தமிழகத்தில் பிரசவித்த தாய்க்கு கொரோனா; சிசுவுக்கு பாதிப்பு இல்லை

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் புதிதாக 38 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் இந்நோய்த் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை இதன் மூலம் 1242ஆக உயர்ந்துள்ளது. மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான தினசரி செய்தியாளர் சந்திப்பில் இந்தத் தகவலை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
நீண்ட நாட்களாக சுகாதாரத் துறை செயலரோ, தலைமைச் செயலரோதான் செய்தியாளர்களைச் சந்தித்துவந்த நிலையில், இன்று மீண்டும் சுகாதாரத்துறைத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இதுவரை மாநிலத்தில் 21994 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும் 17,855 பேர் சோதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுவரை 1204 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 38 பேருக்கு அந்நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 118 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் இன்று மட்டும் 37 பேர் வீடு திரும்பியுள்ளனர்" என்று தெரிவித்தார்.

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
- வைரஸுக்கு ஏற்ற சூழ்நிலையும், அதை எளிதில் கட்டுப்படுத்தும் வழிகளும்
- கோடைக் காலம் வந்தால் கொரோனா வைரஸ் சாகுமா?

28 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருத்தலை இதுவரை 72,326 பேர் முடித்துள்ளனர். தற்போது 34,841 பேர் வீட்டிலும் 107 பேர் அரசின் தனிமைப் படுத்தும் முகாம்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நோய் அறிகுறிகளுடன் 1876 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். நேற்றுவரை 12 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இன்று மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஒருவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் ஒருவர் தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டிருந்தனர்.
தற்போது தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 3,371 வென்டிலேட்டர்களும் 29,074 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளும் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டிலேயே சென்னையில்தான் கொரோனா நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் 214 பேர் இருக்கின்றனர்.
"உலகில் கொரோனா பரவ ஆரம்பித்த உடனேயே நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாடுதான் நடவடிக்கையில் இறங்கியது. சுமார் 146 கோடி ரூபாய் அளவுக்கு மருந்துகள் ஆர்டர் செய்யப்பட்டன. அதற்குப் பிறகு மேலும் 204.85 கோடி ரூபாய் அளவுக்கு மருந்துகள் வாங்க கொள்முதல் ஆணை வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் போதுமான அளவுக்கு முகமூடி, என் 95 முகமூடி, பாதுகாப்பு ஆடை ஆகியவை உள்ளன. மாநிலத்தில் ஒரு நாளைக்கு 80,000லிருந்து ஒரு லட்சம் வரை மூன்றடுக்கு முகமூடி தேவையென்றால், 2 லட்சம் முகமூடிகள் அளவுக்கு சப்ளை செய்கிறோம். தினமும் 15,000 பாதுகாப்பு ஆடைகளை வழங்குகிறோம்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் விஜயபாஸ்கர்.
"தற்போது தமிழ்நாட்டில் 26 கொரோனா சோதனை மையங்கள் இருக்கின்றன. இவற்றில் 16 சோதனை மையங்கள் அரசு மருத்துவமனைகளிலும் 10 சோதனை மையங்கள் தனியார் மருத்துவமனைகளிலும் செயல்படுகின்றன. அரசு மருத்துவமனைகளில் உள்ள சோதனை மையங்களில் ஒரு நாளைக்கு 270 சோதனைகளைச் செய்ய முடியும். தமிழ்நாட்டில் உள்ள இருபத்தி ஆறு சோதனை மையங்களிலும் சேர்த்து ஒரு நாளைக்கு 5320 பேரை நாம் சோதனை செய்ய முடியும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக சோதனை மையங்கள் உள்ளன" என அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.
சோதனை கிட்களைப் பொறுத்தவரை ஒரு லட்சத்து 35 ஆயிரம் சோதனை கிட்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அதில் ஒரு லட்சம் கிட்கள் கைவசம் இருப்பதாகவும் மத்திய அரசிடமிருந்து 20 ஆயிரம் கிட்கள் வந்துள்ளதாகவும் டாடா நிறுவனம் 40,000 கிட்களைத் தந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டிலேயே மருத்துவ உபகரணங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக 30 சதவீத மூலதன மானியம், 100 சதவீதம் பத்திர பதிவுக் கட்டண விலக்கு, முதலீட்டில் 6 சதவீத வட்டி மானியம் ஆகிய சலுகைகளை அறிவித்திருப்பதால் 300க்கும் மேற்பட்ட மருத்துவ சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், வென்டிலேட்டர் உள்ளிட்ட உபகரணங்களின் உற்பத்தியில் ஈடுபட முன்வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவர்களுக்கு தொடர்ந்து தொற்று ஏற்படுவதற்கு என்ன காரணம் எனக் கேட்டபோது, பாதுகாப்பு உடையை எப்படி அணிவது, அகற்றுவது என்றெல்லாம் பயிற்சியளிக்கப்படுவதாகவும் மருத்துவப் பணியாளர்கள் சரியான விதிமுறைகளையே பின்பற்றுவதாகவும் ஈரோடு, திருநெல்வேலி, கரூர், வேலூர் போன்ற இடங்களில் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுவதாகவும் இதுவரை பிரச்சனை ஏதும் ஏற்படவில்லையென்று தெரிவித்தார்.
ஒரு மாவட்டத்தில் 15 நோயாளிகளுக்கு மேல் இருந்தால் அது ஹாட் ஸ்பாட் எனக் கருதப்படும் எனவும் தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு விகிதம் 1.9 சதவீதம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் கருவுற்றிருந்த பெண்ணுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டிருந்தது. இன்று அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்யப்பட்டது. குழந்தைக்கு கொரோனா இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












