி கிடைக்குமா என்று விசாரித்துக் கொண்டு ஆர்.கே. மோட்டார்ஸ் என்ற நிறுவனம் அருகே சென்றவர் அங்கு இரண்டு பேருடன் தங்கியுள்ளார்.
தமது பர்ஸ், செல்போன் ஆகியவை காணாமல் போன நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் உதவி கேட்பதற்காக ஆட்சியர் அலுவலகம் சென்றவரை, அதிகாரிகள் ஏப்ரல் 5ம் தேதி செஞ்சிலுவை சங்க அலுவலகத்துக்கு கொண்டுவந்து விட்டனர். ஆட்சியர் அலுவலகம், போலீஸ், பொது சுகாதாரத் துறை என பல அலுவலகங்களை பலமுறை தொடர்புகொண்டு போராடிய பிறகு அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 6ம் தேதி சேர்க்கப்பட்டு, அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால், பரிசோதனை முடிவில் நேர்ந்த குழப்பத்தால் அவர் விடுவிக்கப்பட்டார்” என்றார் உமாபதி.

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
- வைரஸுக்கு ஏற்ற சூழ்நிலையும், அதை எளிதில் கட்டுப்படுத்தும் வழிகளும்
- கோடைக் காலம் வந்தால் கொரோனா வைரஸ் சாகுமா?

ஏற்கெனவே, கையில் செல்போன், பணம் இல்லாமல் இருந்த அவர், காணாமல் போன பிறகு அவரைக் கண்டுபிடிப்பது சிரமமாக ஆகிவிட்டது என்று கூறிய உமாபதி, செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு அருகே கண்டுபிடிக்கப்பட்ட அவர் அவ்வளவு தூரம் நடந்தே சென்றிருக்கவும், வழியில் பலரைத் தொடர்புகொண்டிருக்கவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்தார்.
மருத்துவமனையால் அவரே விடுவிக்கப்பட்ட நிலையில் நிதின் ஷர்மா மீது ஏன் வழக்குத் தொடரப்பட்டது என்று கேட்டபோது, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், “நான்கு பேர் அப்படி விடுவிக்கப்பட்டனர். மற்ற மூவரும் அறிவுறுத்தியபடி தங்கள் முகவரியிலேயே இருந்தபோது இவர் மட்டும் தப்பிச் சென்றதால்தான் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது” என்றார். விழுப்புரத்தில் அவர் எந்த முகவரியில் தங்கியிருந்திருக்கவேண்டும் என்று கேட்டபோது, “ஆர்.கே.மோட்டார்ஸ் அருகில் அவர் தங்கியிருந்தார். அங்கேயே அவர் இருந்திருக்கவேண்டும்” என்றார் ஜெயக்குமார்.

பட மூலாதாரம், Getty Images
இது போல பிற மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை தங்க வைப்பதற்கு விழுப்புரத்தில் முகாம்கள் உள்ளனவா என்று கேட்டபோது, அப்படி மூன்று முகாம்கள் இருப்பதாகத் தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை. அப்படி இருக்கும்போது அவர் ஏன் வெளியே விடப்பட்டார் என்பதற்கு விடையில்லை.
செஞ்சிலுவை சங்கத்தில் அவர் தங்கவைக்கப்பட்டதைக் கேட்டபோது, அங்கு அவரோடு தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்குத் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றார் ஆட்சியர்.

இப்படி பிற மாநிலத்தவர் ஒருவருக்கு காய்ச்சல் இருப்பதாகத் தெரிந்தால் அவர்களைப் பற்றி தகவல் தெரிவிப்பதற்கும், அவர்களைக் கையாள்வதற்கும் வழிமுறைகள் நடைமுறையில் உள்ளனவா என்று கேட்டபோது, அப்படிப்பட்ட நடைமுறைகள் இருப்பதாகவும், கட்டுப்பாட்டு அறை அதற்காக செயல்படுவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
இப்படி நடைமுறைகள் இருக்கும்போது, அவரை மருத்துவமனைக்கு அனுப்புவதில் நேர்ந்த தாமதமும், பிறகு தவறான பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டதும் கொரோனா நேர்வுகளைக் கையாள்வதில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள குறைபாடுகளை சுட்டுகின்றனவா?

பட மூலாதாரம், Getty Images
மீண்டும் ஒருவாரப் போராட்டத்துக்குப் பிறகு அவரை மீண்டும் கண்டுபிடித்ததன் பின்னணியில் போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளின் விடா முயற்சி இருந்துள்ளது.
ஆனால், செங்கல்பட்டில் கண்டுபிடிக்கப்பட்ட நிதின் ஷர்மா, தொற்று உறுதி செய்யப்பட்ட கொரோனா நோயாளியாக இருந்தபோதும், அவர் ஏன் மீண்டும் விழுப்புரம் வரை அழைத்துவரப்பட்டார், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே சேர்க்கப்பட்டிருக்கலாமே என்ற கேள்விக்கும் விடையில்லை.












